பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி செய்யக்கூடிய தகுதியை இழந்துவிட்டார் சென்னை அண்ணா சாலையில் பா.ஜ.க,வினர் நடு ரோட்டில் உட்கார்ந்து மறியல்போராட்டத்தில் ஈடுபட்டபோது தமிழக பார்வையாளர் முரளிதரராவ், இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 500 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் கட்டுப்பாடு, சில்லரை வனிகத்தில் அன்னிய முதலீடு ஆகியவற்றை கண்டித்து தமிழக பாரதீய ஜனதா கட்சி சார்பில் சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடந்தது . போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை 10 மணி முதல் பாரதீய ஜனதா தொண்டர்கள் வரத் தொடங்கினார்கள். பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய செயலாளரும், தமிழக பார்வையாளருமான முரளிதரராவ், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வந்ததும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுடன் சேர்ந்து பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில செயலாளர் வானதிசீனிவாசன், மாநில வர்த்தக அணி தலைவர் எம்.என்.ராஜா, சேத்துப்பட்டு ஜீவா, மகாத்மா காந்தியின் செயலாளராக பணியாற்றிய கல்யாணம், செய்தி தொடர்பாளர் பாலாஜி, மீனவர் அணி முன்னாள் தலைவர் சதீஷ், மாவட்ட தலைவர்கள் ஜெயசங்கர், ரவி, பிரகாஷ் உள்பட ஏராளமான பேர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் போட்டனர். பாரதீய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் நடு ரோட்டில் சமையல் செய்வதற்காக அடுப்பு, விறகு ஆகியவற்றை கொண்டு வந்திருந்தனர். ஆனால் இவர்களை நடு ரோட்டில் சமையல் செய்ய போலீசார் அனுமதிக்கவில்லை.

மறியலில் ஈடுபட்ட பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், முரளிதரராவ் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி ஜாம்பஜார் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு சமூகநலக்கூடத்தில் வைத்திருந்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். மறியல் போராட்டத்தால் அண்ணாசாலையில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

முன்னதாக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூட்டணி கட்சிகளை கூட மதிக்காமல் டீசல் விலையை உயர்த்தி இருப்பதையும், கியாஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடு ஏற்படுத்தியிருப்பதையும் கண்டிக்கிறோம். மக்கள் விரோத செயலில் ஈடுபடுவதால் எந்த நேரத்திலும் மத்திய அரசு கவிழும் சூழ்நிலையில்தான் உள்ளது. ஆகவே மத்திய அரசு விரைவில் கவிழும். இவ்வாறு இல.கணேசன் கூறினார்.

தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வீடுகளுக்கு தடையற்ற எரிவாய்வு கொடுக்கவேண்டும். எந்த காரணத்தைக்கொண்டும் அன்னிய நாட்டு வர்த்தகத்தை மீண்டும் நம்நாட்டுக்கு கொண்டுவந்து நமது நாட்டை அடிமைப்படுத்தக்கூடாது. பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி செய்யக்கூடிய தகுதியை இழந்துவிட்டார். எனவே அவர் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும். மத்திய அரசு தூக்கிவீசப்படவேண்டும். அதுவரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Tags:

Leave a Reply