நிலக்கரிசுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ள நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் உடனடியாக பதவி விலகவேண்டும் என்றும் , சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரைதவிர வேறு யார் இதற்கு பொறுப்பேற்கமுடியும் என்றும் பா.ஜ.க கேள்வி எழுப்பியுள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் தவறுகள் நடந்துள்ளது உண்மை தான் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் சுரங்க ஒதுக்கீட்டில் தவறுகள் நடந்திருக்கலாம் என்று கூறினார். சுரங்க ஒதுக்கீடுகள் நல்லெண்ண அடிப்படையிலேயே நடைபெற்றதாக கூறியஅவர், சிலமுடிவுகள் தவறாகி விட்டதாக தெரிவித்தார். இன்னும் தீவிரகண்காணிப்புடன் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை செயல்படுத்தியிருந்தால், தவறுகளை தடுத்து இருக்கலாம் என்றும் அரசின் தலைமைவழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் பதவியிலிருந்து உடனடியாக விலகவேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. முறைகேடு நிகழ்ந்த காலத்தில் நிலக்கரி அமைச்சகத்தை மன்மோகன்சிங் கவனித்து வந்ததால் தவறுக்கு பொறுப்பேற்று அவர் உடனடியாக பதவி விலகவேண்டும் என்றும் பாஜக கூறியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரைதவிர வேறு யார் இதற்கு பொறுப்பேற்கமுடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் ஒப்புதல்மூலம் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பாஜக கூறிவந்த குற்றச்சாட்டு உறுதிபடுத்தப் பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தவிவகாரத்தில் கோடிக் கணக்கான ரூபாய் முறைகேடாக பரிமாறப்பட்டுள்ளது தெரிந்தும் சி.பி.ஐ அமைதிகாப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply