வரும் மக்களவை தேர்தலில், திமுக. மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் நிலை உருவாகும் , தேமுதிக.வின் நலன், தேசியநலன், தமிழகநலன் கருதி விஜயகாந்த் பா.ஜ.க.வின் கூட்டணியில் சேரவேண்டும் என்று என்று தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது:

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக.வுக்கும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையில்தான் போட்டி நிலவும். இத்தேர்தலில் திமுக. மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும்.

தமிழகத்தில் பாஜக.வுடன் கூட்டணி அமைக்க மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை உடன்பாடு செய்து, அது இறுதிசெய்யப்படும் நிலையில் உள்ளது. பா.ம.க. மோடியை ஆதரிப்பதாக கூறியுள்ளது . , பாமக. தலைவர்கள் தில்லியில் பாஜக. மேலிடத் தலைவர்களை சந்தித்துப்பேசி இருக்கின்றனர் என்பதை மறுக்கமுடியாது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திடம் இரண்டுமுறை தனிப்பட்ட முறையில் பேசினேன். அதன்பின் பாஜக., தலைவர்களும் அவரிடம்பேசினர். பா.ஜ.க.வுடன் உறவு இல்லை என்று விஜய காந்த் இது வரை கூறவில்லை. தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்த் சேரக்கூடாது. அப்படிச்சேர்ந்தால் அது விஜய காந்திற்கு வீழ்ச்சியாக அமையும் என்று சுட்டிக்காட்டுகிறேன். தேமுதிக.வின் நலன், தேசியநலன், தமிழகநலன் கருதி விஜயகாந்த் பா.ஜ.க.வின் கூட்டணியில் சேரவேண்டும்.

காந்தியமக்கள் இயக்கத்தின் நோக்கம் என்பது, தமிழகத்தில் திமுக, அதிமுக.வுக்கு எதிரான மாற்று அணியை உருவாக்குவதே. இவ்விருகட்சிகளும் வீதிதோறும் மதுவை ஓட விட்டு, இளைஞர்களையும், தமிழ்ச் சமுதாயத்தையும் சீரழித்து விட்டன. எனவே தான் இக்கட்சிகளை எதிர்க்கிறோம். மதுவுக்கு எதிராக பாமக, மதிமுக. ஆகியவை தொடர்ந்து போராடி வருகின்றன. எனவே இக்கட்சிகளுடன் இணைந்து மாற்று அணி உருவாக்குகிறோம் என்றார்.

Leave a Reply