கூடங்குளம் வன்முறை பரவுகிறது: பலர் காயம் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அணுஉலையில் எரி பொருள் நிரப்ப இந்திய அணு சக்தி ஒழுங்கு முறை ஆணையம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி தந்ததை தொடர்ந்து, முதல் அணுஉலையில் யுரேனியம் எரி பொருள் நிரப்பு வதற்கான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

இது கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடும் மக்கள் இயக்கத்தினர் இடிந்தகரையில் இருந்து பேரணியாக சென்று கூடங் குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடுவதாக அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து அந்த பகுதிகளில் 7000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தடையை மீறி பேரணியாக வருபவர்களை தடுத்து நிறுத்தி கைதுசெய்வதற்காக போராட்டக் காரர்கள் வரமுடிவு செய்திருந்த வைராவி கிணறு மற்றும் தாமஸ் மண்டபம் பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் கலவர தடுப்பு வாகனங்களுடன் தயாராக நின்றனர். ஆனால் போராட்டக்காரர்களோ, முதலில் திட்டமிட்டபடி சாலை வழியாக வராமல், இடிந்தகரை கடற்கரை வழியாக கூடங்குளம் அணுமின் நிலையத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.

இதனை போலீசார் சற்றும் எதிர்பார்க்கவில்லை.இதனைத்தொடர்ந்து வைராவி கிணறு மற்றும் தாமஸ் மண்டபம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கிழக்கு கண்காணிப்பு கோபுரம் இருக்கும் பகுதிக்கு 3 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து சேர்ந்தனர்.

அவர்கள் வந்த அதே நேரத்தில் போராட்டக்கார்கள் ஆயிரக்கணக்கானோர் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் தலைமையில் திரண்டுவந்தனர். அவர்களை தொடர்ந்து முன்னேறவிடாமல் போலீசார் தடுத்துநிறுத்தினர். இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் அணுமின்நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவே உள்ள கடற்கரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தனர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் .ஆனால் அவர்களோ அணுமின்நிலையத்தை மூடும் வரை தங்களது போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடங்குளம் அணுமின்நிலையம் அருகே கடற்கரையில் போராட்டக்காரர்கள் நடத்தும் முற்றுகை போராட்டம் 2-வது நாளாக இன்று தொடர்ந்த நிலையில், முற்றுகையை கைவிடுமாறு எஸ்.பி. விஜயேந்திர பிதரி கேட்டுக்கொண்டார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முற்றுகையை கைவிட மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றிருந்த சிலர் தடுப்பை மீறி அணுமின் நிலையத்தை நோக்கி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பிடித்து சென்றனர்.
இதனை பார்த்த கடற்கரையில் அமர்ந்திருந்த போராட்டக்குழுவினர் அவர்களை பிடித்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பி போலீஸ் தடுப்பை மீறி முன்னால் வர முயன்றனர். அப்போதுதான் அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டத் தொடங்கினர்..மேலும் அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டும் வீசப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் மீது போராட்டக்காரர்கள் முதலில் தாக்குதல் நடத்தியதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டு, அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.

போலீசாரின் தடியடியை தொடர்ந்து போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் பலர் படகில் ஏறி கடலுக்குள் புகுந்து தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் இந்த மோதலில் போலீசார் சிலருக்கும் காயம் ஏற்பட்டதாக காவ்ல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply