தற்போதைய நிலையில் பாஜக அணிக்கும், அதிமுக அணிக்கும் இடையில்மட்டுமே போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் திமு.கவுக்கு 3–வது இடம்தான் கிடைக்கும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது ; கடந்த 45 ஆண்டுகளாக தி.மு.க, அ.தி.மு.க என 2 கட்சிகளை சேர்ந்த அணிகள் மட்டுமே தமிழக தேர்தல்களத்தில் இருந்துள்ளன. வருகிற பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக தலைமையில் வலிமையான மாற்று அணி அமைக்கப்பட்டுள்ளது. இந்தஅணியில் பாமக மற்றும் தேமுதிக இடம்பெற்றாலும் கூடுதல்பலம் சேர்க்க முடியும்.

தற்போதைய நிலையில் பாஜக, மதிமுக கூட்டணி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தேமுதிக மற்றும் பாமக.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஊழல் ஒழிப்பு கோஷத்துடன் உளுந்தூர் பேட்டையில் மாநாடுநடத்தும் விஜயகாந்த் கண்டிப்பாக தி.மு.க மற்றும் காங்கிரசுடன் கூட்டணி சேர மாட்டார்.

தற்போதைய நிலையில் பாஜக அணிக்கும், அதிமுக அணிக்கும் இடையில்மட்டுமே போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் திமுகவுக்கு 3வது இடம்தான் கிடைக்கும். திமுக-வோடு கூட்டணி அமைத்தால் தேமுதிக-வின் கடைசி அத்தியாயம் எழுதப்படும்.

தமிழகத்தில் மோடிக்கு 17 சதவீத வாக்குகள் உள்ளன. வருகிற 8–ந்தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் இதுவரை காணாத அளவிற்கு மக்கள்கூட்டம் திரளும். மோடிக்கு கிடைக்கும் இந்த ஆதரவை விஜயகாந்த் மற்றும் ராமதாஸ் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இந்ததேர்தலில் அரசியல் அதிசயம் நிகழும். மோடி மீதான எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் அதிகரித்து உள்ளது, அ.தி.மு.க.–தி.முக.வுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 45 ஆண்டுகளாக ஆட்சி நடத்திவரும் திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை மீட்டு தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தந்தை–மகனுக்கிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் மட்டுமே முக.அழகிரி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விஜயகாந்த் குறித்து கருத்து வெளியிட்டதற்காகவோ, கட்சிகட்டுப்பாட்டை மீறியதற்காகவோ அல்ல என்று அவர் கூறினார்.

Leave a Reply