கொலை குற்றவாளிகளை தப்பிக்கவைக்க காவல்துறையை மிரட்டுவதா? ஆடிட்டர் ரமேஷ் கொலை குற்றவாளிகளை தப்பிக்கவைக்க காவல்துறையை மிரட்டுவதா?- என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:–

இஸ்லாமிய சமய, சமுதாய, அரசியல்கட்சிகளின் கூட்டமைப்பின் பஷீர், பத்திரிகை பேட்டியில் பாஜக.வின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலையைசெய்தவர்கள் முஸ்லீம்கள் எனக் கூறி அரசியல் ஆதாயம்தேட முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

பாஜக.வின் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகளின் புகைப்படத்தை வெளியிட்டு, அவர்களைப் பற்றி துப்புகொடுத்தால் தகுந்த பரிசு கொடுக்கப்படும் என அறிவித்துள்ளார்கள். எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படி காவல் துறை அறிவிக்காது என்பது எல்லோருக்கும்தெரியும்! கடந்த 25 ஆண்டுகளாக இந்து இயக்கத்தைச்சேர்ந்த 148 பேரை இதுபோல் கொலைசெய்துள்ளனர்.

குற்றவாளிகளைத் தப்பிக்கவைக்கவோ, அல்லது காவல்துறை, அரசு அதிகாரிகளை மிரட்டவோ, திசைதிருப்பவோ ஊடகங்களில் இது போன்ற கருத்தை பஷீர் பதிவுசெய்துள்ளதாக இந்து முன்னணி எச்சரிக்கிறது.

அத்வானியின் ரத யாத்திரையில் பைப்வெடிகுண்டு சதியில் தேடப்பட்ட முதன்மையான, முக்கியமான குற்றவாளி கைதுசெய்யப்பட்டது எப்படி? அவனுக்குப் பாதுகாப்புகொடுத்தது யார்? ஆதாரமில்லாமல் குற்றவாளிகள்மீது எந்த நடவடிக்கையையும் காவல்துறை எடுக்க முடியாது என்பதுதான் உண்மை!

டாக்டர் அரவிந் ரெட்டியும், வெள்ளையப்பனும், ஆடிட்டர் ரமேஷும் அப்பழுக்கற்ற தேச பக்தர்கள். அவர்கள்கொலையை அடுத்து வேலூரிலும், சேலத்திலும் இயக்கத்தினர் மட்டுமல்ல பொது மக்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள். நற்குடியில்பிறந்து, நாடுபோற்ற வாழ்ந்தவர்கள். அடுத்து அடுத்து நடந்த இந்த இரண்டுகொடூர கொலைகளை பார்த்த தமிழக மக்கள் மிகுந்தகோபத்தில் உள்ளனர் என்றார்.

Leave a Reply