நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் சிலையை எந்த காரணமும் கூறி அப்புறப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று பாஜக மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது ;

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழகம், இந்தியா மட்டும் அல்லாமல், உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவர் நினைவைபோற்றும் வகையில் சென்னையில் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த சிலையை ஏதோகாரணம் கூறி அப்புறப்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது.

சேதுசமுத்திர திட்டத்தை எக்காரணம் கொண்டும் கைவிடக்கூடாது. ராமர்பாலம் பாதிக்காத வகையில் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு முடிவு ஏற்பட, துணிச்சல் மிக்க பிரதமரை கொண்டு வந்தால்தான் மீனவ சமுதாயம் காப்பாற்றப்படும்.

இந்தியா முழுவதும் 5 மாநிலங்களில் நடந்த தேர்தல்முடிவு வருகிற 8ந்தேதி வர உள்ளது. இதில் 4 மாநிலங்களில் பா.ஜ.க வெற்றிபெறும். தமிழ்நாடு முழுவதும் "வீடு தோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரை" என்ற பிரசாரம் வருகிற 1ந் தேதி முதல் 22ந்தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு பா.ஜ.க மகோன்னத நிலையை எட்டும். ஆகவே யாருடன்கூட்டணி அமைப்பது என்பது குறித்து நாங்கள் அவசரப்படவில்லை.

தமிழகத்தில் மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்போது, அந்த பாதிப்பை ஈடுசெய்யும் வகையில் மத்திய அரசு மின்சாரம் வழங்க முன் வரவேண்டும். கனிமவளங்கள் நாட்டின் சொத்து ஆகும். அரசின் அனுமதி இல்லாமல் எடுக்கக் கூடாது. அதிகப்படியான கனிம வளங்களைவெட்டி எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழகத்தில் விவசாய விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து விவசாயநிலத்தில் எரிவாயு குழாய் அமைக்க நீதிமன்றம் மூலம் உத்தரவுபெற்று வந்துள்ளனர்.

ஆகவே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுக நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் விவசாயிகளின் நலனையும் பாதுகாக்க வேண்டும்.

Leave a Reply