இந்தியாவின் உற்பத்தி துறை வளர்ச்சி சரிவு ஏற்றுமதி ஆர்டர்கள் குறைந்து வருவதால், ஆகஸ்டு மாதத்தில் இந்தியாவின் உற்பத்தி துறை வளர்ச்சி ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிவடைந்துள்ளது என எச்.எஸ்.பீ.சி. நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

வெளிநாடுகளில் தேவைப்பாடு குறைந்து வருவது மற்றும் ஆகஸ்டு மாத தொடக்கத்தில் வடமாநிலங்களில் ஏற்பட்ட மின்தடை போன்ற காரணங்களால் உற்பத்தி துறையின் வளர்ச்சி குறைந்துள்ளது என எச்.எஸ்.பீ.சி.யின் பொருளியல் வல்லுனர் லீஃப் எஸ்கஸன் தெரிவித்துள்ளார்.

கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. இந்நிலையில் ஐரோப்பாவில் பொருளாதார வலிமையில் முன்னிலை வகிக் கும் பிரான்ஸ் நாட்டிலும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஜுலை மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 14.8 சதவீதம் சரிவடைந்தது. தொடர்ந்து மூன்று மாதங்களாக ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்து வருகிறது.

இந்நிலையில் உள்நாட்டில் கடனிற்கான வட்டிவீதம் அதிகமாக உள்ளதால் கார்கள், நுகர் வோர் சாதனங்கள் போன்றவற்றின் விற்பனை குறைந்து வருகிறது. மேலும் நிறுவனங் களும் விரிவாக்க நடவடிக்கைகளில் மேற்கொள்ளும் முதலீட்டை குறைத்து வருகின்றன. இதுபோன்ற காரணங்களால் சிமெண்டு, உருக்கு பொருள்கள், நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட உற்பத்தி துறையின் வளர்ச்சி வேகம் குறைந்து வருகிறது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜுன்) நாட்டின் உற்பத்தி துறையில் 0.2 சதவீதம் மட்டுமே வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் இந்த வளர்ச்சி 7.3 சதவீதமாக இருந்தது. பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்காட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுவதில், இத்துறையின் பங்களிப்பு 16 சதவீதமாக உள்ளது. இதன் காரணமாக முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5.5 சதவீதமாக குறைந்துள்ளது.

Leave a Reply