லோக்பால் அமைப்புக்கான தலைவர் , உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது தொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள விளம்பரம் சட்டவிரோதமானது என பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவருமான அருண்ஜேட்லி குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் உள்ளிட்ட உயர்பதவியில் இருப்பவர்களையும் விசாரிக்கும் அதிகாரம்கொண்ட லோக்பால் மசோதாவுக்கு நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்குபின்னர் இந்தசட்டம் அமலுக்கு வந்தது. இதைதொடர்ந்து லோக்பால் அமைப்புக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்காக மத்திய அரசின் பணியாளர்துறை சார்பாக கடந்த வாரம் விளம்பரம் வெளியிடப்பட்டது. விண்ணப்ப தாரர்களுக்கான தகுதிகளும் இந்த விளம்பரத்தில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள விளம்பரம் சட்டவிரோதமானது என பாஜ தலைவர் அருண்ஜேட்லி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், லோக்பால் சட்டப்படி தலைவரையும், உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பிரதமர், மக்களவை சபா நாயகர், சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி மற்றும் மக்களவை எதிர்கட்சி தலைவர் ஆகிய 4 பேர் அடங்கிய தேர்வுகமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தக்கமிட்டி சார்பாக தலைவரையும் உறுப்பினர்களையும் தேர்வு செய்வதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். தலைவர் நியமனம் தொடர்பாக இந்தக் கமிட்டியினர் ஒருமுறை கூட இதுவரை ஆலோசிக்கவில்லை. இந்நிலையில் மத்திய அரசின் பணியாளர்துறை சார்பாக விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் உள்ளிட்ட நால்வரின் அதிகாரத்தை பணியாளர்துறை அபகரித்துக் கொண்டுள்ளது. இது சட்ட விரோதமானது. இது தொடர்பாக நால்வருக்கும் கடிதம் எழுத முடிவுசெய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply