கட்டுக்கடங்காத ஊழல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை விளக்கும் அம்சம்பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவி திருமதி சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இன்னும் சில மாதங்களில் அரசு தனது 10 வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. தேர்தலுக்கு முன் இந்த அரசுக்கு இதுதான் கடைசி ஆண்டு. கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் இந்தியா சுதந்தரம் அடைந்த பின்

நாட்டை ஆண்ட அரசுகளிலேயே டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுதான் மிகவும் ஊழல் மலிந்த அரசு என்ற எண்ணத்தை வலுவூட்டும். இதைக் கூட்டணி அரசு என்று சொல்வதைவிட ஊழல்களின் கூட்டணி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

பெரிய அளவிலான மோசடிகள், ஊழல், லஞ்சம், பேரங்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக முறையற்ற நிதி மேலாண்மை போன்றவை மீண்டும் மீண்டும், மிகக் குறுகிய கால இடைவெளிக்குள் நிகழ்வது இவை எவ்வளவு முறை நடைபெறுகின்றன என்ற எண்ணிக்கை மறந்து போகும் அளவுக்கு நிகழ்ந்து வருகின்றன. உயர் மட்டத்திலிருந்து இவை நடப்பதாலும் இவற்றை நடத்தும் இடைத் தரகர்கள் உயர் மட்ட அரசியல் தலைவர்களால் ஆதரிக்கப்படுவதாலும், இந்த அரசு ஒன்றன் பின் ஒன்றாக மோசடிகளைத் தொடர்ந்து நடத்தி, பல லட்சம் கோடி பொது மக்கள் பணத்தை கூட்டாக சேர்ந்து கொள்கையடித்து வருகிறார்கள். பெரும்பாலான நிகழ்வுகளில் இந்த அரசின் முக்கியமான அரசியல் தலைவர்கள் இவற்றுக்கு உடந்தையாக இருப்பது மட்டுமல்லாமல், இதில் முக்கியமான அம்சங்களில் பங்காளியாகவும் செயல்பட்டும் வந்துள்ளனர். உண்மையில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தியும், நாட்டின் செல்வம் திட்டமிட்ட முறையில் மோசடிக்கு பின் மோசடியாக சூறையாடப்படுவதைப் பார்த்துக் கொண்டு அதைப் பற்றி வாயே திறக்காமல் பாராமுகமாக இருந்து கொண்டு, மீண்டும் மீண்டும், 'சந்தேகத்துக்கிடமான முறையில் அமைதி காத்தும்' 'செயலற்று இருக்கும் குற்றத்தை' யும் புரிந்து வரும் இவர்களின் இந்த அலட்சிய மனோபாவம் இந்த தேசத்தையே திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

தொடர் ஊழல்கள்

மோசடிகளின் பட்டியல் முடிவற்றதாக உள்ளது. தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் 2 ஜி லைசென்ஸ் ஒதுக்கீட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட ஊழல், இதில் மோசடி செய்யப்பட்ட 2 ஜி லைசென்ஸ் ஊழல் தொகை ரூ 1,76 லட்சம் கோடி. இது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகப் பெரிய வெட்கக்கேடான ஒரு நிகழ்வு. உச்ச நீதி மன்றம் இதில் ஒதுக்கீடு செய்யப்பட்ட உரிமங்களை ரத்து செய்து, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த தருணத்திலும்கூட, இந்த அரசின் மூத்த அமைச்சர் இதில் எந்தத் தவறும் நடைபெறவில்லை என்றே கூறி வருகிறார். நிதி அமைச்சர் திரு. சிதம்பரம் இந்த ஊழலில் பங்கு பெற்றுள்ளார் என்பதற்கான ஏராளமான சாட்சிகள் வெளிவந்துள்ள போதும், பிரதமர் தொடர்ந்து அவர் குற்றமற்றவர் என்று சான்றிதழ் அளித்து வருகிறார். இந்த மாபெரும் ஊழலில் அவருடைய மற்றும் பிரதமரின் அலுவலகத்தின் பங்கு பற்றி விசாரணை மேற்கொள்ள சி.பி.ஐ. அனுமதிக்கப்படவில்லை. சி.பி.ஐ. வக்கீல் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களுடன் கூட்டு சேர்ந்திருப்பதாக வெளிவந்துள்ள அறிக்கைகள் இந்த வழக்கின் விசாரணை நியாயமாக நடைபெறுமா என்ற சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

காமன் வெல்த் விளையாட்டு அமைப்பு நடத்திய மோசடியில், திரு. சுரேஷ் கல்மாடிக்கும் அவருடைய சகாக்களுக்கும் எதிராக வழக்கு நடைபெற்று வருகிறது என்றாலும், இந்த மோசடி அவருடன் நின்றுவிடவில்லை. இதில் ஈடுபட்ட பலரில் அவரும் ஒருவர். மோசடியின் வேர்கள் மிக ஆழமாகச் செல்கின்றன. இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு கோப்பும் கேபினட், கேபினட் துணை-கமிட்டி, அமைச்சர் குழு, செலவு நிதிக் குழு இறுதியில் பிரதம மந்திரி வரை சென்று வந்துள்ளது. பிரதம மந்திரியால் நியமிக்கப்பட்ட ஷங்க்லு கமிட்டியே திருமதி ஷீலா தீட்சித் தலைமையிலான தில்லி அரசுக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மேலும் இந்த கமிட்டி, "திட்டங்களில் தேவையற்ற தாமதம் செய்யப்பட்டுள்ளது. பீதியைக் கிளப்பவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நியாயத்திற்குப் புறம்பாக நன்மை பயக்கும் விதத்திலும் நடைபெற்ற முயற்சியாக இருக்கலாம்" என்றும் கூறியுள்ளது. இந்த முறைகேட்டில் ரூ. 70,000 கோடி அளவு மோசடி நடைபெற்றுள்ளது. பிரதமர் நாடாளுமன்றத்தில் இதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தாலும், ஷீலா தீட்சித் அரசுக்கு எதிராக எந்த விசாரணையையும் சி.பி.ஐ. மேற்கொள்ளவில்லை.

நிலக்கரிச் சுரங்கங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 142 நிலக்கரித் தொகுதிகளில் பெரும்பாலானவை நியாயமற்ற முறையிலும், தன்னிச்சையாகவும் காங்கிரஸ் தலைவர்களின் உறவினர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கு நிதி அளிக்கும் ஆதரவாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதனால், மிகப் பெரிய அளவில், ரூ.1.86 கோடி அளவு நாட்டுக்கு நஷ்டம் ஏற்பட்டது. முறையான விசாரணைக்காக இது சம்பந்தப்பட்ட கோப்புகளைப் பார்வையிட சி.பி.ஐ.க்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம், வெளிப்படையானது. இந்த முறைகேடுகள் நடைபெறும்போது, டாக்டர் மன்மோகன்சிங்தான் பிரதமர் பதவியுடன் சுரங்கத் துறை அமைச்சர் பதவியையும் சேர்த்து வகித்துக்கொண்டிருந்தார் என்பதுதான் அந்தக் காரணம். எனவே, டாக்டர் மன்மோகன்சிங் அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் நேரடியாக இந்த நிலக்கரி சுரங்கத் தொகுதிகள் ஒதுக்கீடு முறைகேடில் பொறுப்பாளியாகிறார். இதில் துரதிர்ஷ்டமான விஷயமே, நியாயமான விசாரணை நடத்துவதற்காக எழுப்பப்படும் கோரிக்கைகள் மறுக்கப்பட்டு வருவதுதான்.

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவருவதில் தயக்கம் காட்டுவது, தில்லி சர்வதேச விமான நிலையத்தைத் தனியார் மயமாக்கும் வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்காக முக்கிய இடத்தில் உள்ள மிக அதிக விலை மதிப்புள்ள நிலங்களை ஒதுக்கிய பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள இடங்களை ஒதுக்கிய தேவாஸ் ஆன்ட்ரிக்ஸ் பேர ஊழல் (2 லட்சம் கோடி), ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல்; இப்படி இந்தப் பட்டியல் முடிவேயில்லாமல் நீண்டுகொண்டே போகும். இவற்றில் பெரும்பாலான விவகாரங்களில் பாரதிய ஜனதா இடைவிடாமல் போர்க்குரலை எழுப்பியதாலும், ஊடகங்கள், நீதிமன்றங்களின் தலையீடு இவற்றால்தான் தற்போது விசாரணை நடைபெற்றுவருகிறது. இவற்றில் அரசின் பங்கு எதுவுமே இல்லை, காரணம், இந்த அரசு எப்போதுமே ஊழல் செய்பவர்களைப் பாதுகாக்கவே முயற்சித்து வந்துள்ளது.

ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் லஞ்சம் – சமீபத்திய மோசடி

பல்வேறு மோசடிகள், ஊழல்கள் மூலம் சூறையாடப்பட்ட பொதுமக்களின் பல லட்சம் கோடி ரூபாய் போதாதென்று, அகஸ்டாவெஸ்ட்லாண்ட் மற்றும் அதன் இத்தாலிய நிறுவனம் ஃபின்மெக்கானிக்காவிடமிருந்து வி.ஐ.பி. ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் கொழுத்த லஞ்சமும், கமிஷனும் கைமாறியுள்ளதுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியின் சமீபத்திய ஊழல் அத்தியாயம். ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த பேரத்தில் கை மாறிய பொதுமக்கள் பணம், ரூ. 4000 கோடியைப் பற்றித் தீவிரமான கேள்விகள்  ஹெலிகாப்டர்கள்  வாங்கியதில் லஞ்சம்எழுப்பப்பட்டுவருகின்றன. கடந்த வருடமே இதைப் பற்றி பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியது. வருமான வரித் துறை இது குறித்துக் கேள்வி எழுப்ப விரும்பியது. இந்த விவகாரத்தில் ஏறக்குறைய ரூ. 350 கோடி என்ற மிக பெரிய அளவு கமிஷன் தொகை கைமாறியுள்ளது என்று மேலும் தீவிரமான குற்றச்சாட்டுகள் இது குறித்து வெளிவந்தன. ஆனால், இந்திய அரசு எந்த விதமான விசாரணையும் இது குறித்து மேற்கொள்ளவில்லை. பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் இதில் எந்தத் தவறும் நடைபெறவில்லை என்று வேறு கூறினார். இந்த ஒட்டுமொத்த ஒப்பந்தத்தையும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முடிவு செய்து செயல்படுத்தியுள்ளது.

