குஜராத் முன்னாள் அமைச்சர் அமித்ஷா உத்தரவுப்படி அந்த மாநிலத்தைச்சேர்ந்த இளம்பெண் காவல் துறையால் சட்ட விரோதமாக வேவு பார்க்கப் பட்டதாக புகார் எழுந்துள்ளது குறித்த காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் மீனாட்சி லேகி கூறியதாவது:
இந்தப்பிரச்னையில் காங்கிரஸ் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை. வேவுபார்க்கப்பட்டதாக சொல்லப்படும் இளம்பெண்ணோ, அவரது குடும்ப உறுப்பினர்களோ குஜராத்மாநில அரசு குறித்து புகார் கூறவில்லை. ஆனால், தனிப்பட்ட ஒருவரின் குடும்பப்பிரச்னையை அரசியல் ஆதாயத்திற்காக பெரிது படுத்துகிறது காங்கிரஸ். இந்தவிவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள பெண் தொடர்பான முழுவிவரங்களையும் சிலகாரணங்களால் வெளியிட முடியாது.

ஆனால், சட்ட விரோதமாக எதுவும் நடந்து விடவில்லை என்பதை உறுதியாகச் சொல்லமுடியும். இணையதளங்கள் வெளியிட்ட உரையாடலிலேயேகூட, பா.ஜ.க.,வுக்கு சாதகமான அம்சங்கள் தான் உள்ளன.

நாட்டில் நரேந்திரமோடிக்கு அதிகரித்துவரும் செல்வாக்கால் நிலை குலைந்து போயுள்ள காங்கிரஸ் இயலாமையே இத்தகைய புகார்களாக வெளிப்படுகிறது.
இந்தவிவகாரத்தில் குறிப்பிடப்படும் இளம்பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அத்து மீறிச் செயல்பட்டவர்கள் காங்கிரஸ் கட்சியும் அதற்குத் துணைபோனவர்களும் தான் என்றார் மீனாட்சி லேகி.

Leave a Reply