விஸ்வரூபம் தடை  பிற சமுதாயத்தவரும் இதைப்போன்று கேட்கும்நிலை உருவாகும்  விஸ்வரூபம் தடையை நியாயப்படுத்தினால் பிற சமுதாயத்த வரும் இதைப்போன்று கேட்கும்நிலை உருவாகும், கலவரத்தை கையில் எடுக்கும் ஒருசிலருக்கு ஊக்கம் தருவதாக அமைந்துவிட்டது என தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது குறித்து தஞ்சையில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது;

விஸ்வரூபம் படத்தை திரையிட விதிக்கப்பட்டிருந்த தடையை உயர் நீதிமன்றம் விலக்கிய பிறகும் அந்த திரைப்படம் திரையிட இருந்த திரை அரங்குகளின் மீது தாக்குதல்நடத்தி பொது அமைதிக்கு பங்கம்விளைவிக்கும் வகையில் செயல் பட்டவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தாதது கண்டனதுக்குரியது.

இத்திரைப் படத்தை திரையிடவேண்டாம் என அரசு அதிகாரிகள் திரையரங்க உரிமையாளர்களை கேட்டுக்கொண்டதாக வரும்செய்திகள் வருத்தத்திற்கு உரியது.

மதசார்பற்ற ஒருமாநிலத்தில் குடியேற விரும்புகிறேன். காஷ்மீர் முதல் கேரளம்வரை மதசார்பற்ற இடம் கிடைக்கா விட்டால் வேறு ஒரு நாட்டிற்கு குடிபெயர விரும்புகிறேன் என்ற கமலஹாசனின் கருத்து தமிழகத்தையும் இந்திய நாட்டையும் அவமதிக்கும்செயல் என கருதுகிறேன்.

கமலஹாசனின் இக்கருத்து ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தமிழகத்தில் மதஒற்றுமையை விரும்புவோர் வாழமுடியாது என்பது போன்றும் தமிழகத்திலும் இந்தியாவிலும் மததுவேசம் நிறைந்திருப்பது போன்றும் மதபயங்கரவாதிகள் இங்கு கோலோச்சுவதை போன்றும், நமது நாடு ஒருகுறிப்பிட்ட மதத்திற்கான மதசார்புள்ள நாடாக மாறியிருப்பது போன்ற தோற்றத்தை தந்துள்ளது . கமலஹாசனின் இந்தக்கருத்து மிகவும் வருத்தத்திற்குரியது. எனவே கமலஹாசன் தனது இந்தக்கருத்தை திரும்பப்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் மூலம் ஒட்டுமொத்தமாக ஒரு சமுதாயம் இத்திரைப்படத்தை எதிர்ப்பதுபோன்றும் ஒரு தோற்றத்தை கொடுக்கமுயற்சிப்பது ஏற்புடையதல்ல.

தமிழகத்தில் கலவர சூழ்நிலையை உருவாக்க ஒருதிரைப்படத்தை ஒருகாரணமாக காட்டமுயலும், எந்த தரப்பினை சார்ந்தவராக இருந்தாலும் அவர்களை அடக்கி கடும்நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசின் கடமை.

இந்த திரைப்படத்திற்கும் திரையரங்கத்திற்கும் உரியபாதுகாப்பை தந்து சட்ட ஒழுங்கை பாதுகாக்கும்பொறுப்பு தமிழக அரசை சார்ந்தது. ஆனால் ஒருசிலர் தாக்குதல் நடத்தி விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக லட்சக் கணக்கான ரசிகர்களின் திரைப்படம் பார்க்கும் உரிமையை தடைசெய்து திரைப்படத்திற்கு மீண்டும் தடைஉத்தரவு பெறுவது கலவரத்தை கையில் எடுக்கும் ஒருசிலருக்கு ஊக்கம் தருவதாக அமைந்துவிட்டது.

தமிழக அரசு இந்தநிலையை நியாயப்படுத்தினால் அது பிறசமுதாயத்தை சார்ந்தவர்களுக்கும் கடைப்பிடிக்கவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளிவிடும். சிறுபொறியாக உருவாக்கப்பட்டுள்ள இக்கலவரம் காட்டுத்தீயாக மாறாமல் தடுக்கும் கடமையை உணர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார் .

Leave a Reply