அரசு உதவியுடன் நடத்தப்பட்ட ஆட்கடத்தல்ஒரு தேசமாக ஏமாற்றப்பட்ட நமது துயரமும் வலியும் ஆழமானது. அந்த அடிப்படையிலேயே பொது முக்கியத்துவம் கொண்ட இப்பிரச்னையை எழுப்புகிறேன். இந்திய மீனவர்களைக் கொன்ற இத்தாலிய மாலுமிகள் இரண்டு பேரும் அவர்களது கப்பல்களும் கேரள மாநிலத்தின் கடல் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன.

தற்போது அந்தக் கப்பல்களைக் காணவில்லை. அவர்கள் இங்கிருந்து தப்பிய செயல்பாடு என்பது இறையாண்மையுள்ள ஒரு நாடான இந்தியாவின் அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தை மோசடி செய்த நடவடிக்கையாகும். அரசு துணைபுரியும் தீவிரவாதங்களை நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் சட்டத்திற்கு கட்டுப்பட்ட நாடாக சொல்லிக்கொள்ளும் ஒரு அரசின் உதவியுடன் மோசடி நடவடிக்கை மற்றும் ஆட்கடத்தல் நடத்தப்பட்டுள்ளது. இது அரசு உதவியுடன் நடத்தப்பட்ட ஆட்கடத்தல் என்று குறிப்பிடுவதற்கு காரணம், இத்தாலிய அரசு சார்பில் இந்திய உச்சநீதிமன்றத்தில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருவரும் கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டும் என்று கேட்கப்பட்டது.

நாகரிகம் வாய்ந்த நீதிபரிபாலனத்தை இந்தியா கொண்டிருப்பதால் இத்தாலிய அரசின் கோரிக்கைக்கு உச்சநீதிமன்றம் செவிசாய்த்து விட்டது. அவர்கள் விடுத்த இரண்டாவது கோரிக்கை கொஞ்சம் சந்தேகத்துக்குரியது. அவர்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்று நாடு திரும்பவேண்டும் என்று கோரியதே அது. எனக்கு தெரிந்த வரையில் சட்டப்படி, ஒரு நபர் சிறையில் இருக்கும் போது அவருக்கு ஓட்டளிக்க உரிமை இல்லை என்பதே. ஒரு இந்திய கைதி, நீதிமன்றத்தை அணுகி, தான் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்று சொல்லி விடுவிக்க கோரினால் அந்தக் கோரிக்கைக்கு யாரும் செவிசாய்க்க மாட்டார்கள்.

உலகில் வேறெந்த நாட்டிலும் வசிக்கும் இத்தாலியர்களுக்கு இன்னொரு வசதியும் இருக்கிறது. இத்தாலிய அமைச்சகத்தின் அறிவிக்கைப்படி, வெளிநாடுகளில் வசிக்கும் இத்தாலியக் குடிமகன்கள், தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தெரிகிறது. அப்படியெனில் இங்கிருந்த இத்தாலிய மாலுமிகளும் தபால் மூலமே வாக்களித்திருக்கலாம். இதையெல்லாம் மீறி இத்தாலிய மாலுமிகளை அழைத்துச் சென்றதற்கு முன்திட்டம் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
 அரசு உதவியுடன் நடத்தப்பட்ட ஆட்கடத்தல்
தபாலில் வாக்களிக்கலாம் என்று சட்டம் அனுமதித்தும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள், இத்தாலி செல்லும் வசதியைக் கேட்டு, அந்தக் கோரிக்கையை இத்தாலி போன்ற ஒரு நாடு விடுக்கிறதெனில் அது அந்நாட்டின் இறையாண்மையுடன் தொடர்புடையது. அந்தக் கைதிகளை அழைத்துச் செல்லும் உத்தரவாதத்தை தூதரோ, அந்நாட்டு பிரதமரோ இந்திய உச்ச நீதிமன்றத்துக்கு கொடுத்துள்ளதாகவே அர்த்தம். ஆனால் அந்த உத்தரவாதத்தை அளித்து இரண்டு மாலுமிகளையும் தன் நாட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, பின்னர் இத்தாலிய அரசு, தனது கடமையை மறுத்து, அதிகார வரம்புகள் தொடர்பாக சர்ச்சைகள் இருப்பதாகக் கூறுவதும், அவர்களை திரும்ப இந்தியாவுக்கு போகச் சொல்ல மாட்டோம் என்றும் கூறுகிறது. இந்திய சட்டப்படி குற்றவாளிகளைத் தப்பிக்க வைப்பதற்கே இத்தாலிய அரசு உதவியிருக்கிறது.

