தஞ்சையில் மலர்ந்தது பொற்றாமரை. சென்னை நகரில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பூத்த பொற்றமரை அங்கு கலை இலக்கிய மணம் பரப்பிக் கொண்டிருந்தது. இந்த பொற்றாமரை மலர் இமயம் முதல் குமரி முனை வரையிலான புண்ணிய பாரத தேசத்தின் பண்பாடு, கலை, இலக்கியம் ஆகியவற்றின் புத்துணர்வையும் மணத்தையும் மக்கள் மத்தியில் பரப்பிடும்

நோக்கத்தோடு சென்னை நகரத்துக்கு வெளியேயும் சென்று மலரத் திட்டமிட்டது. தேசியமும், தெய்வீகமும்தான் மொழி, கலை, கலாச்சாரம் இவற்றைப் பேணிக் காத்து வந்திருக்கிறது. தேசியம் வேறு, மொழிப் பற்று வேறு எனும் தவறான கருத்து புகுத்தப்பட்டதனாலோ என்னவோ தேசியத்தின்பாற்பட்ட உண்மையான தேசபக்தியுடைவர்களால் மொழி வளரவில்லை எனும் உணர்வு மக்கள் மனங்களில் புகுத்தப்பட்டிருந்தது. இந்த ஆபத்தான நிலை கருதி, இந்த நாட்டில் ஒவ்வொரு காலத்திலும் தெய்வீக உணர்வு மிக்கோரும், ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழைப் பேணிக் காத்து வந்திருக்கிறார்கள். தேசிய உணர்வாளர்களுக்கு தேசம் எப்படியோ, மொழியும் அப்படியே என்பதை உணர்த்திடும் வகையில் உருவானதுதான் பொற்றாமரை.

சென்ற செப்டம்பர் 11இல் மகாகவி பாரதி பிறந்த எட்டயபுரத்தில் பொற்றாமரை பொற்றாமரை  தோன்றியது. அதனை அடுத்து இப்போது இந்த ஜனவரி 20இல் தஞ்சை மாநகரில் வானளாவிய இராஜராஜேச்சரம் கோயிலின் உயரம்போல, பாரத பண்பாடு, கலை, இலக்கியங்களின் தாயகமாகப் போற்றப்படும் தஞ்சை மண்ணிலும் பொற்றாமரை தோன்றியது. இதற்கான விழா 20-1-2013 ஞாயிறு மாலை 4 மணிக்கு தஞ்சை மேல வீதியில் அமைந்த ஜீ.ஜீ.மகாலில் நடைபெற்றது.

சேகல்மடப்புரம் எனும் ஊரைச் சேர்ந்த பாரம்பரிய மிக்க இசைக் குடும்பத்தைச் சேர்ந்த நாதஸ்வர இசை லயஞான இசைத் தென்றல் இளையராஜா குழுவினரால் நாகஸ்வர இசை வழங்கப்பட்டது. தொடர்ந்து இசைமேதை, இசைஞானசித்தர் சி.எஸ்.ஜெயராமனின் நிழல் எனப் போற்றப்படும் இசைவாணர் திருவீழிமிழலை சு.சோமசுந்தரம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த விழா தொடங்கியது.

அலங்கார மேடையில் புகழ்வாய்ந்த தமிழ்ச் சான்றோர்கள் வீற்றிருக்க பொற்றாமரையின் தலைவர் திரு இல.கணேசன் தலைமை தாங்கி அமர்ந்திருந்தார். கவிக்கோ ஞானச் செல்வன், இவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் ஆர்வமிக்கத் தமிழ்த் தொண்டர். தமிழிலக்கியங்களில், குறிப்பாகச் சிலப்பதிகாரத்தில் மூழ்கித் திரு இல.கணேசன் தோய்ந்தவர். இவரது உரை சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம் ஆகிய இலக்கியங்களிலிருந்து சில அரிய பகுதிகளை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது. பூம்புகாரில் அடக்கமே உருவாக இருந்த கண்ணகி, பாண்டியனின் மதுரை மாநகரில் தீத்திறத்தால் கொலையுண்ட கணவன் கோவலனின் மரணத்துக்குப் பழிவாங்க அந்நகரைத் தீக்கிரையாக்கிய வரலாற்றை எடுத்துரைத்தார். இலங்கையில் இராமனின் அம்பினால் மாண்டு கிடந்த இராவணனின் உடலை இராமன் அம்பு துளைத்தெடுத்தது எதற்காக என்பதையும் சுவையாக எடுத்துச் சொன்னார். சீதையின் நினைவைத் தன் மனச் சிறையில் வைத்துக் காத்துக் கொண்டிருந்த இராவணனின் உடலில், அந்த சீதையின் நினைவு எங்காவது ஓரிடத்தில் இருக்கிறதோ என்று எண்ணி இராமனின் வாளி அவன் உடலை மூலை முடுக்கிலெல்லாம் தேடியதோ என்று மண்டோதரி கதறி அழும் காட்சியையும் அழகாக விளக்கினார்.

