ஆம் ஆத்மி அரசு அதனுடைய முரண்பாடுகளினால் விரைவில்கவிழும். எனவே, இடைத்தேர்தலுக்கு பா.ஜ.க எம்எல்ஏ.க்கள் தயாராக இருக்கவேண்டும்’ என்று பாஜக கேட்டுக் கொண்டுள்ளது.

தில்லி சட்டப்பேரவை பா.ஜ.க உறுப்பினர்கள் கூட்டம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர் ஹர்ஷ்வர்தன் கலந்துகொண்டு பேசினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:

தூய்மையான அரசியலைப்பேசும் ஆம் ஆத்மி கட்சி, ஊழலில் திளைத்துப்போன காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைப்பது முட்டாள்தனமானது. இந்த ஆட்சி அதனுடைய சொந்த முரண்பாடுகளினாலேயே கவிழ்ந்து விடும்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்களை ஆம் ஆத்மிகட்சி விசாரிக்கும் போதுதான், இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான “ஒப்பந்தம்’ தில்லி வாசிகளுக்கு தெரியவரும்.

ஷீலாதீட்சித் அரசில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து காலக்கெடுவுடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும். தவறுசெய்தவர்களை புதிய அரசு தண்டிக்கவேண்டும். தில்லிக்கு மாநில அந்தஸ்தை ஆம் ஆத்மி கட்சி பெற்றுத்தரவேண்டும்.

பதவியேற்பு விழாவுக்கு கேஜரிவால் மெட்ரோ ரயிலில் பயணம்செய்வது குறித்து அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவர் மெட்ரோவில் சென்று தான் துவாரகாவில் படித்துவரும் அவருடைய பிள்ளைகளைப் பார்த்துவருகிறார். இதை அவர் நீண்டகாலமாகவே பின்பற்றி வரும் நிலையில், பதவியேற்பு விழாவுக்கு மெட்ரோவில் செல்வதை ஏன் பெரிதுபடுத்தவேண்டும் என்றார் ஹர்ஷ்வர்தன்.

Leave a Reply