நாட்டு நலன் கருதி சீன – இந்திய ராணுவ கூட்டுப்பயிற்சியை கைவிடவேண்டும் என இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கேட்டுக்கொண்டுள்ளார் .

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்,”
சீனா நமது அண்டை நாடு என்பது உண்மை. ஆனால் அது என்றுமே நமக்குத் தொல்லை

தரும் நாடுகளின் பட்டியலில் இருந்து வருகிறது. சீனாவால் நமது நாடு இழந்தது ஏராளம். இன்றும் இழந்து கொண்டுதான் இருக்கிறோம். எனவே சீன-இந்திய கூட்டு ராணுவப் பயிற்சிக்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

சீனா நம் பாரதத்தின் ஒரு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தைத் தன்னுடைய பிரதேசமாக அறிவித்தது, அருணாசலப் பிரதேசத்திற்குப் பாரதத்தின் பிரதமர், ஜனாதிபதி போன்றவர்கள் செல்லும்போது அது கண்டனம் தெரிவிக்கிறது; அதற்கு மத்திய அரசும் வழக்கம்போல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்கதையாகி வருகிறது.

மேலும், அருணாசலப் பிரதேசத்தை எல்லைப் பிரச்னையாக்கி வருகிறது சீனா.மேற்கு வங்கக் காடுகளில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆயுதங்களை வீசியது சீனா என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது பயங்கரவாதத்தைப் பாரதத்தில் கட்டவிழ்த்துவிட மேற்கொண்ட நடவடிக்கையாகும். இன்றும் பாரதத்தில் முக்கிய அச்சுறுத்தலாக இருந்து வரும் மாவோயிஸ்ட்களுக்குச் சீனா ஆயுத உதவி செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா-இந்தியா போர் முடிந்த பிறகு பாரதத்தின் பல லட்சம் சதுர கி.மீ. நிலப்பரப்பைச் சீனா ஆக்கிரமித்தது. ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகும் அது அந்த இடங்களை விட்டுக்கொடுக்கவில்லை. இது சீனா நமக்குச் செய்த துரோகம்.சீனாவின் குள்ளநரித் தந்திரத்தால் நமது நட்பு நாடாக இருந்த நேபாளம், மியான்மர் (பர்மா), இலங்கை போன்ற நாடுகளின் பார்வை மாறியுள்ளது. உலகின் ஒரே இந்து நாடான நேபாளத்தை மாவோயிஸ்டுகள் அடாவடியால் மாற்றி கைப்பற்ற வைத்தது சீனாவின் கை. அதன் பிறகு நேபாளம் இந்து நாடு என்ற நிலையை மாற்றியது.

பாரதத்திற்கும் நேபாளத்திற்கும் இடைவெளியை ஏற்படுத்தியது.இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடைபெற்ற போரில் சீன ராணுவத்தின் உதவியால்தான் விடுதலைப்புலிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் அங்கு நடந்த அத்துமீறலிலும் சீனாவின் பங்கு உள்ளது.பாரதத்திற்குச் சொந்தமான காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள இடத்தைத் தனதாக்கிய சீனா அங்கு ராணுவ நிலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காஷ்மீர் பகுதியிலிருந்து சீனா வர விரும்புகிறவர்களுக்கு பாஸ்போர்ட், விசா தேவையில்லை, எல்லையில் ஒரு சீட்டு கொடுக்கப்படும், அதுபோதும் என்று அறிவித்தது. அதனை இந்திய அரசு கடுமையாக எதிர்த்தது.பாரதத்தின் கடல் எல்லைகளில் ராணுவ நிலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை திரிகோணமலையிலும் ராணுவ மையம் அமைக்க அந்நாடு அனுமதி அளித்துள்ளது.இப்படியாக பாரதத்தைச் சுற்றி ராணுவ நிலைகளை ஏற்படுத்தி நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வியாபாரம் என்ற பெயரில் கள்ளத்தனமாக தடைசெய்யப்பட்ட மருந்துகள், ரசாயனப் பொருட்களை இந்தியாவிற்குள் கொண்டு வந்து கொட்டுகிறது! இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க மட்டமான பொருள்களைக் குறைந்த விலை என்ற மாய வலையில் இங்கு விற்பனை செய்து நமது மக்களைச் சுரண்டுகிறது. இதனால் நமது பொருளாதாரம் வீணடிக்கப்படுவதுடன், நமது தொழிற்துறை முன்னேற்றமும் படுபாதாளத்திற்குத் தள்ளப்படுகிறது.

வெளிநாட்டு ராணுவ மந்திரி இந்திய சுற்றுப்பயணத்தின்போது நமது நாட்டு ராணுவ வீரர்களின் பலிதானத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜெய் ஜவான் ஜோதிக்குச் சென்று மரியாதை செலுத்துவது மரபு. இந்த மரபையும் சீன ராணுவ மந்திரி கடைப்பிடிக்க மறுத்துள்ளார்.எனவே, சீனா நமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான நாடு, அந்த நாட்டு ராணுவத்தினர் நமது நாட்டு ராணுவ வீரர்களுடன் பயிற்சி பெறுவதால் நாட்டின் பாதுகாப்பிற்குப் பாதிப்பையும், ராணுவ ரகசியங்கள் கசிவதற்கும் வாய்ப்பாகவும் அமையும். இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு சீன ராணுவ கூட்டு நடவடிக்கையைக் கைவிட வேண்டும்.- இவ்வாறு அந்த அறிக்கையில் ராம.கோபாலன் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Tags:

Leave a Reply