இன்றைய நிலையில், 100கோடி ரூபாய் செலவில் திட்டம் மேற்கொள்ள வேண்டும் என்றால், அதில், அரசின் பல்வேறு படிநிலைகளுக்கு, 30 முதல் 50 சதவீதத்தை லஞ்சமாக கொடுக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.

சமீபகாலமாக, நம் கையை கடிக்கும் அளவிற்கு விலைவாசி உயர்ந்துவிட்டது. சொந்த வீடுதான் எட்டாக்கனியாக உள்ளது என்றால், காய்களும் கனிகளும்கூட எட்டும் விலையில் இல்லை என்பது, பல நடுத்தர குடும்பங்களுக்கு வேதனையை அளித்துவருகிறது. இதற்கு என்ன காரணம்? கடந்த, 10 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள பொருளாதார சீரழிவை முக்கியகாரணமாக குறிப்பிடலாம். பொருள் இல்லை என்றால், பொருளாதாரம் ஸ்தம்பித்து போகும். பொருள் உற்பத்திக்கு ஆதரவாக இருக்கவேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு. மத்தியில் ஆட்சிசெய்யும், காங்கிரஸ் தலைமையிலான அரசு, பொருள் உற்பத்திக்கான இந்த ஆதரவை கொடுக்க தவறி விட்டது. மத்திய அரசின் பொருளாதார கொள்கையின் மேல் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கை, அந்த அரசின் நிர்வாக திறமையின்மையால், தலைவிரித்தாடும் ஊழல் உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் புதியமுதலீடுகளை செய்ய, தொழில் முனைவோர் தயக்கம்காட்டி வருகின்றனர்.

உதாரணத்திற்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் முதல் வேலூர் மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டைவரை, 100 கிமீ., தூரத்திற்கு சாலை அமைக்க, 100கோடி ரூபாய் நியாயமான செலவாகும். ஆனால், இந்ததிட்டம், லஞ்ச தொகையையும் சேர்த்து, 150 கோடி ரூபாய்க்கு நிறைவேற்றப்படும் சூழல் உள்ளது. இதனால், 100 ரூபாய் சுங்ககட்டணம் வசூலிக்கப்பட வேண்டிய இடத்தில், 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை, 50 ரூபாய் தானே என, விட்டு விட முடியாது. இதேபோல், பல இடங்களில், பலகசிவு காரணமாக, 10 ஆயிரம் ரூபாய்க்கு உற்பத்தியாகவேண்டிய, ஒரு 'டிவி', தற்போது, 15 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல், உற்பத்திசெய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. இதுதான், ஊழலுக்கும், பண வீக்கத்திற்கும் இடையில் உள்ள நெருங்கிய உறவு. கையைகடிக்கும் பணவீக்கத்திற்கு அரசு காரணியாக இருப்பது இப்படித்தான். இதைதான் பாஜக., பிரதமர் வேட்பாளர் மோடி, 'ஜெயந்தி டேக்ஸ்' என, குறிப்பிட்டு இருந்தார்.

அதே சமயம், உலக மயமாக்கல் கொள்கை காரணமாக, வெளிநாடுகளில் இருந்து, இதே,'டிவி'யை, 12 ஆயிரம் ரூபாய்க்கு இறக்குமதி செய்யமுடியும். இதனால்தான், கடந்த 10 ஆண்டுகளில், உள்நாட்டில், சிறு, குறு தொழில்கள் பெரியளவிற்கு பாதிக்கப்பட்டு உள்ளன.மற்ற தொழில்களைவிட இவை அதிக வேலைவாய்ப்பு அளிப்பதால், பெருமளவு மக்களின் வருமானமும் குறைவதற்கு அரசு காரணியாக இருந்து உள்ளது. மன்மோகன்சிங்கின் ஆட்சித் திறன் பற்றாக்குறை, முதலீட்டு பற்றாக்குறையாக மாறிவருகிறது. முதலீட்டு பற்றாக்குறை, உற்பத்தி பற்றாக் குறையாக மாறுகிறது. உற்பத்தி பற்றாக்குறையை சரிசெய்ய, வெளிநாடுகளில் இருந்து, ஏராளமான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறன.

உதாரணத்திற்கு, விநாயகர் சதுர்த்திக்கு, விநாயகர் சிலை; ஹோலி பண்டிகைக்கு, கலர்பவுடர்; ரக்ஷா பந்தனுக்கு, ரக் ஷா கயிறு என, சீனாவில் இருந்து, பெருமளவில் இறக்குமதி செய்யப் படுகிறது.இவ்வாறு, வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதிசெய்யப்படுவது, வர்த்தக பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது. வர்த்தக பற்றாக்குறை, டாலர் பற்றாக்குறையாக மாறிக்கொள்கிறது. டாலர் பற்றாக் குறை, டாலரின் மதிப்பை உயர்த்தி, ரூபாய் மதிப்பை கீழே தள்ளிவிடுகிறது. இதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்விலை உயர்ந்து விடுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், அதுவே, பண வீக்கத்தை மேலும் அதிகரிப்பதற்கு காரணியாக அமைகிறது.

மேற்கண்ட காரணங்கள் அனைத்தும், ஒன்றுடன் ஒன்று, பிணைக்கப்பட்டு இருந்தாலும், ஆட்சித்திறன் பற்றாக்குறை தான் மூல காரணம் ஆகும். மன்மோகன் சிங்கின் ஆசிரியர்கள், 'பொருளாதாரமும், அரசியலும், ஒரு நாணயத்தின் இரண்டு முகங்கள்' என்று, அவருக்கு சொல்லி கொடுக்க மறந்து விட்டனர்.ஆட்சித்திறன் பற்றாக்குறை வந்துவிட்டால், ஏதேனும், ஒரு பற்றாக்குறை பொருளாதாரத்தில் தான் வந்து சேரும். இன்றைய சூழலில், பல பற்றாக்குறைகள் உள்ளன. இதற்கு காரணம், மன்மோகன் – சிதம்பரம் – மான்டேக் சிங் அலுவாலியா ஆகிய மும்முனிகளின் தவறான பொருளாதார சிந்தனைகள்தான். இதை சரிசெய்ய, மாற்று அரசு மற்றும் மாற்றும் சிந்தனை ஏற்படுத்த வேண்டும். அது, மக்கள்கையில் தான் உள்ளது.

நன்றி ; தினமலர் எம்.ஆர்.வெங்கடேஷ்

Leave a Reply