இத்தாலிய அதிகாரிகள் இந்தியாவுக்கு சப்ளை செய்த நிறுவனமான ஃபின்மெக்கானிக்காவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தி, விசாரணை நடத்தி இறுதியில் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியை ஹெலிகாப்டர்கள் பேரத்தில் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சுமத்தி கைது செய்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் கிளம்பிய எதிர்ப்புக் குரலுக்குப் பணிந்து, வேறு வழியில்லாமல் நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டது. இந்திய தலைவர்கள் சிலருக்கு துனிஷியா மற்றும் மொரீஷியஸ் வழியாக வந்து இடைத்தரகர்கள் லஞ்சம் கொடுத்தனர் என்று தற்போது சி.பி.ஐ. கூறியுள்ளது. எந்த வகையிலும் இடைத்தரகர்களை நியமிப்பது இந்தியச் சட்டப்படி கடுமையான தண்டனைக்குரிய குற்றம். ஆயுத பேர ஊழலுக்குப் பேர்போனது இந்த அரசு. போபர்ஸ் பீரங்கி ஊழல் ஊழல் விவகாரத்தில் மாட்டிக்கொண்ட ஒட்டோவியோ குவாட்ரோச்சியை அவரது இத்தாலிய தொடர்புக்காகவே பெயிலில் விடுவிக்க பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம்.

இந்த ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல் விசாரணையும் இதே மாதிரி ஆகிவிடக் கூடாது என்று பாரதிய ஜனதா கட்சி எச்சரிக்க விரும்புகிறது. இந்த விவகாரத்தில் ஒரு சில உண்மைகள் தெளிவாக உள்ளன. யார் லஞ்சம் கொடுத்தது என்பது நன்றாகத் தெரியும். எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பதும் தெரியும். இந்தியாவில் யார் யாரெல்லாம் இதில் பலனடைந்திருக்கிறார்கள் என்பதுமட்டும்தான் தெரிய வேண்டிய விஷயம். இவ்வளவு பெரிய தொகை முன்னாள் விமானப்படை அதிகாரிக்கும் அவரது சகாக்களும் மட்டும் வழங்கப்பட்டிருக்க முடியாது என்பது வெளிப்படை. அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருக்கும் செல்வாக்கு மிகுந்தவர்கள் இதை ஆதரித்து, அதற்கான சவுகரியங்கள் செய்துகொடுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் பெயர்கள் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுவதை இந்த அரசு மிக விரைவில் உறுதிசெய்ய வேண்டும் என்று நாடு விரும்புகிறது. இந்த விவகாரத்தில் எதுவும் செய்யாமல் செயலற்ற நிலையில் ஒரு வருடம் இருந்த அரசு ஏற்கெனவே நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. யாரோ, எங்கிருந்தோ பெரிய இடத்து சம்பந்தம் உடைய யாரையோ காப்பற்ற முயற்சி செய்துவருகிறார்கள். இந்த அரசு நியாயமான விசாரணையை விரும்பவில்லை என்று சந்தேகிக்கும் வகையில் எராளமான சந்தர்ப்பங்கள் உள்ளன.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் (மாநிலங்களவை) நடைபெற்ற விவாதத்தின்போது யாரெல்லாம் லஞ்சம் வாங்கியிருக்கிறார்கள் என்பதை அடையாளம் காண்பதில் இந்த அரசு அக்கறை காட்டவில்லை என்பது மீண்டும் ஒரு முறை உறுதியாகிவிட்டது. கடந்த ஒருவருடத்துக்கும் மேல் அரசு எந்த உருப்படியான விசாரணையும் மேற்கொள்ளவில்லை. இந்தப் பிரச்சினை பொது விசாரணை களத்தில் இருந்தது, வருமான வரித் துறைகூட இடைத்தரகர்களின் பங்கு பற்றி விசாரணை நடத்த விரும்பியது. இத்தாலியில் இந்த விசாரணை கடந்த வருடம் முழுவதும் நிடைபெற்றது. ஆனாலும் நம் அரசு மவுனம் சாதித்தது. இப்போதுகூட, சி.பி.ஐ. முறையான எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை.

இந்த பேரம் இத்தாலிய நிறுவனத்தோடு நடக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருப்பதால், யாரெல்லாம் லஞ்சம் வாங்கினார்களோ அவர்கள் நிச்சயம் இந்தியாவில்தான் உள்ளனர். ஆரம்பத்திலேயே எஃப்.ஐ.ஆர். தாக்கல் செய்யப்பட்டிருந்தால், போலீஸ் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, ஆவணங்கள் முறையாக கோரப்பட்டு, சில இடைத்தரகர்கள் ஒப்படைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், அனைத்துத் தரப்பிலிருந்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல் வந்தபோதும் இன்று வரை எஃப்.ஐ.ஆர். தாக்கல் செய்யப்படவும் இல்லை, இது குறித்து அரசு எந்தவிதமான உறுதியும் அறிக்கப்படவில்லை. எனவே, திடீரென்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு ஜே.பி.சி. வேண்டும் என்று வலியுறுத்துவது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமலேயே காலம் கடத்துவதற்காகத்தான். காரணம், ஜே.பி.சி.க்கு காவல் துறை விசாரணை, கைது செய்து விசாரணை செய்வது போன்றவற்றிற்கான அதிகாரம் இல்லை. அப்படியே ஜே.பி.சி. விசாரணை மேற்கொண்டாலும் அது மூன்று மாதத்திற்குள் முடிவடையாது. லோக்சபா தனது இறுதி ஆண்டிற்குள் அடிஎடுத்து வைப்பதால், அரசின் நோக்கம் சந்தேகத்திற்கு இடமளிப்பதாக உள்ளது.

