கோவாவில் நடந்த பாஜக., பேரணியில் பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பேசியதாவது: கோவாவின் வளர்ச்சிக்கு மாநில முதல்வர் பாரிக்கர் பாடுபடுகிறார். இந்தபேரணியில் வசூலிக்கப்படும் பணம், கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களுக்க நிவாரணமாக வழங்கப்படும். மக்களின் இன்பம் மற்றும் துக்கங்களில் பாஜக., பங்கெடுத்துள்ளது. பாரிக்கர் மற்றும் என்னை போன்றவர்கள் முதல்வராக தேர்வுசெய்யப்படுவோம் என

யாராவது நினைத்ததுண்டா. எங்களை போன்ற சாமான்யர்கள் பாஜக.,வில் மட்டும்தான் பெரியபதவிக்கு வர முடியும். டீ விற்பவர்கூட பெரிய பதவிக்கு வருவது என்பது பாஜக.,வில் தான் நடக்கும்.

சவுகான், ராமன் சிங் போன்ற பா.ஜ.க., தலைவர்களும் சாதாரண மானவர்கள்தான். காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பது பா.ஜ.க.,வின் கோஷம் அல்ல. அதுதான் மக்களின் எண்ணமாக உள்ளது. காங்கிரசுக்கு எதிரான நிலையை நாட்டுமக்கள் எடுத்துள்ளனர். காங்கிரசை ஆட்சியிலிருந்து துரத்த மக்கள் முடிவுசெய்து விட்டார்கள்.

காங்கிரஸாரின் வெட்கமற்ற தன்மையைப் பாருங்கள். அவர்கள் மதவாத அரசியலை நடத்துகின்றனர். “”சட்டத்தைமீறும் ஒருவரை நீங்கள் கைது செய்யும் போது, முஸ்லிம்கள் கைது செய்யப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று உள்துறை அமைச்சர் ஷிண்டே, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஏன் அப்படிச் செய்யவேண்டும்?

சட்டத்தை மீறும் ஒருவருக்கு மதம் இருக்கிறதா என்ன? அவ்வாறு சட்டத்தைமீறும் ஒரு நபர் கைதுசெய்யப்பட வேண்டுமா, வேண்டாமா என்று அவரது தலை விதியை மதம் முடிவுசெய்யுமா? மத அடிப்படையில் எந்த வேறுபாடும் இருக்கக்கூடாது. ஒரு மதத்தை சேர்ந்தவர் என்பதற்காக ஒருவர் தண்டிக்கப்படக்கூடாது. ஆனால் இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தவேண்டும். வாக்குவங்கி அரசியல் நடத்தப்படக் கூடாது.

ஷிண்டே இவ்வாறு முதல்வர்களுக்கு கடிதம் எழுதியது குறித்து பிரதமரிடம்கேட்ட போது, “அப்படியா?’ என்று பிரதமர் வியப்புதெரிவித்தார். இந்த விவகாரத்தைக் கவனிப்பதாகவும் கூறினார். அவர் எவ்வாறு நடந்து கொள்வார் என்பதற்கு இதுதான் உதாரணம்.

சமீபத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியில் இருந்து ஜெயந்தி நடராஜன் நீக்கப்பட்டார். சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மீது ஊழல் புயல் வீசியது. அனைத்து கோப்புகளும் நகராமல் நிறுத்தி வைக்கப்பட்டன. அங்கு பணம் இல்லாமல் எந்தக் கோப்பும் நகரவில்லை. வருமான வரி, விற்பனை வரி, கலால் வரி பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், முதல் முறையாக தில்லியில் ஜெயந்தி வரி பற்றி நாம் கேள்விப்பட்டோம். அது இல்லாமல் எதுவும் நகராது.

பணம் கொடுக்கும் வரை சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் கோப்புகளால் நகர முடியாத நிலை காணப்பட்டது. எனது அனுபவத்தில் இது போன்ற நிலையை நான் கண்டதில்லை. எனக்கு அது தேவையும் இல்லை. ஆனால் இதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். அவர்கள் (காங்கிரஸார்) எந்த மாதிரியான அமைப்புகளை ஏற்படுத்தப் பார்க்கின்றனர்?

சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்காக சுரங்கத் தொழில் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு, சுரங்கத் தொழிலில் வெளிப்படைத் தன்மையையும் கொண்டுவரும். பொருளாதாரத்துக்கு உதவும் நோக்கில் இதைச் செய்வோம்.

பொருளாதார வளர்ச்சி என்பது உள்கட்டமைப்பு வசதிகள், கச்சாப் பொருள் மற்றும் மனித ஆற்றல் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, முதல் 50 ஆண்டுகளை நேரு குடும்பம் வீணடித்தது. மேலும் அரசியல் சாசன அமைப்புகளைப் பலவீனப்படுத்தியதோடு மத்தியில் அதிகாரங்களைக் குவிக்கும் பணியிலும் அது ஈடுபட்டது.

ராஜீவ் காந்தி 21ஆம் நூற்றாண்டில் புதிய இந்தியாவை உருவாக்க வலியுறுத்தினார். ஆனால் எதுவும் மாறவில்லை. “நீங்கள் எப்படி இதிலிருந்து மாறுபட்டு காணப்படுவீர்கள்?’ என்று என்னிடம் மக்கள் கேட்டனர். “மேலே நான் குறிப்பிட்ட தீமைகளை நாங்கள் அகற்றுவோம். அதிகாரப் பகிர்வில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். கடமைப் பொறுப்பு இருக்கும்’ என்று நான் பதிலளித்தேன்.

ஊழல், பரம்பரை அரசியல், மதவாதம், வாக்குவங்கி அரசியல் ஆகியவை அடங்கிய ஒரு கலாசாரத்தின் வடிவமாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. இந்தத் தீமைகள் அனைத்தையும் நாட்டை விட்டு அகற்ற பாஜக உறுதிபூண்டுள்ளது என்றார் மோடி.

Leave a Reply