தமிழக பாஜக  தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை தொடங்கியது  தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் பதவிக்காலம் இந்த மாதம் முடிவடைகிறது. இதனால் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு பூந்தமல்லி ராணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஓட்டு போட மாநில செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் வந்திருந்தனர்.

காலையில் தொடங்கிய செயற்குழு கூட்டத்தை தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசினார். இதில் மூத்த தலைவர் இல.கணேசன், அகில இந்திய இணை அமைப்பு செயலாளர் வி.சதீஷ், தேர்தல் அதிகாரி பண்டாரு தத்தாத்ரேயா, அகில இந்திய செயலாளர் முரளிதர்ராவ், எச்.ராஜா, லட்சுமணன், தமிழிசை சவுந்தர்ராஜன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் பொதுக்குழுவும் நடந்தது.

இதில் தலைவர் தேர்தல் குறித்து முறையாக அறிவிக்கப்பட்டது. தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் மனு கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட மனு தாக்கல் செய்தார். அவரை தவிர வேறுயாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் மீண்டும் மாநில தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இன்று மாலை பொதுக்குழுவில் முறையாக பொன்.ராதாகிருஷ்ணன் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது அறிவிக்கப்படுகிறது.

புதிய தலைவருக்கு வாழ்த்து சொல்ல பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமான பேர் பூந்தமல்லியில் குவிந்துள்ளனர்.

பொன்.ராதாகிருஷ்ணன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவரை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் இருந்து ஊர்வலமாக கமலாலயத்துக்கு அழைத்து வருகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை வேளச்சேரி தொகுதி நிர்வாகிகள் விவேகானந்தன், திருப்புகழ், ஆறுமுகராஜ், கேன்ஸ் சவுந்தர் செய்து வருகின்றனர்.

கமலாலயத்துக்கு வந்ததும் பொன்.ராதா கிருஷ்ணன் முறைப்படி தலைவராக பொறுபேற்று கொள்கிறார்.

Tags:

Leave a Reply