தீவிரவாதிகளால் நரேந்திர மோடி உயிருக்கு ஆபத்து என்று மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது .

பாராளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தீவிரபிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஏப்ரல்–மே மாதம் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு வெற்றிவாய்ப்பு அதிகரித்துள்ளதாக பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகிற நிலையில், மோடியின் உயிருக்கு தீவிரவாதிகள் குறிவைத்திருப்பதாக மத்திய உளவுத் துறை திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது. தீவிரவாதிகளின் பல்வேறு தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து கேட்டதில் இது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கிவருகிற லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளும், தடைசெய்யப்பட்ட இந்திய முஜாகிதீன் தீவிரவாதிகளும் இதற்காக கூட்டுச்சதி செய்துள்ளனர்.

மோடியின் பிரசார கூட்டத்தில் குண்டுவெடித்து நாசவேலை அரங்கேற்ற சதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் குறிபார்த்து துப்பாக்கிச் சூடு நடத்துவதில் நிபுணத்துவம் பெற்ற 3 பேருக்கு மோடியை சுட்டுவீழ்த்தும் வேலை தரப்பட்டுள்ளது.

இந்த 3 தீவிரவாதிகளும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். அவர்கள் லஷ்கர் இதொய்பா மற்றும் இந்திய முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள்.

மோடியை கொல்லும் பணி தரப்பட்டுள்ள 3 தீவிரவாதிகளில் ஒருவன், இந்திய முஜாகிதீன் தீவிரவாதி ஹைதர் அலிஷக்கூர் என்பதுவும் தெரியவந்துள்ளது. இந்தப்பணியில் அவன் சிமி இயக்கத் தீவிரவாதிகளின் உதவியையும் நாடியுள்ளதாக கூறப்படுகிறது.

சிமி இயக்க தீவிரவாதியான அபுபைசல் என்பவன் கடந்த அக்டோபர் 1–ந்தேதி மத்திய பிரதேச மாநிலம், கந்த்வா சிறையில் இருந்து தப்பினான். அவன் மறுபடியும் டிசம்பர் 24–ந்தேதி பிடிபட்டான். இடைப்பட்ட காலத்தில் அவன் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததும் அம்பலத்துக்கு வந்துள்ளது. மேலும், மோடியை கொல்வதற்காக அவன் ஹிஸ்புல்முஜாகிதீன் மற்றும் தெஹ்ரிக் இதலீபான் தீவிரவாதிகளை தொடர்பில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

மோடியின் பொதுக்கூட்டங்கள் அனைத்திலும் பல அடுக்கு பாதுகாப்பு போடப் படுவதாகவும், உச்சக்கட்ட உஷாராக இருக்கும்படி போலீசாருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் மத்திய உளவுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

பீகார் மாநிலம், பாட்னாவில் கடந்த அக்டோபர் மாதம் 27–ந்தேதி நரேந்திரமோடி பங்கேற்ற பிரசாரகூட்டத்தில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்ததும் அதில் 6 பேர் கொல்லப்பட்டதும், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததும் நினைவு கூரத்தக்கது. இப்போது மீண்டும் நரேந்திரமோடி பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்புகள் நடத்தவும், அவரை குறிபார்த்து சுட நிபுணத்துவம் பெற்ற தீவிரவாதிகள் அமர்த்தப்பட்டுள்ளதும் அரசியல் அரங்கில் மட்டுமல்லாது மக்களிடையேயும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply