கமலுக்கு நேர்ந்த நிலை அன்று நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு நேர்ந்திருந்தால் இதைவிட பெரும் கஷ்டம் அனுபவித்தவர் ராதா. அவரது நாடகம் நடக்கும் போதே பாம்பு, மாடு, நாய்களை உள்ளே விரட்டி விடுவார்கள். ராதா மேடையில் தோன்றியதும் கல், கம்பு, சோடா பாட்டில் வீசப்படும். அத்தனையும் சமாளித்துத்தான் ராதா நாடகங்கள் நடத்தினார். அவரது அனைத்து நாடகங்களையும் தடை போட்டார்கள். ஒரு நாடகத்தை

தடை செய்ததும் அதே நாடகத்தை வேறு பெயரில் நடத்துவார். அவரது நாடகங்களை முழுமையாகத் தடை செய்வதற்கென்றே ஒரு சட்டத்தை அன்றைய காங்கிரஸ் அரசாங்கம் கொண்டுவந்தது.

பொது அமைதியைக் கெடுக்கிறார், சட்டம் ஒழுங்கைக் குலைக்கிறார் என்று குற்றம் சாட்டியபோது… ‘இவை அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட விஷயம்’ என்று ராதா வாதிட்டார். ‘ஒரு நாடக அரங்குக்கு நான் பணம் கொடுத்து வாடகைக்கு எடுக்கிறேன். குறிப்பிட்ட காலத்துக்கு அது எனக்குச் சொந்தமான அந்தரங்க இடம். அங்கே கட்டணம் செலுத்தி நாடகம் பார்க்க வருபவர்கள், விரும்பித்தான் உள்ளே வருகிறார்கள். நான் யாரையும் கட்டாயப்படுத்தி இழுக்கவில்லை. என் தனி அறைக்கு விரும்பி வருகிறவர்கள், நான் மேல் சட்டையோடு இருக்கிறேனா, திறந்த உடம்போடு இருக்கிறேனா என்று கேள்வி கேட்க முடியாது. அதுபோலத்தான் என் கட்டுப்பாட்டில் உள்ள அரங்கத்தில் நடக்கும் நாடகமும் என் விருப்பப்படியே இருக்கும். அதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது’ என்று சொன்னார்.

ராதாவின் நாடகம் நடந்து கொண்டேதான் இருந்தது. யாராலும், என்ன செய்தும் தடுத்துவிட முடியவில்லை!

Leave a Reply