நீதிபதிகள் நியமனத்தில் சம அதிகாரமுள்ளோர் ஆட்சிக்குழு - மறுபரிசீலனை தேவை. நீதிபதிகள் நியமனத்தில் சம அதிகாரமுள்ளோர் ஆட்சிக்குழு – மறுபரிசீலனை தேவை. பாரதம் கடந்த 65 ஆண்டுகளாக சுதந்திர தேசம். இந்த 65 ஆண்டுகளில் தேசத்தின் அளப்பரிய சாதனை என்னவென்று கேட்டால் "ஜனநாயகம்" என்று சிறு தயக்கமும் இன்றிச்
சொல்வேன்.

நாம் ஏழ்மையை விரட்டவில்லை. நம் மக்கள் அனைவருக்கும் கல்வி தரவில்லை. ஊட்டச்சத்துக் குறைபாடு தேசத்தின் பெரிய குறைபாடாக இன்னும் உள்ளது. மேற்கத்திய
அறிஞர்களின் தீவிரமான வெறுப்பு சார்ந்த குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும், பாரதம் மட்டுமே அந்நிய ஏகாதிபத்திய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற வளரும்
நாடுகளிலேயே பல கட்சிகள் கொண்ட பலம்மிக்க ஜனநாயகமாக 1974 முதல் பீடுநடை போடுகிறது.

1975 முதல் 1977 வரையிலான அவசரநிலை இருந்தது உண்மை. அது ஒரு விதிவிலக்கு. அந்தக் காலகட்டத்தில் சட்டத்தின் ஆட்சி, பேச்சு எழுத்து உள்ளிட்ட அடிப்படை
ஜனநாயக உரிமைகள் அடக்குமுறையின் நிழலில் ஒளியிழந்து போயின. ஜூன் 1975ல் அன்றைய பிரதமரின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவித்த அலஹாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு பிரதமரை அடுத்த ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடக்
கூடாது என்று தடை செய்தது. இதன் காரணமாக அரசியல் சாசனம் வரையறுத்த ஜனநாயகத்தை வேரறுத்துப் போட ஒரு கபடத்தனமான திட்டம் அதிகாரத்தில் இருந்தோரால்
தீட்டப்பட்டது.

பண்டித ஜவஹர்லால் நேருவால் துவக்கப்பட்ட 'தி நேஷனல் ஹெரால்ட்' என்ற பத்திரிக்கை ஒரு கட்சி ஜனநாயகத்தைப் போற்றி, தான்சானியா போன்ற சில ஆப்பிரிக்க நாடுகளை உதாரணம் காட்டி ஒரு தலையங்கம் எழுதியது. அதில்  ஆங்கிலேயர்களின் பாராளுமன்ற முறை சிறந்தது என்று சொல்வதற்கு இயலாது என்றும், சில ஆப்பிரிக்க நாடுகளில் வெளிப்பார்வைக்கு ஜனநாயகம் இல்லாதது போலத் தோற்றம் இருப்பினும் மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. மைய அரசு வலுவுடன் இருக்கவேண்டும் என்பதை வலியிறுத்தும் வகையில் இந்திய ஜனநாயகத்தின் சாதகங்கள் பட்டியலிடப் பட்டிருந்தன. பலவீனமான மைய அரசு தேசத்தின் ஒருமைப் பாட்டுக்கும் இறையாண்மைக்கும் சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தலாகவே இருக்கும் என்று கூறியது

அக்கட்டுரை. பிரதமர் இந்திரா அதில் முக்கியாமன ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். "தேசத்தின் சுதந்திரம் பிழைககாது போனால் ஜனநாயகமும் பறிபோகுமே
பரவாயில்லையா?" என்பதே அக்கேள்வி.

1975 முதல் 1977 வரையிலான அவசர காலத்தில் நடந்தது போல இருநூறு ஆண்டு கால ஆங்கிலேய ஆட்சியில்கூட பேச்சுரிமை எழுத்துரிமை உள்ளிட்ட அடிப்படை
உரிமைகள் மிருகத்தனமாகப் பறிக்கப்படவில்லை. 1,10,806 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 253 பேர் பத்திரிகையாளர்கள்.

இத்தனை கொடுமைகள் நிகழ்ந்த போதிலும் ஜனநாயகம் பிழைத்துக் கொண்டது. இதற்குக் காரணம் என்று நான் இரு அமைப்புகளைச் சொல்வேன். ஒன்று நீதித்துறை, மற்றொன்று 1977ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசைத் தண்டித்த மக்கள் சக்தி. மக்கள் சக்தி காங்கிரசுக்கு அளித்த தண்டனையால் இனி வருங்காலங்களில் எந்த அரசுக்கும் அரசியல் சாசனத்தில் உள்ள அவசரச் சட்ட விதிகளை 1975ல் மூர்க்கத்தனமாகச் செய்தது போல மிகத் தவறான முறையில் பயன்படுத்தும் எண்ணமே எழாது.

ஏறத்தாழ அனைத்துப் பிரபலமான அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், மிசா எனப்படும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம் என்ற
கொடுமையான சட்டத்தின்படி கைது செய்யப்பட்டனர். இவர்களில் புகழ்பெற்ற அரசியல் தலைவர்களான ஜெய்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், சந்திரசேகர், அடல்
பிஹாரி வாஜ்பாயி ஆகியோர் அடங்குவர். மொத்தமாக மிசாவில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 34,988 பேர். இந்தச் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டோருக்கு
எந்த உரிமையும் தரத்தேவையில்லை.

மிசா கைதிகள் அனைவரும் தத்தமது மாநில உயர்நீதிமன்றங்களில் ஆள்கொணர்வு மனுப் போட்டனர். அவசர காலத்தில் அனைத்து அடிப்படை உரிமைகளும் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் ஆள்கொணர்வு மனுப்போட யாருக்கும் உரிமையில்லை என்று அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் அரசு ஒரே விதமான ஆட்சேபம் தெரிவித்தது. ஏறத்தாழ அனைத்து உயர்நீதிமன்றங்களும் அரசின் ஆட்சேபத்தை ஏற்க மறுத்து மனுதாரர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தன. அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததோடு நில்லாமல் அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதிகளை வேறு இடங்களுக்கு மாற்றியது. எனது சிறைக்கால நாட்குறிப்பில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்த காரணத்தால் மாற்றப்பட்ட 19 நீதிபதிகளின் பெயர்களையும் பதிந்து வைத்துள்ளேன்.

எனது 16 டிசம்பர் 1975 தேதியிட்ட நாட்குறிப்பிலிருந்து: மிசா கைதிகளுக்கு ஆதரவான உயர்நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக இந்திய அரசின் மேல் முறையீட்டை உச்சநீதிமன்றம் அன்று விசாரித்தது. இதில் எங்கள் வழக்கும் விசாரணைக்கு வந்தது. (நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு நிலைக்குழு கூட்டத்துக்காக பெங்களூர் சென்றிருந்தோம், ஆனால் கூட்டத்துக்கு முன்பே கைது செய்யப்பட்டோம்.) நீதியரசர் கன்னாவிடம் விசாரணைக்கு வந்தது வழக்கு அரசு வக்கீல் நிலன் டே வாதாடினார். நீதிபதி அரசுவக்கீலிடம் அரசியல் சாசனத்தின் 21ஆவது பிரிவு அடிப்படை உரிமைகள் குறித்து மட்டுமல்ல, வாழ்வுரிமை பற்றியும் எடுத்துரைக்கிறது. ஒருவேளை ஒருவர் கொல்லப்பட்டாலும் நிறுத்திவைக்கப்பட்ட உரிமைகளின் காரணமாக அவருக்கு எந்தவித பரிகாரமும் இல்லையா என்று நீதிபதி கேட்டார். அதற்கு பதிலளித்த அரசு வக்கீல்," என் மனசாட்சி கொண்டு எடைபோடப்பட வேண்டிய கேள்வி இது. ஆனால் சட்டத்தின் நிலைப்பாடு அப்படித்தான்" என்றார்.

