காங்கிரஸ் ஆட்சியில் யாருக்கும் தொல்லை தான் என்றும், இந்திய மீனவர்களுக்கு பா.ஜ.க ஆட்சியில் முழுபாதுகாப்பு வழங்கப்படும் என்றும், காங்கிரஸ் அரசு தமிழக மீனவர்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், இந்தியமக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு , பா.ஜனதா கட்சியின் மாநிலமீனவர் அணி சார்பில், சென்னை கடற்கரை சாலையில் உள்ள மீனவர்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, மீனவர் அணி மாநிலதலைவர் எஸ்.சதீஷ் குமார் தலைமை தாங்கினார். சிறப்புவிருந்தினராக, மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, மீனவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், மீன் உணவு திரு விழா நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

பின்னர், பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;, ''உலக மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று நாங்கள் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். இலங்கை கடற்படையால் தொடர்ந்து, இந்திய மீனவர்கள் தாக்கப்படுகின்றனர். அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்குபிறகு மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமையும். அதன் பிறகு, இந்திய மீனவர்களுக்கு முழுபாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கைக்கு ஆதரவாக எந்தநாடு வந்தாலும், அதை தடுக்கும் வகையில் பா.ஜ.க செயல்படும். காங்கிரஸ் அரசு தமிழக மீனவர்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், இந்தியமக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சி இருக்கும்வரை யாருக்கும் தொல்லை தான்''என்று கூறினார்.

Leave a Reply