அடுத்து திருமதி தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில் தான் மருத்துவம் பயின்ற இந்த தஞ்சை மண், கலைகளுக்கும், பண்பாட்டுக்கும் மட்டுமல்ல மனிதநேயத்துக்கும் புகழ்பெற்றது என்றார். நஞ்சையும் புஞ்சையும் விளையாடும் தஞ்சை என்று சொல்லி இந்தப் பகுதியின் சிறப்புக்களையெல்லாம் விளக்கிப் பேசினார். இங்குள்ள மக்களின் விருந்தோம்பல், மனிதாபிமானம் குறித்தும் சுவையான நிகழ்ச்சிகளை விளக்கிப் பேசினார். வேதாரண்யம் எனும் திருமறைக்காட்டில் திருஞானசம்பந்தர் ஒரு பதிகத்தால் மூடிய கதவைத் திறந்துவிட, அதனை மூடுவதற்கு திருநாவுக்கரசர் பத்து பதிகங்களைப் பாடிய நிகழ்ச்சியையும் சொன்னார். அப்பருக்கு வருத்தம், ஞானசம்பந்தரின் ஒரு பதிகம் கதவைத் திறந்தது, ஆனால் தனக்கு பத்து பதிகம் பாடியபின்னரே கதவு மூடியது என்பதில். அதற்கு ஞானசம்பந்தர் சொன்ன மறுமொழி அப்பரே தங்கள் பாடலை மேலும் மேலும் கேட்க வேண்டுமென்பதற்காகத்தான் சிவபெருமான் உம்மை பத்து பாடல்களைப் பாடவைத்தார், தனது ஒரு பாட்டே போதும் என்று ஒரு பாட்டில் கதவைத் திறந்தார் என்றாராம்.

 திருச்சி மெளன மடத் தலைவரும், திருவையாறு ஐயாறப்பர் ஆலய கட்டளை விசாரணம், திருத்தருமையாதீன முனைவர் குமாரசுவாமி தம்பிரான் ஆசியுரை வழங்கினார். நமது பண்பாட்டையும், வாழ்க்கை முறைகளையும், மேலான பழக்க வழக்கங்களையும் திருமுறைகளில் எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அவர் பல மேற்கோள்களுடன் விளக்கிப் பேசினார். தமிழ் நாட்டில் தமிழுக்கு, ஆன்மிகம் செய்த தொண்டுக்கு இணையாக வேறு யாரும் செய்ததில்லை என்பதையும் அவர் இங்கு நிறுவினார்.

 இசைக்கவி எனும் பெயர்பெற்ற திரு இரமணன் அக்காலத்தில் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை இசையாகப் பாடித்தான் வெளிப்படுத்துவர். அதுபோல இசைக்கவி எனும் பெயர்பெற்ற திரு இரமணன் தன்னுடைய இனிமையான குரலெடுத்துப் பாடி கூட்டத்தினரை கட்டிப் போட்டுவிட்டார். உமர்கயாம் தொடங்கி, பட்டினத்தார், கண்ணதாசன் என்று வழிவழி பாரம்பரியக் கவிஞர்களின் மேற்கோள்களோடு தான் இயற்றிய சீரிய கவிதை மாலைகளால் கூட்டத்தினரை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார். சந்தத்தோடு அவர் பாடிய கவிதைகள், உணர்வும், பாவமும், ரசமும் பொங்க அவர் விவரித்த அந்த கவிதை வரிகள், கேட்டோர் நெஞ்சங்களில் கல்வெட்டுக்களாகப் பதிந்தன. நிறைவாக அவர் பாடிய மகாகவி பாரதி பற்றிய நெடுங்கவியொன்று, கேட்போர் கண்களைக் குளமாக்கின. அவர் கவிதை வாசித்தாரா, பாடினாரா, அந்தப் பாடலுக்கிடையே உறுமி மேளம் ஒலித்ததே எப்படி இப்படி பல அற்புத விளைவுகளுக்கிடையே அவரது சொற்பொழிவு மக்களைக் கட்டிப் போட்டது. ஐயோ! அவர் இன்னமும் பேசமாட்டாரா என்று கேட்டோர் தவித்துக் கொண்டிருந்த போது நிறைவு செய்தார். அன்று நிகழ்ச்சியைக் கேட்கக் கொடுத்து வைத்தவர்கள் புண்ணியம் செய்தவர்களே!

நிறைவாக தலைவர் இல.கணேசன் விழா சிற்புக்குக் காரணமானவர்களுக்கு சிறப்புச் செய்தார். கட்சி சார்பின்றி இலக்கியத்துக்காக நடைபெறும் பொற்றாமரை அடிக்கடி பூக்கும் எனும் செய்தியோடு தன் நிறைவுரையை முடித்தார். திரு கி.ரமேஷ் நன்றியுரையாற்றினார்.

நன்றி; தஞ்சை வெ.கோபாலன்

Leave a Reply