நரேந்திரமோடி குறித்து தவறான தோற்றத்தை வெளியே சித்தரிக் கிறார்கள். ஆனால் அந்த மாநிலத்தை சேர்ந்த மக்கள், அந்த மாநிலத்தை நேரில் பார்த்தவர்கள், மோடியோடு பழகியவர்கள் இதை ஏற்றுகொள்ள மாட்டார்கள். அவர் குஜராத்தின் மீது அளவு கடந்தபாசம் வைத்திருக்கிறார். எத்தனை அரசியல் புயல்கள் வீசினாலும் நரேந்திர

மோடி என்ற இரும்பு மனிதரை வீழ்த்தி விட முடியாது என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது ; குஜராத் ஒரு காலத்தில் கலவர பூமியாக காட்சியளித்தது. ஆனால் அவரது ஆட்சியில் கலவரங்கள் இல்லை. யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். மதத்தின் அடிப்படையில் யாரையும் அவர் பிரித்து பார்ப்பதில்லை. எல்லோரும் வளர்ச்சி அடைந்தால்தான் மாநிலம் முன்னேறும் என்று அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடுகிறார்.

கேசுபாய் பட்டேலை பிரித்ததும் பட்டேல் சமூகத்தின் ஓட்டை பிரித்துவிடலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு கண்டன. ஆனால் அந்த சமூக ஓட்டு சிதறவில்லை. சாதி, மத அடிப்படையில் அந்த மாநிலத்தில் யாருக்கும் சலுகை காட்டுவதில்லை. கடந்த முறை நான் பிரசாரத்துக்கு சென்றபோது இருந்த ஆதரவை விட இப்போது ஆதரவு பெருகி இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது.

குஜராத்தின் வளர்ச்சி ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. நர்மதை ஆற்று தண்ணீரை பல பகுதிகளுக்கு திருப்பி விட்டுள்ளனர். புதிய சாலைகள், ஆயிரக்கணக்கில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் விவசாயமும் செழிக்கிறது. நிலத்தடி நீரும் காக்கப்படுகிறது. 2001-க்கு முன்பு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு லாரிகளில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. இன்று அந்த நிலை இல்லை.

விவசாயத்துக்காக 15 லட்சம் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இலவசம் கிடையாது. சூரியஒளி மின்உற்பத்தி, காற்றாலை மின்உற்பத்தி மூலம் தேவைக்கு அதிகமான மின்சாரம் உற்பத்தி வழங்கப்படுகிறது. தமிழகத்துக்கு 1000 மெகாவாட் மின்சாரம் வழங்க அந்த மாநிலம் தயாராக இருக்கிறது.

பல்வேறு தொழிற்சாலைகள் பல பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்பு பெருமளவில் பெருகி உள்ளது. 2001-க்கு முன்பு கல்வியை இடையில் நிறுத்தும் மாணவர்கள் 50 சதவீதத்துக்கு மேல் இருந்தனர். இப்போது கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்த நிலையை மாற்றி இருக்கிறார்கள்.

பெண் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறார்கள். ஒவ்வொரு விசயத்திலும் முதல்- மந்திரியாக இல்லாமல் மக்களில் ஒருவராக இருந்து அவரே நேரடியாக கவனம் செலுத்துகிறார். புதிய தொழில் நுட்பங்களை பழமை மாறாமல் புகுத்தி வருகிறார். அனைத்து கிராம பஞ்சாயத்துகளையும், கம்ப்யூட்டர் மூலம் இணைத்து உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஒவ்வொரு கிராமத்தையும் நேரடியாக கண்காணிக்கிறார். அர்ப்பணிப்புடன் கூடிய அவரது உழைப்பும், மாநிலத்தின் வளர்ச்சியும்தான் மக்களை ஈர்த்துள்ளது.

வெளியே என்னதான் முத்திரை குத்தப்பட்டாலும் குஜராத்தில் வாழும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் அனைவரும் பாகுபாடு இல்லாமல் அவரை ஆதரிக்கிறார்கள். மற்ற கட்சிக்காரர்கள் கூட மோடி வெற்றி பெற்றால்தான் மாநிலம் வளரும் என்று கூறுகிறார்கள். எனவே அவரது வெற்றி எதிர்பார்த்ததுதான். எத்தனை அரசியல் புயல்கள் வீசினாலும் நரேந்திர மோடி என்ற இரும்பு மனிதரை வீழ்த்தி விட முடியாது என்றார் அவர்.

Tags:

Leave a Reply