தவறு செய்பவர்கள் தண்டிக்க படவேண்டும் இதில் தவறேதும் இல்லை, ஆனால் அவர்களை அவமான படுத்தும் விதமாக நடத்துவதும் , ஒரு ஜனநாயக நாட்டின் மரியாதைக்குரிய அடையாளமாக கருதப்படுபவர்களை சோதனை என்ற பெயரில் அலைக்கழிப்பதும், இதன் மூலம் அந்த தேசத்தின் இறையாண்மையே கேள்விக்குறியாக்குவதும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றல்ல.

அமெரிக்காவில் உள்ள இந்திய பெண் துணைத் தூதர் தேவ்யானி கோப்ரகடே தனது அமெரிக்க வீட்டில் இந்திய வேலைக்கார பெண்ணை அமர்த்த அமெரிக்கா விசா பெறுவதில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து மோசடி செய்தார் என்று குற்றம் சாட்டி அமெரிக்க பெடரல் போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது பள்ளியில் தனது குழந்தையை விட்டுவிட்டு வரும் போது ஏதோ தீவிரவாதியை போன்று கையை பின்புறமாக கட்டி அழைத்து சென்றுள்ளனர். மேலும் அவரது ஆடையை அவிழ்த்து சோதனைட்டுள்ளனர். டிஎன்ஏ சோதனைக்கான மாதிரியை எடுத்துள்ளனர் அதுமட்டும் அல்லாமல், அவரை போதைப்பொருள் குற்றவாளிகளுடன் அமர வைத்தும் அவமானப் படுத்தியுள்ளனர்.

குற்றம் செய்தவர் தண்டனை பெற்றே ஆகவேண்டும் இதில் மாற்றுக்கருத்து இல்லை, அதே நேரத்தில் தூதரக அதிகாரிகள் என்பவர்கள் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் மதிப்புக்குரிய  பிரதிநிதியாகவே கருதப்படுகிறார்கள், எனவே தூதரக அதிகாரிகளுக்கு சிறப்பு சட்ட பாதுகாப்பையும் , அந்தஸ்த்தையும் உலக நாடுகள் அனைத்துமே வழங்குகின்றன. உலகின் ஏதேனும் இரண்டு நாடுகளுக்கிடையே போர் வந்தால்கூட சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரக அதிகாரிகள் மரியாதையாக பாதுகாப்புடன் வெளியேற்றப் படுகிறார்களே தவிர கைது செய்யப்படுவதில்லை.

குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய பெண் துணைத் தூதர் தேவ்யானி கோப்ரகடேட்டை தண்டிக்க கூடாது என்று கூறவில்லை. அவர் குற்றம் செய்தார் என்றால் முறைப்படி இந்திய நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அவர்மீதான குற்றம் உறுதியானால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கையை இந்திய அரசு எடுத்த பிறகு அமெரிக்கா இந்திய அரசின் முறையான அனுமதியுடன் விசாரணையை தொடங்கியிருக்க வேண்டும்.

ஆனால் அமெரிக்காவின் நடவடிக்கையில் அதன் அடாவடி தனம் தான் தெரிகிறது. தவறு செய்பவர்களை எல்லாம் பாரபச்சம் இன்றி தண்டிப்போம் என்று தர்மம் நியாயம் பேசும் இதே அமெரிக்காதான் பாகிஸ்தானுக்குள் அத்து மீறி நுழைந்து குண்டுமழை பொழிந்து அப்பாவிகளை கொன்று குவிக்கிறது. இறப்பவர்களை எல்லாம் தீவிரவாதிகளின் பட்டியலில் இணைத்துவிடுகிறது.

2004 டிசம்பரில் ருமேனிய நாட்டில் அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிந்த வான்கோதம் என்கிற கடற்படை ஊழியர் குடித்துவிட்டு காரோட்டிச் சென்று மோதியதில் அந்த நாட்டு இசைக் கலைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். ஆனால் அமெரிக்காவோ தூதரக சிறப்பு உரிமையை காரணம் காட்டி அந்த கடற்படை ஊழியரை தங்கள் நாட்டுக்கு அலைத்துசென்றே விசாரணை நடத்தியதே தவிர தங்கள் தூதரக அதிகாரியின் மீது ருமேனிய அரசை கைவைக்க விடவில்லை.

இப்படி தனக்கொரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயம் பேசிக்கொண்டு உலகம் முழுவதும் உள்ள தங்கள் தூதரகத்தின் மூலம் சட்டத்துக்கு புறம்பாக அத்துமீறி ஒருவரை கூட விடாமல் உளவு பார்க்கும் அமெரிக்காவின் மீது அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுத்தால் , உலகம் முழுவதும் உள்ள அதன் தூதரகங்கள் எல்லாம் சிறைக்குள்ளேதான் இயங்க வேண்டும்.

தமிழ்தாமரை VM. வெங்கடேஸ்

Leave a Reply