நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில் உண்மையை மறைத்ததற்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டுமென்றும், இது தொடர்பான சிபிஐ விசாரணை அறிக்கையில் திருத்தம் செய்ததற்காக சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென்றும் பிஜேபி தரப்பில் இன்று நாடாளுமன்றத்தில்

வற்புறுத்தப்பட்டது. இது தொடர்பாக ஏற்பட்ட அமளியால் இரு சபைகளும் இன்று மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டன.

.
பிரதமர் மன்மோகன் சிங் 2006ம் ஆண்டு நிலக்கரி இலாகாவை நிர்வகித்த காலத்தில் சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சட்ட அமைச்சர் தலையிட்டு அதில் திருத்தங்கள் செய்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் நேற்று தொடங்கியபோதே இந்த பிரச்சனை உட்பட பல்வேறு பிரச்சனைகளால் சபையில் அமளி ஏற்பட்டது. இன்று காலை 2வது நாள் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக பிஜேபி நாடாளுமன்ற கட்சிக்கூட்டம் அத்வானி தலைமையில் நடைபெற்றது. இதில் நிலக்கரி ஊழலில் உண்மையை மறைத்ததற்காக பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்யவேண்டும் என்றும், இதற்கு உதவிய சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று காலை மக்களவை கூடியபோது கேள்வி நேரத்தை ஒத்தி வைப்பதற்காக பிஜேபி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இது ஏற்கப்படாததை தொடர்ந்து ஏற்பட்ட அமளி காரணமாக பகல் 12 மணிவரை சபை ஒத்தி வைக்கப்பட்டது.
இதைபோல் மாநிலங்களவை இன்று காலை தொடங்கியதும் பிஜேபி துணைத் தலைவர் ரவிசங்கர் பிரசாத் இந்த பிரச்சனையை எழுப்பினார். மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசு நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் சீர்குலைத்து விட்டது.

சிபிஐயின் செயல்பாட்டிலும் தலையிட்டுவிட்டது. எனவே பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும். சட்ட அமைச்சர் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்றார். இதற்கு அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் கூறினார்.

இதனை தொடர்ந்து ஏற்பட்ட அமளியால் மாநிலங்களவையும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிஜேபி துணைத் தலைவர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில், ஐ.மு. கூட்டணி அரசு முதலில் ஊழலில் ஈடுபட்டது. அதன் பிறகு உண்மையை மறைப்பதில் ஈடுபட்டு வருகிறது. இந்த அரசு நாட்டை ஆளும் தகுதியை இழந்துவிட்டது என்றார்.

பகல் 12 மணிக்கு இரு சபைகளும் மீண்டும் கூடியபோதும் இதே பிரச்சனை எழுந்தது. அப்போது ஏற்பட்ட அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதற்கும், மாநிலங்களவை மதியம் 2 மணிவரையிலும் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

Tags:

Leave a Reply