வாஜ்பாய்க்கு புகழாரம் மாநாட்டில் பேசிய வைகோ முன்னாள் பிரதமர் வாஜ்பாயை புகழ்ந்து பேசினார். அவர் கூறுகையில், ஒரு நாள் இரவு எனது தொலைபேசி ஒலித்தது. மறுமுனையில் ஆண்டன் பாலசிங்கம் பேசினார். விடுதலைப் புலிகளின் கப்பலை இந்திய கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளது. இது குறித்து பிரபாகரன் உங்களிடம் சொல்லச்சொன்னார்

உடனே மறுநாள் காலை டெல்லி விரைந்து பிரதமர் அலுவலகத்தில் வாஜ்பாயை சந்தித்துப் பேசினேன்.இலங்கை அரசுக்கு சீனாவும், பாகிஸ்தானும் ஆயுதங்கள் தருகின்றன. புலிகள் தாங்களாகவே ஆயுதங்களைத் திரட்டி போரிடுகிறார்கள். அவர்களுக்கு ஒரே வழி கடல் தான். அதை எப்படி நீங்கள் தடுக்கலாம். இந்தியாவும் ஆயுதம் தராது.. அவர்களாக திரட்டி போரிட்டாலும் அதை ஏன் தடுக்கிறீர்கள். அவர்களது லைப் லைன் அது தான். அதை எப்படி தடுக்கலாம் என்றேன்.

இதையடுத்து புன்முறுவலுடன் தலையை ஆட்டிவிட்டு, ஐ வில் டேக் கேர் வைகோ, டோன்ட் ஒர்ரி என்றார். இதன் பிறகு புலிகளின் கப்பல்களுக்கு இந்தியக் கடற்படையால் பிரச்சனையே வந்ததில்லை. அந்த அளவுக்கு மனிதாபிமானம் காட்டினார் வாஜ்பாய். ஒருமுறை  இந்தியாவிடம் இலங்கை ஆயுதம் கோரியது. இதையடுத்து உடனே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்றேன். என்னை மகன் போல நடத்திய வாஜ்பாய் உடனே அதைக் கூட்டினார். அதில் இலங்கையில் தமிழர்கள் படும்பாட்டை விளக்கினேனே. சோனியா, மன்மோகன் சிங்கெல்லாம் அதில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களை அழைத்த வாஜ்பாய், இலங்கைக்கு இந்தியா ஆயுதம் தராது என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஆயுதங்களை விற்கக் கூட மாட்டோம் என்று அறிவித்தார்.

அதே போல நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை தனியார்மயமாக்க முடிவு செய்யப்பட்டபோது வாஜ்பாயின் வீட்டுக்கு ஓடினேன். எல்லா முடிவும் எடுத்தாச்சே வைகோ என்றார். நீங்கள் நினைத்தால் அதைத் தடுக்கலாம்.. என்னை மகன் மாதிரி என்றீர்களே.. இது தமிழர்களின் சொத்து. இதைக் காக்க வேண்டும். இதை எனது மன்றாடலாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். ஓ.கே. வைகோ, அதை தனியாருக்கு விற்க மாட்டோம் என்று சொல்லி எனக்கு அதிர்ச்சி தந்தார்.

இதை பிரஸ்சுக்கு சொல்லலாமே என்று கேட்டேன். தாராளமாய் சொல்லுங்கள் என்று சிரித்தார். தனியார்மயமாக்கும் திட்டத்தை தூக்கி வீசச் சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவும் போட்டார்.
குமரியில் காமராஜருக்கு நினைவுமண்டபம் எழுப்ப மத்திய சுற்றுச்சூழல்துறையில் இருந்து பிரச்சனை வந்தபோது வாஜ்பாயிடம் தான் சென்றேன். என்ன, மாபெரும் தலைவர் காமராஜரின் நினைவு மண்டபத்துக்கு தடையா என்று கோபத்துடன் கேட்டவர் அதிகாரிகளை அழைத்து உடனடியாக அனுமதி தர உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டியபோது, நீதிமன்றத்தில் நாங்கள் பதில் சொல்லிக் கொள்வோம். முதலில் அனுமதி கொடுங்கள் என்றார். 2 நாட்கள் கழித்து பிரிஜேஷ் மிஸ்ராவைக் கூப்பிட்டு, ஆணை போட்டாச்சா.. வைகோவிடம் சொல்லியாச்சா என்று கேட்டவர் வாஜ்பாய். முதலில் வாஜ்பாயின் ஆட்சியை 11 மாதத்தில் கவிழ்த்து விட்டனர். அதே வாஜ்பாய் 5 ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்தார் என்றார் வைகோ.

Tags:

Leave a Reply