இந்தியக் குடிமகன்களாக அவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களை விசாரிக்கும்போது, இந்தியச் சட்டத்தில் அதிகார வரம்புகள் தொடர்பான பிரச்னைகளை எழுப்பலாம். 1984 சம்பவங்கள் தொடர்பாக, அமெரிக்காவில் நிறைய பேர் வழக்குகளைத் தொடர்ந்தனர். நாம் அங்கே சென்று, அவர்களுக்கு அதை விசாரிக்க அதிகாரம் இல்லை என்று ஆட்சேபித்தோம். ஆனால் இந்தியாவிலோ இதுபோன்ற சம்பவம் மூன்றாம் முறையாக நடக்கிறது. 1980களில் ஆயுதபேரம் தொடர்பான வழக்கொன்றில், ஒருவர் இந்தியாவிலிருந்து மலேசியா வழியாக தப்பி அர்ஜெண்டினாவுக்குச் சென்று அடைக்கலம் ஆகிவிட்டார். அப்போது செய்வதறியாமல் திகைத்து நின்றோம். விவிஐபி சாப்பர் விமான ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில், நமது அதிகாரிகள் அங்கே சென்று, வெறுங்கையுடன் திரும்பிவிட்டனர். இப்போது இத்தாலியக் குடிமகன்கள் சிலர் மீதும் இந்தியாவில் வசிக்கும் சிலர் தொடர்பானதுமான லஞ்சக் குற்றத்திற்கான சாட்சியங்கள் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் நமது புலன் விசாரணையோ இவ்விஷயத்தில் முன்னேற வழியின்றித் திணறிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இத்தாலிய மாலுமிகளை அழைத்துச் சென்ற சம்பவம், ஒரு அரசே செய்யும் மோசடிக்கான உச்சபட்ச உதாரணம். இந்திய நீதிமன்றத்தின் பரிபாலன வரம்பிலிருந்து தப்பிக்கும் அப்பட்டமான செயல். இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் என்ன செய்யப்போகிறோம்? எதுவுமே செய்ய இயலாத அளவுக்கு நாம் கையாலாகாதவர்களா?

இதுபோன்ற மூன்று சம்பவங்கள் நடந்துவிட்டன. இந்நிலையில், ரோமானியர்கள் நம்மிடம் எப்படி நடந்துகொள்கிறார்களோ, அவர்களைப் போன்றே நாமும் அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் ராஜதந்திர ரீதியான உறவின் அனைத்து விதிகளையும் மீறியுள்ளனர். இந்திய அரசு நடவடிக்கையில் இறங்க வேண்டிய தருணம் இது. அயலுறவு சம்பிரதாயங்களைக் கடைபிடிக்க வேண்டிய நேரம் அல்ல.

  இத்தாலியத் தூதர் அந்நாட்டு அரசு சார்பாக ஒரு உத்தரவாதம் கொடுத்து மாலுமிகளை அழைத்துச் செல்வது அயலுறவு அடிப்படையிலான சலுகையின் கீழ் வருமா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது. அவர் இந்திய நீதிமன்றத்திடம் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஒரு நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டுக் கோரிக்கையை முன்வைத்த பிறகு ராஜதந்திரச் சலுகையைக் கோரக் கூடாது. முடிவை நீதிமன்றத்திடம் விட்டுவிட வேண்டும். இரண்டாவதாக, 1961இல் ஏற்பட்ட வியன்னா ஒப்பந்தம், அரசியல் சாசனம் இயற்றப்பட்ட்தற்குப் பிறகான ஒப்பந்தம். அந்த ஒப்பந்த்த்தின் முடிவை நமது உள்நாட்டுச் சட்டமாக மாற்றும் வகையில் அதற்கான சட்ட வரைவை உருவாக்கினோம். இந்தியாவில் பிறப்பிக்கப்படும் எந்தச் சட்டமும் இந்திய அரசியல் சாசனத்தையோ, உச்ச நீதிமன்றத்தையோ மீற முடியாது. அப்படி மீறினால் தன் நீதிமன்ற அவமதிப்புக்காக அந்தச் சட்ட்த்தைப் பிறப்பித்தவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் சட்டப் பிரிவு 129 இன்படி உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு. வியன்னா ஒப்பந்தம் என்பது இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 129 ஐ மீறாது. அரசியல் சாசன வரைவுக்கு பின்பு உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்கள் – வியன்னா ஒப்பந்தம் அவற்றில் ஒன்று – இந்திய அரசியல் சாசனத்தை மீற முடியுமா என்று சட்ட அமைச்சர் ஆராய்ந்து பார்க்கலாம். இத்தாலிய அரசும் அதன் தூதரும் உண்மையிலேயே இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் தங்கள் கோரிக்கையை முன்வைத்திருக்கும் நிலையில் இந்தச் சந்தேகம் எனக்குத் தீவிரமாக எழுகிறது.

மூன்றாவது முறையும் நாம் இப்படியான முறையில் நடத்தப்பட்டிருப்பதால், ராஜதந்திர ரீதியான நயத்தக்க நாகரிகங்களை நாம் மறக்கவேண்டும் என்று கோருகிறேன். நாம் ஒருபோதும் தீவிரமாக கருதாத ஒருவர் கூறிய சுவாரசியமான கூற்றை இங்கே எடுத்துரைக்க விரும்புகிறேன். "ஒருமுறை நடந்தால் அது செயல். இருமுறை நடந்தால் அது தற்செயல். மூன்று முறை நடந்தால் அது எதிரியின் செயல்". இதைக் கூறியவர் ஐயன் பிளமிங்கின் நாவலில் வரும் கதாபாத்திரமான ஜேம்ஸ் பாண்ட். அதன்படி, இத்தாலியின் இந்த தொடர் நடவடிக்கையை எதிரியின் செயலாக நாம் கருதவேண்டிய நேரம் இது. இந்திய எல்லைக்குள் குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபரை கடத்தி அழைத்துக்கொண்டு, இந்திய அதிகார வரம்புக்கு  வெளியே சென்றுவிட்டு, இனி அவர்களை அழைத்துவரவே முடியாது என்று கூறுவதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும். இந்த விஷயத்தில் இந்திய அரசு வேகமாக செயலாற்ற வேண்டும். இந்தப் பிரச்னைக்கு அதன் தீவிரத்துடன் முகம் கொடுத்தல் வேண்டும்.

நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்

Leave a Reply