கால அவகாசம் அளித்தால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு எதிரான சாட்சியங்களை அழிப்பதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காகவே இப்படி நடந்துகொள்கிறது. லஞ்சம் கொடுத்தவர்களின் பெயர்கள், எதற்காக அளிக்கப்பட்டது என்பதும் தெரிந்திருந்தால், லஞ்சம் வாங்கியவர்கள் மற்றும் அவர்களை அதற்குத் தூண்டியவர்களையும் சேர்த்து உடனடியாக விசாரணை, கைது, புலன் விசாரணை மற்றும் வழக்கு ஆகிய நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்.

ஊழல் நடைபெறுவதைத் தடுக்க, நடவடிக்கை எடுக்க, செயல்திறன் மிக்க லோக்பால் மற்றும் தன்னாட்சி, பொறுப்புணர்வுமிக்க சி.பி.ஐ. ஆகியவை மிகவும் முக்கியமான அமைப்புகள் தேவை.

இந்தியாவின் மதிப்பு தீவிரமான சரிவை நோக்கிச் செல்கிறது

தற்போது இருப்பதைப் போல முன் எப்போதுமே இந்திய அரசின் நம்பகத்தன்மை மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளானதில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மிக இயல்பான அம்சமாக மாறிவிட்ட தொடர்ந்து அடுத்தடுத்து வெளிவரும் ஊழல் குற்றசாட்டுகளால் உலக அளவில் இந்தியாவின் இமேஜ் சரிந்துவிட்டது. கொள்கைப் பக்கவாதம், நிர்வாக சீர்கேடு ஆகியவைதான் உலகம் முழுவதும் பொதுவாக இந்தியாவைப் பற்றிய பொதுக் கருத்து நிலவுகிறது. திறனற்ற நிர்வாகத்தின் முடிவுகள் "சீர்திருத்த நடவடிக்கைகள்' என்று முத்திரை குத்தப்படுகின்றன. இது எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பது வெளிப்படை, காரணம் நம்பிக்கையின் தருணம் கடந்துபோய், உலகின் முக்கியமான நாடாக மாறும் இந்தியாவின் கனவு கேள்விக்குரியதாக மாறிவருகிறது. அசாதாரணமான திறனும் மக்களின் அளவற்ற நம்பிக்கையும் இருந்தும் இவை அனைத்தும் நடைபெற்றுவருகின்றன. இந்த நம்பிக்கையின் இடத்தில் தற்போது சோர்வும் அவநம்பிக்கையும் உள்ளன.

பயங்கரவாத அச்சுறுத்தல் – இந்திய பாதுகாப்புக்குக் கடுமையான சவால்

சமீபத்தில், 2013, பிப்ரவரி 21ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் 16 பேர் உயிரிழந்தனர். 90 பேர் படுகாயமடைந்தனர். பயங்கரவாதம் தனது அசிங்கம் பிடித்த கீழ்த்தரமான விளையாட்டை மீண்டும் நமது பாதுகாப்புடன் விளையாடிவிட்டது. ஜூலை 2005 ஆம் ஆண்டிலிருந்து மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதல்கள் நமது நாட்டில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இதுவரை ஏறக்குறைய 500 அப்பாவி பயங்கரவாத அச்சுறுத்தல் இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர், ஜம்மு காஷ்மீரில் படுகொலை செய்யப்பட்ட கிராம அதிகாரிகள் ஆகியோரை இதில் சேர்க்கவில்லை.

அரசியல் தலைநகரான புது தில்லி, வர்த்தக மூலதன நகர் மும்பை, அறிவு மூலதன நகரங்களான பெங்களூர், ஹைதராபாத், இந்தியாவின் ஆன்மிக மையமான வாரணாசி, இந்தியாவின் கலாசார, கல்வி மையமான புனா ஆகிய நகரங்களையும் இவற்றைத் தவிர ஏராளமான சிறுநகர் மற்றும் கிராமங்களைக்கூடக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர். முக்கியமாக திட்டமிடுபவர்கள், சதி வேலையில் ஈடுபடுவோர் அனைவருக்கும் பாகிஸ்தான் புகலிடமாக இருந்துவருகிறது. பாகிஸ்தானில் உள்ள நிர்வாகத்தினரிடமிருந்தும் ஆயுதப் படைகளிடமிருந்தும் கிடைக்கும் ஆதரவினால்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக அந்நாடு கருதப்படுகிறது.

பாகிஸ்தானில் அரசுத் தரப்பினரும் அரசு சாராத் தரப்பினரும் தன்னிச்சையாகச் செயல்படுகின்றனர். லஷ்கர் – இ- தொய்பா (எல்.இ.டி.), நிர்வாகத்திடமிருந்து அதீத ஆதரவைப் பெற்று வருவது, அனைவரும் அறிந்த உண்மை. ஹைதராபாத் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பல்கிப் பெருகி நாட்டின் மிக ஆபத்தான பயங்கரவாத அமைப்பாக மாறிவிட்டது. பழிவாங்கும் படலம் என்ற பெயரில் மக்கள் கூட்டம் மிக அதிகமாக உள்ள இடங்களில் ஈவிரக்கமற்ற தாக்குதல் நடத்துவதுதான் இந்த பயங்கரவாத அமைப்பின் முக்கிய குறிக்கோள் என்பதை ஹைதராபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் உறுதிபடுத்துகின்றன. இவர்களுடைய ஆதரவாளர்களும் சரணாலயமாக விளங்கிவருகிறது பாகிஸ்தான்.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மண்ணில் செயல்பட்டு வரும் பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்காவிட்டால், அந்த நாட்டுடன் இந்தியா இயல்பான நட்புறவு கொள்ள முடியாது என்று பாரதிய ஜனதா கட்சி உறுதியாக நம்புகிறது. – 2004ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அப்போதைய இந்தியப் பிரதமர் ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் – பாகிஸ்தான் ஜனாதிபதி முஷ்ரஃப் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தில் இது ஏற்றுக்கொள்ளப்பட்து. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்த ஒப்பந்தத்தை ஏறக்குறைய மறந்துவிட்டது. 26/11 மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்த அரசு பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது, ஆனால், அந்த நிலைமை மெல்ல மெல்ல நீர்த்துப்போய்விட்டது. 2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஷர்ம்-இ-ஷேக்கில் அரசு தனது நிலைப்பாட்டினைத் தலைகீழாக மாற்றிக்கொண்டு, மும்பை கலவரத்திற்குத் திட்டமிட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்தும் தீர்மானம் வெறும் சடங்காகவே நிறைவேற்றப்பட்டது.

