இலங்கையில் நிச்சயம் தமிழ்ஈழம் மலரும் இலங்கையில் நிச்சயம் தமிழ்ஈழம் மலரும். இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவிக்கும் துணிச்சல் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் குக்கு இல்லை என்று பா.ஜ.க மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார் .

தமிழக பா.ஜ.க., சார்பில் இலங்கை தமிழர் பிரச்னை குறித்த சிறப்புக் கூட்டம் சென்னை ராயப் பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் யஷ்வந்த்சின்ஹா பேசியது:

இலங்கைப் பிரச்னை தொடர்பாக பொதுமக்கள், மாணவர்கள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கொல்லப்பட்ட பாலச்சந்திரன் படத்தைப் பார்க்கும்போது யாருக்குத்தான் துன்பம் வராது? ரொட்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் குழந்தை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். அந்தக் குழந்தை குண்டுகளை முதுகில் வாங்கவில்லை. நெஞ்சில் வாங்கியிருக்கிறது.

வாஜ்பாய் தலைமையிலான அரசு இலங்கைப் பிரச்னையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப் பார்த்தது. ஆனால் காங்கிரஸ்தான் ஆரம்பத்தில் இருந்தே இலங்கைப் பிரச்னையில் தவறான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது.

இந்திரா காந்தி காலத்தில் 1974-ல் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. ராஜீவ் காந்தி இலங்கையில் நிச்சயம் தமிழ்ஈழம் மலரும் காலத்தில் இலங்கைக்கு அமைதிப்படை அனுப்பப்பட்டது. இதில் 2009 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 2005-ல் இலங்கையில் ராஜபட்ச தலைமையிலான புதிய அரசு வந்ததில் இருந்தே அவர்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு உறுதுணையாக இருந்து வருகிறது. இலங்கை அரசின் அனைத்து வகையான குற்றங்களுக்கும் இதுதான் காரணம்.

இலங்கையில் கிடைத்த ஆதாரங்கள், இந்தியாவில் கிடைத்த ஆதாரங்களை வைத்து நாடாளுமன்றத்தில் காங்கிரûஸ குற்றம்சாட்டி பேசினேன். அதற்கு காங்கிரஸ் கட்சியினர் ஒருவர்கூட குறுக்கீடு செய்யவில்லை. அப்படி என்றால் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு காங்கிரசும் காரணம் என்பதை அக்கட்சினரே கூட ஒப்புக்கொள்கின்றனர் என்றுதான் அர்த்தம்.

2009-ல் இறுதி யுத்தம் நடந்தபோது ராஜபட்ச அரசுக்கு காங்கிரஸ் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்தது. இந்தியாவின் உச்சபட்ச தலைமைவரை எங்களுக்கு உதவியிருக்கிறது என்று இலங்கை அரசு கூறுகிறது. அப்படியென்றால் மன்மோகன்சிங் வரை ஆதரவு என்றுதானே அர்த்தம்?

நட்பு எப்படி இருக்க வேண்டும்? இலங்கை அரசை இந்தியா நிர்பந்தம் செய்யுமானால், சீனா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துவிடும் என்று மத்திய அரசு இப்போது சாக்குபோக்கு சொல்கிறது. ஆனால் இப்போதும் இலங்கையில்தான் சீனா அமர்ந்துள்ளது. அதைத் தடுப்பதற்கு இந்தியாவால் முடிந்ததா?

நட்பு என்பது பரஸ்பரமாக ஏற்பட வேண்டுமே அல்லாமல், நயந்து சென்று பெறுவதாக இருக்கக் கூடாது. இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் இந்தியாவே தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன். ஆனால் காங்கிரஸ் அரசு, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தையே நீர்த்துப் போகச் செய்து ஆதரித்துள்ளது.

தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை அகற்ற வேண்டும் என்றும் கோரினேன்.

ஆனால் செவிமடுக்கப்படவில்லை. இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும். அந்தத் தேர்தல் சர்வதேச கண்காணிப்பின் கீழ்தான் நடத்தப்பட வேண்டும்.

இதற்கு இலங்கை அரசு ஒத்துக்கொண்டால்தான் தமிழர்கள் பற்றிய சிந்தனையில் இலங்கைக்கு மாற்றம் வந்துள்ளது என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியும்.

இலங்கை தவிர்த்த மற்ற உலகநாடுகளைச் சேர்ந்த ஒரு குழுவை அமைத்து இலங்கையில் போரின்போதும், போருக்குப் பிறகும் மனித உரிமை மீறல் எவ்வாறு நடைபெற்றது என்பதை ஆராய வேண்டும்.

இதுதொடர்பாக நடாளுமன்றத்தில் வலியுறுத்திய போது, வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கையில் தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறோம் என்கிறார்.

வீடு கட்டிக் கொடுப்பது மனித உரிமைகளை பெற்றுத்தருவதாக அமையாது. இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது என்பது இந்தியா முழுவதும் உள்ளவர்களின் கோரிக்கை. இந்தியா நினைத்தால் இதனை எளிதாகச் செய்யலாம். ஆனால் இந்தியா செய்யுமா என்பது சந்தேகம்.

தமிழீழம் அமையும்: அடக்குமுறையின் மூலமாக ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க முடியாது. அடக்குமுறை அதிகரித்தால் அப்பகுதியில் உள்ள மக்களின் சுதந்திர உணர்வும் அதிகரிக்கும். பாகிஸ்தானின் அடக்குமுறையால்தான் வங்கதேசம் உருவானது. வடக்கு சூடான், தெற்கு சூடான் என பிரிந்திருப்பதற்கு ஆட்சியாளர்களின் அடக்குமுறைதான் காரணம். எனவே ராஜபட்ச அரசுக்கு நான் சொல்வது அடக்குமுறையைச் செலுத்தி னால் ஈழம் அமைய வெகுநாள் ஆகாது. ஆனால் இன்னும் காலம் இருக்கிறது. அதனால் ராஜபட்ச அரசு திருத்திக் கொள்ள வேண்டும்.

பலவீனமான அரசு: தமிழக மீனவர் பிரச்னைக்கு முக்கியக் காரணம் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததுதான். அதோடு பலவீனமான மத்திய அரசு மற்றும் பலவீனமான பிரதமர் இருப்பதுதான். வருங்காலத்தில் பாஜக ஆட்சி அமையும். அப்போது தமிழர்கள் பிரச்னைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும் என்றார் அவர்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன், மூத்த தலைவர் இல.கணேசன், மாநில துணைத் தலைவர் எச். ராஜா, மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச்செயலாளர் மோகன்ராஜுலு, அகில இந்தியச் செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்  உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்

Leave a Reply