காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமராகும் தகுதி இல்லை. பிரதமர் மன்மோகன்சிங்கை ராகுல் பலவீனமடைய செய்து விட்டார். உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் பிரதமர் மன்மோகன்சிங்கை ராகுல் அவமானமடைய செய்து விட்டார் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் கூறியுள்ளார்.

உ.பி., மாநிலம் பரெய்லியில் வியாழக் கிழமை நடைபெற்ற சமாஜவாடி கட்சியின் பொதுக்கூட்டத்தில் முலாயம் சிங் யாதவ் பேசியதாவது;

தண்டனை பெற்ற எம்பி., எம்எல்ஏ-க்கள் தேர்தலில் போட்டியிட வகைசெய்யும் அவசரச்சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்த போது, அதனைக் கிழித்தெறிய வேண்டும் என ராகுல்காந்தி விமர்சித்ததன் மூலம், பிரதமர் மன்மோகன்சிங்கை ராகுல் பலவீனமடைய செய்து விட்டார். உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் பிரதமர் மன்மோகன்சிங்கை ராகுல் அவமானமடைய செய்து விட்டார்.
இதை போன்ற விமர்சனம் எழுந்த உடனேயே தனதுபதவியை மன்மோகன்சிங் ராஜிநாமா செய்திருக்க வேண்டும். பிரதமர்பதவியை அவமானப் படுத்தும் வகையில் பேசி எரிச்சலூட்டுகின்ற வகையில் நடந்துகொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு நாட்டின் பிரதமர் ஆவதற்குத் தகுதியில்லை.

நாட்டின் முன்னால் பெரும்சவால்கள் நிறைந்துள்ளன. ஆனால் ஆட்சிநடத்துபவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். நாட்டின் தலைமை கோழைத்தனமாக இருக்கிறது.அண்டை நாடுகள் எதுவும் நமக்கு நட்புநாடாக இல்லாதது துரதிருஷ்டவசமானது என்றார்.

Leave a Reply