மேல்புறம் ஒன்றிய பாஜக சார்பில் அரசியல்விளக்க பொதுக் கூட்டம் மற்றும் மாற்று கட்சியினர் பாஜக.வில் இணையும்விழா கழுவன் திட்டை சந்திப்பில் நடந்தது.

இந்த விழாவில் பாஜக. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தேமுதிக. இன்று ஊழல் எதிர்ப்புமாநாடு நடத்துகிறது. அது காங்கிரஸ் ஊழலையும், அதன் கூட்டணி கட்சிகள் ஊழலையும் உலகுக்கே எடுத்துகாட்டும் மாநாடாக அமையும். பாஜக கூட்டணியில் பாமக. தேமுதிக. கட்சிகள் உறுதியாக இணையும். வருகிற 8–ந்தேதி வண்டலூரில் நரேந்திர மோடி பங்கேற்கும் மாநாட்டில் கூட்டணி குறித்து பாஜக. அறிவிப்பு வெளியிடும்.

இந்தியாவில் முழுக்க, முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் ராக்கெட்டை செலுத்துவதற்கு கிரையோ ஜெனிக் என்ஜின் தயாரிக்கப்படுகிறது. இதில் குமரி மாவட்டத்தைச்சேர்ந்த விஞ்ஞானிகள் காட்டுவிளை நாராயணன் மற்றும் சிவன் ஆகியோர் முக்கியபங்காற்றினர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விருது வழங்காதது ஏமாற்றம் தருவதாக உள்ளது. அந்த விஞ்ஞானிகளை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷன் விருது வழங்கவேண்டும்.

ஸ்ரீ ஹரிகோட்டாவில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் உள்ளது. குலசேகரப் பட்டினத்திலும் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அனைத்து வசதிகளும் உள்ளது. அங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்கவேண்டும். சிவாலய ஓட்டத்தையொட்டி 27–ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க தமிழக முதல்வருக்கு மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்யவேண்டும். சிவாலய ஓட்டத்துக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்யவேண்டும். தனியார்காடுகள் பாதுகாப்பு சட்டம் அதிகபாதிப்பு ஏற்படுத்துவதால் குமரி மாவட்டத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply