பெங்களூரில் நரேந்திரமோடி பொதுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் பெங்களூர் காவல் துறையினரின் பத்து சீருடைகளை ஒரு மர்மநபர் மோசடியாக வாங்கிச்சென்றுள்ளார். இதனால் பதட்டம் உருவாகியுள்ளது .

சிவாஜி நகரைச்சேர்ந்த ஒரு டெய்லரிடமிருந்து இந்த சீருடைகளை சிலர் வாங்கிச்சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் போலீஸார் இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே சீருடைகளை வாங்கி்சென்றது யார், எதற்காக வாங்கிச்சென்றனர் என்பது மர்மமாக உள்ளது. சீருடைகள் காணாமல் போயுள்ளதால் மோடி கூட்டத்திற்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படும் போலீஸாருக்கு சிறப்புபாஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றனவாம்.

சிவாஜி நகரில் தான் பெங்களூர் காவல் துறையினருக்கு சீருடைகள் தைப்பதுவழக்கம். குறிப்பிட்ட டெய்லர்தான் தைத்துக்கொடுப்பாராம். அந்த டெய்லரிடமிருந்து தான் ஒருவாரத்திற்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அணுகி, 10 சீருடைகளை வாங்கிச்சென்றுள்ளார். தற்போது மோடி ஞாயிற்றுக் கிழமை பெங்களூரில் நடைபெறும் கூட்டத்தில் பேசவுள்ளதால், இந்தசீருடைகள் திருட்டுபரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தசம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சீருடைகளை வாங்கிச்சென்றவர் வயதானவர் என்றும் தன்னை வடஇந்தியர் என்று கூறிக்கொண்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து காவல் துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையை சமீபத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதுகுறித்து நகரபோலீஸ் கமிஷனர் ராகவேந்திர ஆரேத்கர் கூறுகையில், 10 சீருடைகளை ஒருவர் வாங்கிச்சென்றது உண்மைதான். இது குறித்துத் தகவல் வந்துள்ளது. விசாரித்து வருகிறோம் என்றார். சீருடைகள் மட்டுமல்லாமல், சிவாஜிநகரில் உள்ள ஒரு கடைக்குப் போன அந்த முதியவர் போலீஸார் பயன் படுத்தும் தொப்பி, லத்தி ஆகியவற்றையும் வாங்கியுள்ளாராம். கான்ஸ்டபிள்கள் பயன் படுத்தும் தொப்பி இது என்றும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தைத்தொடர்ந்து பெங்களூர் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply