தேசியபாதுகாப்பை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல் படும் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள தலைமைத்தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்தமுடிவை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

அடுத்த சில மாதங்களில் மக்களவைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர் சேவைகளை மேம்படுத்த கூகுளுடன் கைகோக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது. அதன்படி தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தை 6 மாதங்களுக்கு நிர்வகிக்கும்பொறுப்பு கூகுளிடம் ஒப்படைக்கப்பட இருந்தது.

இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் சர்வர்களை பயன் படுத்திக்கொள்ள அண்மையில் ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்நிலையில் சுமார் 80 கோடி வாக்காளர்களின் தகவல்களை கொண்டுள்ள தேர்தல் ஆணைய இணையதளக்கட்டுப்பாடு கூகுள் கைவசம் மாறினால் தேசப்பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று பாஜக , காங்கிரஸ், தகவல்தொடர்புத்துறை நிபுணர்கள் என்று அனைத்து தரப்பினரும் எச்சரித்தனர்.

இதையடுத்து தலைமைத் தேர்தல் ஆணையர் விஎஸ். சம்பத் தலைமையில் டெல்லியில் வியாழக் கிழமை உயர்நிலைக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையர்கள் எச்எஸ்.பிரம்மா, எஸ்என்ஏ. ஜைதி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக்கூட்டத்தில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல் படும் திட்டத்தைக் கைவிட ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது. இத்தகவலை தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.

Leave a Reply