காங்கிரஸ் கூட்டணி அரசு மீண்டும் தேர்தலில் வெற்றிபெறுவதற்கோ, மன்மோகன்சிங் தொடர்ந்து மூன்றாம் முறையாக பிரதமராவதற்கோ வாய்ப்பில்லை என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

சென்ற வியாழக் கிழமை பிரதமர் மன்மோகன் சிங்கிடம், “”2014இல் நடக்க உள்ள மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று, உங்களை பிரதமராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வலியுறுத்தினால் ஏற்றுக் கொள்வீர்களா? என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு, “”இது ஒருகற்பனையான கேள்வி. அதை போன்றதொரு நிலை வரும் போது, உரியமுடிவு எடுக்கப்படும்” என்றார் மன்மோகன் சிங்.

இதை தொடர்ந்து மூன்றாம் முறையாக மன்மோகன் சிங்குக்கு பிரதமராவதில் தயக்கம் இல்லை என கருத்து பரவலாக எழுந்துள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் ரவி சங்கர்பிரசாத் கூறியதாவது: ஹோலிபண்டிகை முடிவடைந்துள்ள நிலையில், மன்மோகன்சிங்கின் அரசியல் சாயம் வெளுக்க தொடங்கிவிட்டது. தனது உண்மையான அரசியல்நிறத்தை இப்போது அவர் வெளிப்படுத்தியுள்ளார். இது வரை அரசியலில் விருப்பம் இல்லாதவர் போல் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட மன்மோகன் சிங், உண்மையில் அரசியலில் எவ்வளவு ஆசையுள்ளவர் என்பது அவரது பதிலின்மூலம் தெரியவந்துள்ளது.
மன்மோகன்சிங் தலைமையிலான இந்த 9 ஆண்டுகால ஆட்சி பொதுமக்களுக்கு கவலை தரக்கூடியதாக உள்ளது. பல்வேறு ஊழல்கள், அரசின் செயல்படா தன்மை, மந்தகதியில் செயல்படும் மன்மோகன்சிங் போன்றவை மக்களுக்கு அதிருப்தியை உருவாக்கியுள்ளன . சில ஊழல்புகார்களில் பிரதமரின் அலுவலகம் மீதும் குற்றச்சாட்டு எழுப்பபட்டது. இந்த ஆட்சியை மீண்டும் கொண்டுவருவதில் மக்களுக்கு விருப்பமில்லை.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் , மாற்றத்தை ஏற்படுத்து வதற்கான தருணத்தை (தேர்தலை) மக்கள் எதிர்நோக்கியுள்ளனர் என்றார் .

Tags:

Leave a Reply