மலரினும் மெல்லியது
உருவேதும் இல்லாதது
உணரிவினில் பிறந்து
உன்னதம் அளித்து – உலகில்
உயிரினம் வாழ்ந்திடக்
காரணமானது காதல்

பிறந்த குழந்தைக்குத்
தாயின் மணமும் பாலும்
சற்றே வளர்ந்த பின்
விளையாட்டுப் பொருட்களும்
பள்ளிக்கூடம் சென்றால்
பாடமும் நண்பர்களும்
காதல் தான்.

பதின்வயதுத் தொடக்கத்தில்
உடற்கூறும் விளையாட்டும்
பதினாறு தாண்டினாலே
எதிர்ப்பாலரின் ஈர்ப்புகளும்
பதினெட்டு தொட்டவுடன்
மனம் மாறும் எண்ணங்களும்
காதல் தான்.

அந்தந்த வயதினிலே
அந்தந்த விஷயங்கள்
ஈர்ப்பது இயற்கைதான்
அதன் மறுபெயர்தான்
வாழ்வின் மீதான காதல்

பருவம் பதினெட்டில் மனமோ
பெண்ணின் பாற்படும்
சற்றே வேகம் குறை.
அறிவைப் பயன்படுத்து
மடந்தைகள் கண்டு
மனம் பேதலித்து
மயங்கியே கிடந்தால்
ஆவதென்ன வாழ்க்கை?

வாழ்க்கையில் அடியெடுத்தது
வனிதையரைக் காண மட்டுமா?
கல்வியிற் சிறந்து
கற்றறிந்த சான்றோனாய்க்
கம்பீரமாய் உலகில் வாழக்
காதல் கொள்!

வாழ்க்கைக்குப் பெண் தேவை
வழக்கேதும் அதில் இல்லை
வழுக்கினால் வசந்தமில்லை
வருங்காலம் உனக்கில்லை
வாழ்க்கையில் களையில்லை!

கைத்தலம் பிடித்தவளின்
கைநோக்கி நில்லாமல்
கைபிடித்து நடத்திச் செல்லக்
கைகூடும் எனும் போது
கைப்பிடிக்க ஏற்றவளைக்
கண்ணியமாய்க் கண்டெடுப்பாய்

கஞ்சியோ கூழோ
கடைசிவரை எனக்கூவும்
சினிமாத்தன வசனங்கள்
சிறிதளவும் உதவாது
கனியாத காலத்துக்
கலியாணம் சிறக்காது

வயிறார நல்சுவை உணவும்
மனம்விரும்பும் உடை வகையும்
இணைந்து வாழவோர் வீடும்
பிள்ளைகள் வந்த பின்னும்
பின்னடையாத பொருளாதாரமும்
துன்பங்களை எதிர்கொள்ளும் பக்குவமும் தருவது காதல்.

உன் பணப்பையின் நிறை
உன் நடை உடை கண்டு
பின்னே வரும் உடலங்களை
உதறி எறிவது உத்தமம்
உள்ளத்திலிருந்து இந்தக் கசடுகளை
உருவி எரிப்பது சிறப்பு

உலகம் எதிர்வரின் எதிர்த்து நிற்பது
அறிவீனத்தின் உச்சம் அறிவாய்
உயிருள்ளவரை நீயும் உன்னவளும்
உலகோர்க்கு நடுவே உயிர்வாழ வேண்டும்
உலகை நட்புக் கொள்வது காதல்

பெற்றோர் உற்றார் பெரியோரிடம் பேசு
மனம் பொருந்திய மாண்பைச் சொல்
இரு குடும்பங்கள் இணைந்திருக்கும்
அன்பின் தகைமை சொல்
நல்லவை நல்வழியே சென்றால்
நம்பி ஏற்பர் மாந்தர்.

ஆகவே……….
காதல் செய் நண்பனே!
காலூன்றி வாழ்விலே நின்ற பிறகு!

-பார்வதேயன்..

 

நன்றி ; அருண் பிரபு

Leave a Reply