தமிழக மக்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்பட அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து தனது அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது :

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை பா.ஜ.க., வரவேற்கிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரு அணுஉலைகளும் செயல்பட தொடங்கினால் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் என்பதும் அதில் தமிழகத்துக்கு 1,000 மெகாவாட் கிடைக்கும் என்பதும் மகிழ்ச்சிக்குறிய செய்தியாகும்.

அணுஉலைக்கு எதிராகப்போராடும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கூடங்குளம் பகுதியில் புதியதொழிற்சாலைகள் உள்ளிட்ட வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அப்பகுதியில் மருத்துவக்கல்லூரி ஒன்றையும் தொடங்க வேண்டும்.
பாதுகாப்பு , சுகாதார நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.கடும் மின் வெட்டால் அவதிப்பட்டுவரும் தமிழக மக்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply