பதவியாக இருந்த துண்டு இப்போது கொள்கையாக மாறிவிட்டது சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை தி.மு.க ஆதரிக்கும் இது அன்று!. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அப்போது அது குறித்து தி.மு.க முடிவெடுக்கும் இது மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்த பிறகு!.

திமுகவை பொறுத்த வரையில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கான அனுமதியை எதிர்க்கிறது. இருப்பினும் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தில் வாக்கெடுப்பு நடந்தால் மத்திய அரசை தி.மு.க ஆதரிக்கும். நாடாளுமன்ற வாக்கெடுப்பில் மத்திய அரசு தோல்வியடைந்து காங்கிரஸ் அரசு கவிழ்ந்தால் மதவாதசக்திகள் ஆட்சியை கைப்பற்றும் என்பதால் அந்நிய முதலீட்டு விவகாரத்தில் திமுக காங்கிரசை ஆதரிப்பது என்ற கசப்பான முடிவை மேற்கொண்டிருக்கிறது இது மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்தை சந்தித்த பிறகு இன்று.

உலக மகா நடிகன், டெசோ நாயகன் நமது திமுக தலைவர் கருணாநிதியின் அந்தர் பல்ட்டிதான் இது. நான்கு கோடி சிறு குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்க கூடிய இந்த விஷயத்தில் கசப்பை என்னவவோ சிறு வியாபாரிகளுக்கு தந்து விட்டு, வாயளவில் மட்டும் கசப்பை பேசி. திரை மறைவில் வரவுகளையும், வம்பு வழக்குகளையும் தனக்கு என்னவவோ சாதகமாகவே பேசியும் முடித்து விட்டார்.

தேவகௌடா, ஐ.கே.குஜரால் , காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தை, கொங்கு நாடு முன்னேற்றக்கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி என எந்த தனிப்பட்ட கொள்கையும் இல்லாமல் பதவி கிடைத்தால் யாருடனும் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்ற ஒரே கொள்கையுடன் செயல்படும் இவர் மதவாதத்தை பற்றி பேசலாமா?. கட்சியின் பெயரிலேயே அப்பட்டமாக மதத்தை திணித்துள்ள (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) கட்சிகளுடன் எல்லாம் கூட்டணி வைத்து கொண்டு மதவாதத்தை பற்றி பேசலாமா?.

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவில்லை, FDI-க்கு எதிராகத்தான் ஒட்டு எடுப்பு நடக்க உள்ளது. அப்படி இத்தீர்மானம் தோற்றால் FDI கிடப்பில் போடப்படும் ஆட்சி கவிழாது அவ்வளவுதான். சர்க்காரியா புகழ் விஞ்ஞான முறையில் ஊழல் செய்ய தெரிந்தவறுக்கு இந்த அடிப்படை உண்மை கூட தெரியாதா என்ன?,

1998 ல் மத்தியில் பதவியேற்ற 13 மதத்திலேயே வாஜ்பாய் அரசு கொள்கையில் சமரசம் செய்துகொள்ளததால் கவிழ்ந்தது. ஆனால் 13 மாதங்கள் கூட ஆயுள் இல்லாத அரசுக்குகாக மக்களின் நலனை வாய் கசப்புடன் விட்டுகொடுக்கும் இவரது கொள்கையை என்னவென்று சொல்வது..

அப்படியே ஆட்சி கவிழ்ந்தால் தான் என்ன? இலங்கை தமிழனை காப்பாற்றாத ஆட்சி. நான்கு கோடி சிறு வியாபாரிகளின் பிழைப்பில் மண்ணை போடும் ஆட்சி . மக்களுக்கு விலைவாசி உயர்வு , வேலையில்லா திண்டாட்டம் , ஊழல் போன்றவற்றை மட்டுமே பரிசாக தந்த ஆட்சி கவிழ்ந்தால்தான் என்ன?.

அண்ணா பதவியை தோளில் கிடக்கும் துண்டாக கருதினார் , ஆனால் இவரோ கொள்கையை தோளில் கிடக்கும் துண்டாக கருதுகிறார். துண்டு என்னவோ தொழில்தான் கிடக்கிறது ஆனால் பதவியாக இருந்த துண்டு இப்போது கொள்கையாக மாறிவிட்டது அவ்வளவுதான்.

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply