நரேந்திரமோடி குறித்து ஆதாரமற்ற ஊகங்களை பேசக்கூடாது மத்தியில் ஆளும் ஐ.மு.,கூட்டணியின் ஊழல் ஆட்சியை நீக்க எதிர்க்கட்சிகளும் பாஜகவின் கூட்டணி கட்சிகளும் கவனம் செலுத்தவேண்டும் துரதிருஷ்ட வசமாக, இதை செய்யாமல் பாஜக முதல்வர்களின் மீது கவனம் செலுத்தி தங்களது சக்தியை வீணாக்குகிறார்கள் என்று பா.ஜ.க., செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளத்தின் தேசியக்குழு கூட்டத்தில் பேசிய பிகார் முதல்வர் நிதீஷ்குமார், மதச்சார்பற்றவர் ஒருவர் மட்டுமே பிரதமர் வேட்பாளராக இருக்கமுடியுமென தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதுதில்லியில் ஞாயிற்றுக் கிழமை இதுகுறித்து பேசிய பா.ஜ.க., செய்தித்தொடர்பாளர் நிர்மலாசீதாராமன், ஐக்கிய ஜனதா தளத்தின் கருத்தை நிராகரித்தார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குகூட்டணி ஒழுங்காக செயல் படாமல் அனைத்து துறைகளிலும் நாட்டை சரிவுப்பாதையில் இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. இந்த ஊழல் ஆட்சியை நீக்கவேண்டும் என்கிற விஷயத்தில் எதிர் கட்சிகளும் பா.ஜ.க.,வின் கூட்டணி கட்சிகளும் கவனம் செலுத்தவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

துரதிருஷ்டவசமாக, ஐ.மு. கூட்டணியை நீக்குவதில் கவனம்செலுத்தாமல், பா.ஜ.க., முதல்வர்கள் மீது கவனம்செலுத்த தங்களது சக்தியை பயன் படுத்துகிறார்கள். ஆனால் பா.ஜ.க., தனது நோக்கத்தில் உறுதியாக இருக்கும்.

நரேந்திரமோடி குறித்து ஆதாரமற்ற ஊகங்களை பேசக்கூடாது. நரேந்திரமோடிக்கு எதிரான ஆதாரமற்ற அனைத்து ஊகங்களையும் நாங்கள் மறுக்கிறோம் என்றார்.

Leave a Reply