பயங்கரவாதத்தை அரசியலாக்குவதிலேயே பெரும்பாலான நேரத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி செலவழித்தது. தேசி ஜனநாயகக் கூட்டணி அரசு பயங்கரவாத்த் தடுப்புச் சட்டத்தை இயற்றியபோது, உச்ச நீதிமன்றம் இதற்கு ஆதரவளித்தபோதும், காங்கிரஸ் கட்சி அதைச் சிறுபான்மையினருக்கு எதிரான சட்டம் என்று கூறி எதிர்த்தது. தற்போதைய உள்துறை அமைச்சர் திரு. சுஷில் குமார் ஷிண்டே காவி, ஹிந்து பயங்கரவாதம் என்று கூறி வருவதில் சாதனை படைத்தவர். அவர் பயங்கரவாதத்திற்கு எந்த நிறமும், மதமும் இல்லை என்பதோ, காவி மற்றும் ஹிந்து கலாசாரம் என்பவை நமது அற்புதமான நாகரிகம் மற்றும் பாரம்பரியக் கலாசாரத்தையே பிரதிபலிப்பவை என்பதையும் முழுமையாக மறந்துவிட்டுப் பேசுகிறார். இவருடைய இப்படிப்பட்ட கருத்துகள் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது என்பது வெளிப்படை. பா.ஜ.க.வையோ ஆர். எஸ்.எஸ். அமைப்பையோ புண்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்று திரு. ஷிண்டே வருத்தம் தெரிவித்தபோதும், அது பாகிஸ்தான் நம்மை நோக்கி ஆதாரமற்ற குற்றம்சாட்டுகளை சுமத்துவதைத் தடுத்து நிறுத்தவில்லை.

அஃப்சல் குருவின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து ஏழு வருடங்கள் ஆகியிருந்தாலும், தனது வாங்க வங்கி அரசியலுக்காக வேண்டுமென்றே இந்த அரசு அதை இத்தனை காலம் நிறுத்தி வைத்திருந்தது. பயங்கரவாதிகளின் எந்த விதமான பழிவாங்கும் செயல்களையும் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும். ஹைதராபாத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கப்போவதாக தகவல் கிடைத்தது என்ற திரு. ஷிண்டேயின் அறிக்கைகள் அந்த தாக்குதல்களைத் தடுப்பதில் அரசின் தோல்வியை எந்த விதத்திலும் குறைத்துவிடவில்லை. ஏற்கெனவே இது குறித்து தகவல் கிடைத்திருந்தாலும் தாக்குதல் நடப்பதற்கு முன்பே சரியான நேரத்தில் அதை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று அரசு மக்களுக்கு பதில் கூறியாக வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக, வாக்கு வங்கி அரசியலுக்காக பயங்கரவாதத்திற்கு அரசியல் சாயம் பூசுவது நாட்டின் உறுதிப்பாட்டையும் திறனையும் பலகீனப்படுத்தி, இந்த அச்சுறுத்தலை சமாளிக்கும் திறனைக் குறைத்துவிடுகிறது. பயங்கரவாதத்தைக் கடுகளவுகூட சகித்துக்கொள்ளவோ, சமரசத்திற்கு இடமளிக்கவோ கூடாது என்ற நிலைப்பாடு பின்பற்றப்பட வேண்டும், காரணம், இதில் நமது நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு மட்டுமல்லாமல், நமது இறையாண்மையும் சம்பந்தப்பட்டுள்ளது. கடுமையான முடிவுகள் தேவைப்படும்போது விளைவுகளைப் பொருட்படுத்தாமல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் திறன்களை வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியம். பயங்கரவாதத்தை எதிர்ப்பது மத்திய மற்றும் மாநில அரசின் கூட்டுப் பொறுப்பு. நமது அரசியலமைப்புத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் பாதுகாப்பு மத்திய அரசின் பொறுப்பு. பொது ஒழுங்கு மற்றும் காவல் துறை மாநில அரசுகளின் பொறுப்பு. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் கூட்டாட்சியின் பொறுப்பாக இருக்கலாம், இருக்கவும் வேண்டும். பயங்கரவாத பிரச்சினைக்கு ஒன்றிணைந்து போராடாமல், கற்பனையான கூட்டாட்சி பற்றிய வசனங்கள் அர்த்தமற்ற விவாதமாகவே இருக்கும். தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்திற்கு எதிராக கொள்கையில் எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், இதன் அதிகாரங்களும் அதிகார வரம்புகளும் அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் இருக்க வேண்டும்.

