மக்களவைத் தேர்தலில் நரேந்திரமோடி தலைமையில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதே இலக்கு என பா.ஜ.க நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

தில்லியில் ஜன.17 முதல் 19-ஆம்தேதி வரை நடைபெறவுள்ள பா.ஜ.க.,வின் தேசிய செயற்குழுவை வெற்றிகரமாக நடத்துவது குறித்து பா.ஜ.க நாடாளுமன்றக்குழு தில்லியில் வெள்ளிக்கிழமை கூடி விவாதித்தது.

இதையடுத்து பாஜகவின் பொதுச்செயலாளர் அனந்த்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

2014 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.,வை ஆட்சியில் அமர்த்தியே தீரவேண்டும் என்ற உறுதியுடன் கட்சியின் தேசியசெயற்குழு ஜன.17 முதல் 19 வரை தில்லியில் நடத்துகிறோம். இந்த கூட்டத்தில் நாடுமுழுவதும் 10 ஆயிரம் அலுவலக பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

“மோடியே பிரதமர்’ என்ற உறுதிமொழிகோஷத்தை நாட்டின் கடைக்கோடிவரை கொண்டு செல்லுதல், தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம், தேர்தல்பணி அலுவலகங்கள் அமைப்பது உள்ளிட்ட கட்சியினர் ஆற்ற வேண்டிய பணிகள் ஆகியவற்றில் இந்த அலுவலக பொறுப்பாளர்கள் கட்சியினருக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

தேசியசெயற்குழு கூட்டத்தில் லஞ்சம், ஊழல், நிர்வாகச் சீர்கேடு ஆகியவற்றுக்கு எதிராகவும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிலவிய உள்நாட்டுப்பாதுகாப்பு குறைபாடுகள் போன்றவற்றுக்கு எதிராகவும் ஒருதீர்மானம் நிறைவேற்றப்படும்.

மேலும் விலைவாசி உயர்வு, சரிந்துவரும் அன்னிய முதலீடு, நடுத்தர மற்றும் ஏழை, எளியோரைவாட்டும் பொருளாதாரநெருக்கடி குறித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இந்த இரண்டுதீர்மானங்களை முன்னிறுத்தி வாக்காளர்களை சந்திப்போம். மொத்தமுள்ள மக்களவை தொகுதிகளில் 272க்கும் அதிகமானவற்றில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதே பாஜக.,வின் இலக்கு. இதை மோடி தலைமையில் நிறைவேற்றி காட்டுவோம். காங்கிரஸ்கட்சி ஏற்கெனவே போட்டியில் இருந்து தூக்கி எறியப்பட்டுவிட்டது. இந்த சூழ்நிலையில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பெறுவது உறுதி என்றார்.

Leave a Reply