அதன் பிறகு பல உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த பெயர் கெடுத்த வழக்கின் தீர்ப்பு தவறானது என்று வெளிப்படையாகவே கூறினர். சிலர் தம் முந்தைய கருத்துக்களைத்
திரும்பப் பெற்றனர்.

2011ல் உச்சநீதிமன்றம் ஜபல்பூர் கூடுதல் நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து 1976ல் சிவகாந்த் சுக்லா தொடர்ந்த வழக்கில் அரசியல் சாசன அமர்வின் பெரும்பான்மைத் தீர்ப்பு
நாட்டின் பெரும்பாலான மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக அமைந்தது. அதனால் தவறு என்று கூறியது. நீதியரசர் கன்னாவின் இணங்காத் தீர்ப்பே நாட்டின்
சட்டமானது.

நீதியரசி ருமா பால் பேசும்தற்காலத்தில் நாட்டின் முக்கியப் பிரச்சினை ஊழல். ஒரு காலத்தில் ஊழல் என்பது அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருந்தது. நீதித்துறையில் ஊழலைப்பற்றி யாருமே பேசியதே இல்லை, அதிலும் குறிப்பாக உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீதான ஊழல் குறித்துப் பேச்சே கிடையாது. ஆனால் தற்காலத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. முன்னாள் நீதிபதியும் சட்டநிபுணருமான தார்குண்டே நினைவுச் சொற்பொழிவில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசி ருமா பால் பேசும் போது நீதிபதிகளின் ஏழு பாவச் செயல்கள் குறித்துக் குறிப்பிட்டார்.

ஏழில் ஒன்று ஊழல். நீதித்துறையில் ஊழல் என்பது அதன் நம்பகத்தன்மையைக் குலைப்பதாகவும் நீதித்துறையின் சுதந்திரத்துக்குச் சவால் விடுவதாகவும் அவர் தெரிவித்தார். அதே போல நீதிபதிகளின் தேர்வில் உணரத்தக்க பல மாற்றங்கள் வந்துள்ளன. நீதியரசி ருமா பால் ஒரு சிறந்த சட்ட நிபுணர், நாணயமானவர், வெளிப்படையான சிந்தனை கொண்டவர். இவரே பேசும் போது ஓய்வு பெற்ற பாதுகாப்போடு பேசுவதாகத் தெரிவித்தார்.

1975ல் நிகழ்ந்தது போன்ற ஒரு நிலை வந்தால் நமது தற்போதைய நீதித்துறை எப்படி எதிர்கொள்ளும் என்று நான் யோசிப்பதுண்டு. உயர்நீதிமன்ற நீதிபதிகள் 19 பேர் அன்று செய்தது போல எத்தனை பேர் அத்தகைய ஒரு நிலையில் இன்று மிசா கைதிகளுக்கு ஆதரவாக அரசுக்கு எதிரான தீர்ப்பைத் தருவார்கள்? எனக்குச் சந்தேகம் தான்.
தற்சமயம் நீதித்துறை நியமனங்கள் மற்றும் மாற்றங்கள் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் நான்கு நீதிபதிகள் கொண்ட ஒரு நீதிமன்றக் குழுவால் செய்யப்படுகிறது.

இது (Collegium) ஆட்சிக்குழு என்று அழைக்கப்படுகிறது. இந்த முறை 1993, 1994 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் நீதித்துறை நியமனங்கள் சம்பந்தமாக வழங்கப்பட்ட தொடர் தீர்ப்புகளின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. இத்தொடர்களின் முதல் மற்றும் இரண்டாவது தீர்ப்புகள் நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி நீதியரசர் ஜே.எஸ். வர்மா அவர்களால் வழங்கப்பட்டது. நீதியரசர் வர்மா ஃப்ரண்ட்லைன் பத்திரிகைக்கு   நீதியரசர் வர்மா (28, அக்டோபர் 2008) அளித்த பேட்டியில், "எனது 1993 தீர்ப்பு மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுத் தவறாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் தான் அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலான செயல்பாடுகள் சில காலங்களாகவே பல தீவிரமான, அறிவிற்கொவ்வாதவை என்று தட்டிக்கழிக்க முடியாத கேள்விகளை எழுப்புகின்றன. ஆகவே இதன் மறுபரிசீலனை அவசியமாகிறது." என்று கூறினார்.

2006ல் சட்ட ஆணையம் தனது 214ஆவது அறிக்கையில் பல்வேறு நாடுகளில் நீதித்துறை நியமனங்களை ஆராய்ந்து கூறியது. "மற்ற எல்லா அரசியல் அமைப்புகளிலும் நிர்வாகமே நீதித்துறை நியமனங்களுக்குப் முழுப்பொறுப்பு வகிக்கிறது அல்லது தலைமை நீதிபதியைக் கலந்தாலோசித்து நியமிக்கிறது. இந்திய அரசியல் சாசனம் தலைமை நீதிபதியைக் கலந்தாலோசித்து நியமிக்கும் முறையையே பின்பற்றி வந்தது. ஆனால் இரண்டாவது நீதிபதிகள் வழக்கு நிர்வாகத்தை நீதித்துறை நியமனங்களில் இருந்து முற்றிலும் தடுத்து விட்டது.

நீதியரசர் வர்மாவின் ஃப்ரண்ட்லைன் பேட்டியைக் குறிப்பிட்டு சட்டக்கமிஷன் இவ்வாறு கூறுகிறது: "இந்திய அரசியலமைப்புச் சட்டம் மிகச் சிறந்த ஒரு சரிபார்த்தல் சமநிலைப்படுத்தல் முறையினை சட்டப்பிரிவுகள் 124(2) மற்றும் 217(1) ஆகியவற்றின் கீழ் அளித்துள்ளது. இப்பிரிவுகளின் படி உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் நிர்வாகம் மற்றும் நீதித்துறை இரண்டுக்குமே சமமான பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன, முந்தைய அதிகார சமநிலை மீண்டும் கொண்டு வரப்படுவது தற்போது அவசியமாகிறது." என்று சட்ட ஆணையம் கூறுகிறது.

நாம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, நமது நீதித்துறை உயர்நிலை நியமனங்கள் குறித்துச் சிந்திக்கிற போது அவற்றில் வெளிப்படைத்தன்மை, நயத்தகு நேர்மை மற்றும் உரிய தகுதி, திறமை ஆகியவை இருக்கவேண்டும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தும் தனது தார்குண்டே நினைவுச் சொற்பொழிவில் நீதியரசி ருமா பால் "நீதிபதிகள் நியமனம் நமது நாட்டில் மிகவும் கவனத்துடன் காக்கப்படுகிற ரகசியமாக இருக்கிறது" என்றே கூறுகிறார்.
"இந்த முறையின் மறைபொருள் என்னவென்று பார்த்தால் ஒரு சிறு தளத்தில் இருந்து தேர்வுகள் செய்யப்படுகின்றன. இத்தேர்வுகளின் ரகசியம் மற்றும் மறைவடக்கம் சில தவறுகள் நிகழ்வதற்கும் வாய்ப்பளிப்பதாக அமைந்துவிடுகிறது. சில மோசமான தருணங்களில் வேண்டியவர்களுக்கு வேண்டாத சலுகைகள் அளிக்கப்படுவதும் நடக்கிறது," என்கிறார் நீதியரசி ருமா பால்.

கூரிய தெளிவற்ற சில கருத்துக்கள் அல்லது வதந்திகள் நீதிபதி பதவிக்கான ஒருவரின் தகுதியைக் கேள்விக்குறியாக்கிவிடுகின்றன, நட்பும் கடமைப்படுதலும் சில சமயங்களில் தேர்வுக்கான சிபாரிசுகளுக்கு நிறம்பூசிவிடுகின்றன என்றும் அவர் தெரிவிக்கிறார்.

நன்றி ; எல்.கே. அத்வானி

நன்றி தமிழில்  ; அருண் பிரபு

Leave a Reply