காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே பா.ஜ.க.,வின் நோக்கம்,தேனீர் விற்றவர்தான் இந்தியாவின் பிரதமராவார் என்பதை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்  என பாஜகவின் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் நடந்த பா.ஜ.க.,வின் இந்தியாவை வெல்ல செய்வோம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜகவின் தேசியத்தலைவர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வறுமை, வேலையில்லாமை போன்ற பல்வேறுபிரச்னைகள் தலை விரித்தாடுகின்றன. அதேபோல காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் விண்ணைமுட்டும் அளவுக்கு பரந்து விரிந்துள்ளது.

இப்பிரச்னைகளில் இருந்து விடுபடவேண்டுமானால், காங்கிரஸ்கட்சியை ஆட்சியில் இருந்து இறக்கவேண்டும். காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே பா.ஜ.க.,வின் தலையாய நோக்கமாக உள்ளது. பா.ஜ.க மக்கள் பிரச்னைகளை தீர்க்கமுனைப்புடன் செயலாற்றும். நாட்டில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வுகாண திட்டம் வகுப்பதில் காங்கிரஸ் அரசு தோல்வியடைந்துள்ளது. இதனால் நாட்டில் பயங்கரவாதம்போன்ற பிரச்னைகள் பூதாகரமாகியுள்ளது.

நாட்டின் எல்லையில் நமது வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தினாலும், எல்லைப்பகுதியில் சீனா அக்கிரமித்தாலும் பிரதமர் மன்மோகன் சிங் மௌனம்காப்பதை தவிர, உறுதியான பதிலடிகொடுக்க தவறிவிட்டார். சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் அதிலிருந்து மீண்டும்வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி பாராட்டும்படி இல்லை. தேனீர்விற்றவர் பிரதமர் ஆகமுடியாது என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார். தேனீர் விற்றவர்தான் இந்தியாவின் பிரதமராவார் என்பதை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் என்றார் அவர்.

Leave a Reply