தமிழக பாஜக தலைவர்களுடன் சென்னை பாஜக அலுவலகமான கமலாலயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சந்தித்துப் பேசினார் . சம்பந்தனுடன் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் சிலரும் வந்திருந்தனர். பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், .உள்ளிட்ட பாஜக மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இச்சந்திப்பு குறித்து, சம்பந்தன் கூறியதாவது : இலங்கை தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தேன். தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று, இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்துக் கூறி, அவர்களின் ஆதரவைத் திரட்ட உள்ளோம்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று, விக்னேஷ்வரன் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவருடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள், விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளோம். இந்திய பிரதமர் மற்றும் பிற கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளோம். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களையும், நாங்கள் சந்திப்போம். இலங்கைத் தமிழர் சம உரிமையுடன் வாழ, நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டியது, இந்தியாவின் கடமை. இந்திய நாட்டைத் தவிர, பிற நாடுகளுக்கு இந்த பொறுப்பு இல்லை.

போர் முடிந்து பல ஆண்டுகளாகியும், இலங்கைத் தமிழர்களின் நிலையில் மாற்றமில்லை. இலங்கை அரசு, இந்தியா மற்றும் ஐ.நா., சபைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க, 13வது அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்த ஒப்புக் கொண்டு, அதை நிறைவேற்ற விடாமல் தற்போது தடுத்து வருகிறது. போரில் வீடுகளை இழந்து, வெளியேறிய தமிழர்களை, மீண்டும் மறு குடியமர்த்த, இலங்கை அரசு உறுதி அளித்தது. ஆனால், தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல், போரின் போது, நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாக்களித்தது. ஆனால், எந்த விசாரணையும் இதுவரை நடக்கவில்லை. தமிழர்கள் மறுவாழ்வுக்கு, இலங்கை அரசு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத நிலையில், கொழும்பில் நடக்கும், காமன்வெல்த் மாநாட்டில், இந்திய அரசு பங்கேற்கக் கூடாது என, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்துவது நியாயமானது. இக்கோரிக்கையை, தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரிக்கிறது.

ஐ.நா., மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை, இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை பார்வையிட்டுச் சென்றுள்ளார். இவரது வருகையால், போர் பாதிப்பு குறித்து வெளிவராத பல விவரங்கள் வெளியாகியுள்ளன. இலங்கை சுற்றுப்பயணம் குறித்த அறிக்கையை, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், 2014, மார்ச் மாதம், நவநீதம் பிள்ளை தாக்கல் செய்ய உள்ளார். அதில், இன்னும் பல தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, சம்பந்தன் கூறினார்.

Leave a Reply