மாவோயிசம் மற்றம் நக்சல் அமைப்புகளின் அச்சுறுத்தல்கள் தீவிரமாகவே இருந்துவருகின்றன. இவை தொடர்ந்து பெரும் எண்ணிக்கையில் கிராமப்புரங்களில் அப்பாவி மக்களையும், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாதுகாப்புப் படைகளையும் கொன்று குவித்துவருகின்றன. இது ஒரு தேசிய பிரச்சினை. ஆனால் இவற்றை எப்படி சமாளிப்பது என்பதற்கான எந்தவித தொலைநோக்கும், வழிகாட்டுதலும் அரசுக்கு இல்லை.

பாகிஸ்தான் ராணுவம் இந்திய வீரர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

மிகவும் மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தனமான முறையில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நமது இரண்டு துணிச்சலான வீரர்களை அண்மையில் கொலை செய்தது ஒட்டுமொத்த தேசத்தையே கொதித்தெழ வைத்தது. அவர்களுடைய தலைகள் துண்டிக்கப்பட்டது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படவே முடியாத, கண்டனத்திற்குரிய வெறிச்செயல். இதற்குப் தக்க சமயத்தில் பொருத்தமான பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நமது துணிவுமிக்க ஆயுதப் படையினரின் முடிவை அங்கீகரித்து, மரியாதை கொடுக்க வேண்டும். இவை எல்லாம் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு எல்லா வகையிலும் ஆதரவாக இருப்பதைச் சேர்த்துப் பார்க்கும்போது பாகிஸ்தானுடன் இணைந்து செய்யக்கூடிய விஷயங்களுக்கு ஒரு தெளிவான, உறுதியான வரையறைகளை வகுக்க வேண்டிய சரியான தருணம் இதுதான் என்பது உறுதியாகிறது. பாகிஸ்தான் ஆதரவுடன் இந்தியாவில் அரங்கேற்றப்படும் பயங்கரவாத வெறிச்செயல்களால் ஏராளமான அப்பாவி இந்தியர்கள் பலியாவது தொடர்கதையாக இருப்பதால் எந்த வகையிலும் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படுவது சாத்தியப்படாத, அர்த்தமற்ற செயலாகவே இருக்கும்.

பெண்களின் பாதுகாப்பு இந்திய அரசியல் சொல்லாடலின் மையம்

சமீபத்தில், நாட்டின் தலைநகரில் ஒரு துணிச்சலான பெண் துரதிர்ஷ்டவசமான, மனிதாபமற்ற முறையில் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டு, கொலைசெய்யப்பட்டது, நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதுவும் இந்த சம்பவம், இந்தியத் தலைநகரில் நடைபெற்றது, வெட்கக்கேடான, கடுமையான கண்டனத்திற்குரிய செயல். இந்த சம்பவத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் நியாயமான கோபமும் போராட்டங்களும் எழுந்தன. பெரும்பாலும் இளைஞர்கள் பங்கு கொண்ட, மிக அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டங்களை காவல் துறையும், தில்லி நிர்வாகமும் மிக மோசமாக கையாண்டது பெரும் கண்டனத்திற்குரிய செயல். ஆண்களும், பெண்களும், ஒரு சில பெற்றோர்களும் கலந்து கொண்ட இந்த இளைஞர்களின் பேரணியைக் கலைக்க கொடூரமான தடியடி நடத்தியதோடு கடும் பனி பொழிந்துகொண்டிருந்த குளிர்காலத்தில் தண்ணீர் பீய்ச்சுதல் போன்றவை பிரயோகிக்கப்பட்டன. பெண்களுக்கு எதிரான இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம்தான் உள்ளன. மஹராஷ்ட்ராவில் பாந்த்ரா என்ற இடத்தில் மூன்று சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செயலற்று இருப்பது கண்டனத்துக்குரியது. இந்தியா முன்னேற வேண்டும் என்றால் நாட்டின் பெண்கள் பாதுகாப்பாக உணர வேண்டும். அது நம் அனைவரது கூட்டுப் பொறுப்பு. இதை சாதிக்கத் தேவைப்படும் அனைத்து விதமான உறுதியான, சட்டபூர்வமான மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை ஆதரிக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக உள்ளது. வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகள் உதவாது. முன்னுரிமை அடிப்படையில் குற்றவாளிகளை விரைவாக தண்டிக்க போலீஸ், சட்டம் மற்றம் நீதித் துறை அமைப்புகளின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

அஸ்ஸாமில் கொந்தளிப்பு

அசாமில் கொந்தளிப்பான நிலைமை நிலவுகிறது. திறனற்ற காங்கிரஸ் அரசின் ஒரே கவலை தன் வாங்கு வங்கி அரசியல்தான். லட்சக்கணக்கில் சட்ட விரோதமாக ஊடுருவி அஸ்ஸாமின் பல்வேறு பகுதிகளில் குடியேறியுள்ள வங்காள தேசத்தினருக்கு அரசு அடைக்கலம் அளித்துள்ளது எரியும் கொள்ளியில் எண்ணெய் வார்த்தாற்போல உள்ளது. இந்த ஊடுருவல் கும்பலுடன் நமது அசாம் பழங்குடி இன மக்கள் சேர்ந்து வாழ்வது அவர்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. சமீபத்தில், ராபா ஹசாங்கில் முறையற்று நடைபெற்ற தன்னாட்சி சபை கிராம பஞ்சாயத்து தேர்தலை எதிர்த்த போலாபரா மாவட்டத்தைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டனர். அங்கு வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் சட்டப்படி முறையாக ஆட்சேபணை எழுப்பியபோதும், கோகி அரசு சட்ட விரோதமாக குடியேறியவர்களின் வலியுறுத்தல் காரணமாக இந்த தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

இதற்கு முன் கிட்டத்தட்ட 50 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கோக்ரஜார் மாவட்டத்தின் உள்ளேயும், வெளியேயும் நடைபெற்ற நீண்ட காலம் நடைபெற்ற வகுப்புவாத இன வன்முறையால் வீடிழந்தனர். போதாக்களுக்கும் பங்களா தேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியுள்ள முஸ்லீம்களுக்கும் நடைபெற்ற வன்முறை மோதல்களால் எல்லையோர மாவட்ட மாநிலங்களில் மக்கள்தொகை விகிதாச்சரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன.

போடோக்கள் மிக அதிகம் இருக்கும் இடத்தில் வங்க தேசத்திலிருந்து ஏராளமானோர் சட்ட விரோதமாக ஊடுருவி குடியேறியுள்ளனர். அதிக எண்ணிக்கையில் இருக்கும் இவர்கள் போடோக்களிடமிருந்து அதிரடியாக, தகாத முறையில் நிலங்களைப் பறித்து, தங்கள் சொந்த நாட்டிலேயே ஓரங்கட்டப்படும் நிலையில் இவர்களைத் தள்ளிவிட்டுள்ளனர்.

அஸ்ஸாமிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்து வரும் டாக்டர் மன்மோகன் சிங் இந்த தேசிய பிரச்சினையில் உள்ள ஆழமான அச்சுறுத்தலை உணர்ந்திருக்க வேண்டும். தருண் கோகி தலைமையிலான அஸ்ஸாம் அரசு தனது பழங்குடி மக்களைப் பாதுகாக்க முற்றிலும் தவறிவிட்டது. பழங்குடியினர் மற்றும் அசாம் மற்றும் வட கிழக்கு மாவட்டங்களில் வசித்து வரும் நம் நாட்டு மக்களைவிட வங்க தேத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களின் நலன்தான் காங்கிரஸ் அரசுக்கு மிகவும் முக்கியம்.

ராமர் பாலத்திற்கு எந்த வகையிலும் சேதம் ஏற்படுவதை ஏற்க முடியாது

சேது சமுத்திர திட்டத்தின் கீழ் ராமர் பாலத்திற்கு எந்த வகையிலும் சேதம் ஏற்படுத்தக்கூடிய எந்த நடவடிக்கையையும் பாரதிய ஜனதா சட்சி வலுவாக எதிர்க்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சமீபத்தில், தீவிர சுற்று சூழல் மற்றும் பொருளாதார கவலை எழுப்பிய பச்சோரி குழுவின் அறிக்கையை நிராகரித்துவிட்டது. இந்தத் திட்டத்திற்கு ஒரு நடுநிலையானஅணுகுமுறை மூலம் நிச்சயம் ஒரு மாற்று வழியை காணலாம். ஆனால், இந்த அரசின் நோக்கமே சந்தேகத்துக்குரியதாக காணப்படுகிறது. இது ராமர் வாழ்ந்தார் என்பதே சந்தேகம் என்ற ரீதியில் உச்ச நீதி மன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தது. ஆனால், நாடு முழுவதும் கிளம்பிய ஆவேசமான எதிர்ப்பலைகள் காரணமாக இதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ராமர் பாலத்திற்கு எந்த சேதமோ அல்லது பாதிப்போ ஏற்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஸ்ரீ ராமபிரான் இந்தியாவின் கலாச்சார, ஆன்மீகத்தின் சின்னம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் சாரம். ஸ்ரீராபிரான் இல்லாமல் இந்தியாவின் அடையாளமே முழுமையடையாது. ராமர் பாலம் இல்லாமல் ராமாயணமும் முழுமையடையாது. ராமர் பாலத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்க முயற்சி செய்யப்போவதாக அறிவித்த தற்போதைய தமிழ்நாடு அரசைப் பாராட்டிய பாரதிய ஜனதா கட்சி, அதற்கான முனைப்பில் தாங்களும் இணைவோம் என்று உறுதி அளித்துள்ளது.

கங்கையும் யமுனையும் வெறும் நதிகள் மட்டுமல்ல, இவை இரண்டும் நம் நாட்டின் வாழ்வாதரமும், நமது பாரம்பர்யத்தை பிரதிபலிக்கும் சின்னங்களும்கூட. ஆனால் அவற்றின் தற்போதை நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. இந்த இரண்டு நதிகளையும் முன்பு அவற்றின் பெருமையாகத் திகழ்ந்த அதே தூய்மையும் தடையற்று பெருகும் தன்மையையும் உறுதி செய்வது தேசிய பொறுப்பாகும்.

திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், குஜராத்தில் பா.ஜ.க.வின் வரலாறு காணாத தொடர்ச்சியான மூன்றாவது முறை வெற்றி

முதலமைச்சர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் தொடர்ந்து மூன்றாவது பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அளித்த குஜராத் மக்களுக்கு தேசிய கவுன்சில் பாராட்டுத் தெரிவிக்கிறது. மிகத் திறமையான நிர்வாகத்தின் மூலம் மாநிலத்தில் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியும், அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள அபாரமான வளர்ச்சிக்காகவும் அம் மாநில மக்கள் மூன்றாவது முறையாக பெரும்பான்மை பலத்துடன் திரு. மோடியை வெற்றிபெறச் செய்துள்ளனர். குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர் மட்டத்  தலைவர்கள்கூட மிக மோசமான தோல்வியைத் தழுவினர்.

இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள திரு. சிவ்ராஜ் சிங் சவுஹான் மற்றும் திரு. ராமன் சிங் தலைமையில் இயங்கும், பா.ஜ.க. ஆட்சி புரியும் மாநிலங்களான மத்திய பிரதேசம், சத்தீஸ்கட் மாநிலங்களும் தங்களது அசாதாரணமான செயல்பாட்டினால், மூன்றாவது முறை வெற்றி என்ற சாதனையைப் பதிவு செய்யும் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை.

குஜராத் வெற்றியைக் கொண்டாடி வரும் அதே சமயத்தில் ஹிமாசல பிரதேசத்தில் நமது தோல்வியை நோக்கி நமது கவனத்தை செலுத்த வேண்டியது அவசியமாகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. விரைவிலேயே இங்க தேர்தல் நடத்தப்பட்டு ஒரு நல்ல அரசாங்கத்தை மக்கள் தேர்வு செய்ய வேண்டும். ஜனாதிபதி ஆட்சி மூலம் காங்கிரஸ் மறைமுகமாக இந்த மாநிலத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரச் செய்யும் முயற்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வைத்திருந்த நாகாலாந்து மக்கள் முன்னணி அரசிற்கு மறு தேர்தல் நடத்தப்பட்டதை நாங்கள் பாராட்டுகிறோம். இந்திய அரசியல் அமைப்புச் சாசனத்துக்கு உட்பட்டு, நாகாலாந்து பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதற்கு இதுதான் சரியான நேரம்.

இந்தியாவை மீட்டெடுக்க இதுதான் சரியான நேரம் – பி.ஜே.பி. தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணிதான் நம்பகத்தன்மை கொண்ட ஒரே மாற்று

வரிசையாக தொடர்ந்து நடைபெற்று வரும் ஊழலால் மக்கள் வெறுத்துப்போயுள்ளனர். தவறான நிர்வாகம், விலைவாசி உயர்வு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பொறுப்பற்ற தன்மை இவை எல்லாம் சேர்ந்து, சாதாரண மனிதனின் வாழ்க்கையை நரகமாக்கிவிட்டது. மக்கள் இப்போது திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் ஆட்சி புரிந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை நேசத்துடன் நினைத்துப் பாக்கின்றனர். அந்த ஆட்சியில் மிகப் பெரிய அளவில், நம்பிக்கை, உற்சாகம், பங்கேற்பு, கண்கூடாகத் தெரிந்த வளர்ச்சி, விலைவாசி உயர்வு கட்டுப்பாட்டில் இருந்த நிலை, ஒட்டு மொத்தமாக பொதுவாக அனைவராலும் உணரப்பட்ட நல்லெண்ண உணர்வு ஆகியவை இந்தியாவை, உலகில் முன்னணி போட்டியாளராக மேம்படுத்தின.

ஆனால், அந்த இடத்தில் இப்போது, சலிப்பு, நம்பிக்கையற்ற தன்மை காணப்படுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில், "பாதுகாப்பற்ற இந்தியா" மற்றும், "பாதிக்கப்பட்ட இந்தியா" என்ற இமேஜ் வந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் இந்தியா மறுவடிவம் பெற வேண்டியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கீழ் இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி விகிதம் 5% குறைவாக இருக்கையில், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையின் கீழ் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஆளும் மாநிலங்களான, குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கட், பிஹார், பஞ்சாப் மாநிலங்களின் வளர்ச்சி விகிதம் 10% க்கம் மேல் என்ற சாதனை அளவை எட்டியுள்ளன என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்.

மிகச் சிறந்த நிர்வாகம், பாரபட்சமற்ற தெளிவான தொலைநோக்கு ஆகியவற்றால்தான் இதை சாதிக்க முடிந்தது. நாட்டில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, தேசிய ஜனநாயக கூட்டணியை விரிவுபடுத்தி, தேர்தல் நடைபெறும்போது உறுதியான மாற்றம் வரும் என்ற நம்பிக்கையை உருவாக்குவதற்கு இதுதான் நல்ல சமயம். நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, பாரதிய ஜனதா கட்சி இந்தியாவுக்கு அதனுடைய சரியான இடத்தைப் பெற்றுத் தரும்.

நம்பிக்கை மிகுந்த இந்தியா, பாதுகாப்பும் பத்திரத்தையும் உறுதி செய்யும் இந்தியா, அனைத்து விஷயங்களிலும் முழுமையான, உலகளாவிய முன்னேற்றமடையும் இந்தியாவை உருவாக்குவோம் என்ற உறுதியை அளிக்க பா.ஜ.க. விரும்புகிறது. தேர்வு மிகத் தெளிவானது. நாட்டை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் துயரமான, மோசமான ஆட்சியிலிருந்து விடுவிப்பதற்கு, பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணியைத் தேர்ந்தெடுப்பதுதான் ஒரே மாற்று வழி. தேசிய கவுன்சில் கட்சியின் அனைத்து ஊழியர்களையும் இந்த இலக்கை நோக்கி அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட அழைக்கிறது.

பாரதிய  ஜனதா கட்சி தேசிய கவுன்சில்  கூட்டம்

Leave a Reply