குஜராத் முதல்வரும், பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி சட்டீஸ்கரில் பா.ஜ.க.,வை ஆதரித்து பிரச்சாரம்செய்தார். பிமத்ரா மாவட்டத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ்கட்சி வெற்று வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வருவதாகவும், நக்சலைட்டுகளுடன் ரகசிய உடன் படிக்கை செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசியதாவது; இந்த மாநிலத்தை ஆளும், எங்களின் ரமண்சிங் அரசு மீது, இல்லாத, பொல்லாதபுகார்களை எல்லாம் காங்கிரஸ் தலைவர், சோனியாவும், இந்தநாட்டின், இளவரசர், காங்கிரஸ் துணைத்தலைவர், ராகுலும் கூறியுள்ளனர்.
இங்கே வந்துபேசுவதற்கு முன், நீங்கள் கொஞ்சம், வீட்டுப் பாடம் படித்திருக்கவேண்டும். ரமண்சிங் அரசின் சிறப்பான செயல்பாடுகளை, ஒருமுறையல்ல; பலமுறை, பிரதமர், மத்திய நிதியமைச்சர், காங்கிரஸ் தலைவர்கள் பலர்பாராட்டியுள்ளனர். அதை அறியாத சோனியாவும், ராகுலும், வாய்க்குவந்தபடி பேசியுள்ளனர். ரமண்சிங் ஆட்சியின் கீழ், இந்தமாநிலம் பல விதங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஒருவேளை, இங்கு காங்கிரஸ் வெற்றிபெற்றால், யாரை முதல்வராக நியமிப்பார்கள் என, நான் ரகசியமாக, சிலகாங்கிரஸ் தலைவர்களிடம் கேட்டேன்.

அவர்கள், அஜித்ஜோகி தான் முதல்வர்வேட்பாளர் என்றனர். தலைவர்கள் பலரும், அஜித்ஜோகியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அவரை ஏன், உங்களால் முதல்வர்வேட்பாளராக அறிவிக்க முடியவில்லை? அவர் பெயரை அறிவிக்கமுடியாத அளவிற்கு, அவர் என்ன பாவம்செய்தார் என்பதை, காங்கிரஸ் விளக்கவேண்டும். இங்கேவந்து பிரசாரம் மேற்கொண்ட சோனியாவும், ராகுலும், இந்த மாநிலத்திற்கு ஏராளமாக உணவுதானியத்தை வழங்கியுள்ளோம் என, கூறியுள்ளனர். இந்த மாநில மக்கள் என்ன, கையில் பிச்சைப்பாத்திரத்தை வைத்துக் கொண்டு, நீங்கள் கொடுப்பீர்கள் என, எதிர்பார்த்து காத்திருந்தார்களா… என்னவிதமான வார்த்தையை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்?

மத்திய அரசிடமிருந்து, நிதியை, மாநிலமக்கள் எதிர்பார்ப்பது சகஜம்தான். நான், இளவரசர் ராகுலை கேட்கிறேன், மத்திய அரசின் நிதி, உங்கள் தாய்மாமன்வீட்டு பணமா… அது, மக்களின்பணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! காங்கிரஸ்சியின் விளம்பரத்தை பார்த்தேன். காங்கிரசை சத்தீஸ்கரில் கொண்டுவாருங்கள்; மாநிலத்தை காப்பாற்றுங்கள் என, குறிப்பிட்டுள்ளனர். சத்தீஸ்கர் இந்தியாவில்தானே உள்ளது… நீங்கள்தானே, மத்தியில் ஆட்சியில் உள்ளீர்கள்… ஏன் சத்தீஸ்கரை காப்பாற்றத்தவறினீர்கள்… இங்கு எப்படியும் ஆட்சியைப்பிடித்து விடவேண்டும் என்பதற்காக, பல திரை மறைவு வேலைகளில், காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

இலவசமின்சாரம் தருவோம் என, காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் ஆளும்மாநிலங்களில் ஒன்றான டில்லியில்,சோனியா, ராகுல், பிரதமர் வசிக்கும் டில்லியில், இலவசமின்சாரம் கொடுத்துள்ளீர்களா? காங்கிரஸ் ஆளும் பிறமாநிலங்களில், விவசாயத்திற்கு இலவசமின்சாரம் கொடுத்துள்ளீர்களா… பிறகு ஏன், பொய்யான வாக்குறுதி அளித்து, சத்தீஸ்கர்மக்களை ஏமாற்றுகிறீர்கள்? அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபாதேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தோல்வியடைய உள்ளது. அதை முன்கூட்டியே அறிந்துகொண்டுள்ள காங்கிரஸ், தங்களுக்கு எதிராக வெளியாகும்தேர்தல் கணிப்புகளை தடைசெய்ய முயற்சிக்கிறது. ஆட்சி, அதிகாரத்தை இழந்துவிடுவோம் என்ற பீதியில் உள்ளது காங்கிரஸ். லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றிபெற்று, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி.

நக்சல்களின் அச்சுறுத்தல் உள்ள நிலையிலும், மாநில முன்னேற்ற திட்டங்களை, முதல்வர், ரமண்சிங் திறம்பட செயல் படுத்துகிறார். நக்சல்களை ஒடுக்கத்தவறிய காங்கிரஸ், இப்போது அவர்களுடன் ரகசிய உறவு வைத்துக்கொண்டு, ரமண்சிங்கை எதிர்க்கிறது. இந்தமாநிலத்தில் நடந்த முதற்கட்ட தேர்தலில், மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்தவீரர்களை, தேர்தல் கமிஷன் கவுரவிக்கவேண்டும். ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி, 25ம் தேதி, வாக்காளர்நாளாக கொண்டாடப்படுகிறது. அந்தநாளில், இந்த வீரர்கள் கவுரவிக்கப்பட வேண்டும். என்று நரேந்திர மோடி பேசினார்.

Leave a Reply