முன்னேற்றம், முன்னேற்றம், முன்னேற்றம் என்பதே பா.ஜ.,வின் தாரக மந்திரமாக இருக்கிறது. நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்ல பா.ஜ., தயாராக இருக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் சுயமரியாதையும் வாழ பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டம், சென்னை அருகே உள்ள வண்டலூரில் நடந்தது. நரேந்திர மோடி தனிவிமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்திறங்கினார். தமிழக பா.ஜ., சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்திலிருந்து காரில் கிளம்பி, வண்டலூரில் பொதுக்கூட்டம் நடக்கும் திடலுக்கு சென்றார். தமிழகத்தில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்திருக்கும் கட்சி தலைவர்கள் மோடியை வரவேற்றனர். இக்கூட்டத்தில் சுமார் ஏழு லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது: தமிழ் மண்ணே வணக்கம், தமிழ்த்தாய்க்கு வணக்கம், தமிழ் நண்பர்களே வணக்கம். மேடையில் அமர்ந்திருக்கும் அனைத்து தலைவர்களுக்கு வணக்கம். இன்று மதியம் இம்பால் மற்றும் கவுகாத்தியில் பேசிவிட்டு உங்களுடன் பேச இங்கு வந்திருக்கிறேன். 2014ல் மக்கள் எண்ண ஓட்டம் எப்படி இருக்கிறது என்பது இந்தக் கூட்டத்தை பார்த்தாலே தெரிகிறது. நாடு முழுவதும் பா.ஜ., அலை வீசுகிறது. சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் முடிந்தும் கூட, காங்., ஆட்சியில் நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. மக்களிடம் பணம் இருந்தால் எதனையும் விலைக்கு வாங்கிவிட முடியும். ஆனால் பணம் இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும். உடல்நிலை சரியில்லாத ஏழைகள் எங்கு போவார்கள். ஒரு கட்சி தலைவர் சொல்கிறார் ஏழ்மை என்பது ஒருவரின் மனநிலையை பொறுத்தது என்று. இப்படி பேசுவது ஏழைகளுக்கு செய்யும் அநீதி இல்லையா.

ஏழைகளின் மீது மத்திய அரசுக்கு அக்கறை இருந்திருந்தால், தமிழக மீனவர்களுக்கு துன்பம் ஏற்பட்டிருக்காது. தமிழக மீனவர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். இலங்கை, பாக்., சிறையில் மீனவர்கள் துன்பத்தை அனுபவிக்கின்றனர். இதற்கு காரணம் மத்தியில் இருக்கும் பலவீனமான காங்., ஆட்சிதான். இலங்கை, பாக்., சீனா, நேபாளம் ஆகிய நாடுகளிடம் ஏற்பட்டிருக்கும் பிரச்னைக்கு காங்.,கே காரணம். அண்டை நாடுகளுடன் நட்புறவு இருக்க வேண்டுமானால் வலிமையான ஒரு அரசு தேவை. அண்டை நாடுகளிடம் மட்டுமல்லாமல், உள்நாட்டுக்குள்ளேயே மாநிலத்துக்கு மாநிலம் பிரச்னை ஏற்படுகிறது. மக்களின் மனநிலையை அரசு அறிந்து கொள்ளாவிடில் நாட்டில் பதட்ட சூழ்நிலை உருவாகும்.காங்.,கின் பத்தாண்டு கால ஆட்சி நாட்டையே சீர்குலைத்துள்ளது. ஒரு மாநிலத்தின் கவர்னர் பொறுப்பு மிகவும் முக்கியமானது. ஆனால் காங்., அரசு கவர்னர்களின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது. கவர்னர்களின் ராஜ்பவன் காங்கிரஸ் கட்சியின் அலுவலகமாக செயல்படுகிறது. மாநில அரசு கொண்டு வரும் சட்டத்தை, காங்., கட்சியால் நியமிக்கப்பட்ட கவர்னர் நிராகரிப்பார். குஜராத்தின் முன்னேற்றத்தை தடுக்க மத்திய அரசு பலவழிகளில் முயற்சி மேற்கொள்கிறது. சி.பி.ஐ., காங்கிரசால் தவறாக பயன்படுத்துகிறது. தங்களது சொந்த செயல்களுக்கு மட்டுமே சி.பி.ஐ., உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த அரசாங்கம் கோர்ட்டையும் அவமதிக்கிறது. சுப்ரீம் கோர்ட் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதனையும் காங்., கட்சி இழிவுபடுத்துகிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என கனவு கண்டார். அதற்காக ஒரு திட்டத்தையும் கொண்டு வந்தார். அந்த திட்டத்தை செயல்படுத்த கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அந்த கோர்ட் உத்தரவையும் மதிக்கவில்லை.

திட்டக்கமிஷனுக்கு மத்திய அரசு மதிப்பு அளிப்பதில்லை. மத்திய அரசுக்கும், ராணுவத்துக்கும் பதட்டம் இருக்கக்கூடாது. கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் தவறான போக்கால், ராணுவத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. ராணுவத்தில் எவ்வளவு கிறிஸ்தவர்கள், எவ்வளவு முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என கணக்குக் கேட்டது. அதற்கு பிரிவினைவாதத்தை ராணுவம் அனுமதிக்காது என பதிலளித்து விட்டது. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பலவிதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனை சரிசெய்ய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை. திட்டக்கமிஷனுக்கும், அரசுக்கும் இடையேயும் முரண்பாடு நடந்து வருகிறது. மாநில அரசு எடுக்கும் முடிவுகளை மதிப்பதில்லை. இந்தியாவில் கூட்டாட்சி முறை நடைமுறையில் உள்ளது. மாநில அரசுகளை, மத்திய அரசு மதித்து நடக்க வேண்டும். அவ்வாறு இணக்கமான சூழ்நிலை இப்போது இல்லை.ஒரு கிராமத்துக்கு குடிநீர் இணைப்பு தர ரயில் தண்டவாளத்தை கடந்து குழாய் செல்ல வேண்டியிருந்தது. அதற்கு ரயில்வே நிர்வாத்தை வைத்திருக்கும் அரசு பல ஆண்டுகளாக அனுமதி தரவில்லை. மக்களின் குடிநீர் தேவையை கூட கவனத்தில் கொள்ள மறுக்கிறது.

குஜராத்துக்கு ஒரு காங்., தலைவர் சென்றார். அங்கு அவர் பா.ஜ.,வை கீழ்தரமான வார்த்தைகளால் பேசினார். காங்., கட்சியை பல ஆண்டுகளாக ஆட்சியில் அமர்த்தாத, குஜராத் மக்களிடையே அவர் அப்படி பேசியிருக்கிறார். மத்திய அரசில் மறுவாக்கு மந்திரி என்று ஒருவர் உள்ளார். முதலில் ஓட்டு எண்ணும் போது தோல்வியடைந்து, மறுமுறை எண்ணும் போது வெற்றி பெற்றார். அவர் பொருளாதாரம் குறித்த அறிவு எனக்கில்லை எனக்கூறுகிறார். காங்., கட்சியை வழிநடத்தும் மன்மோகன், நிதியமைச்சர் ஆகிய இருவரும் பொருளாதார நிபுணர்கள் எனக் கூறுகின்றனர். அவர்களை விட அறிவாளிகள் இல்லை என நினைக்கின்றனர். அவர்கள் வெளிநாட்டு பல்கலைகளில் படித்தவர்கள். நான் உள்ளூர் பள்ளிக்கூடத்தில் படித்தவன். அவர்களுக்கு சவால் விடுகிறேன். வாருங்கள் மோதிப் பார்க்கலாம். நாட்டின் வளர்ச்சியை பொருளாதார வளர்ச்சி விகிதத்தை வைத்து கணக்கிடலாம். நிதியமைச்சராக உள்ள மறுஓட்டு மந்திரியால் நாட்டின் பொருளாதாரம் எப்படி உள்ளது என மக்களுக்கே தெரியும். அவர்களின் இந்த பொருளாதார அறிவை வைத்து இதைத்தான் சாதித்துள்ளனர்.

நான் முதலமைச்சராக பதவியேற்கும் போது குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மைனஸ் 4ல் இருந்தது. தற்போது குஜராத்தின் வளர்ச்சி விகிதம் 10க்கும் அதிகமாக உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியே 7 சதவீதமாகத்தான் உள்ளது. எனது சிற்றறிவை வைத்து இதை சாதித்துள்ளேன். தற்போது நாட்டின் கடன் 50 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. மாநில அரசுகளை விட மத்திய அரசு அதிகமாக கடன் வாங்குகிறது. இதற்கு காரணம் நிதியமைச்சராக உள்ள மறுஓட்டு மந்திரிதான். தமிழக மண்ணிலிருந்து வந்த அந்த அமைச்சர் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்திருக்கிறார்.

நாட்டின் வேலையின்மை சதவீதம் 2.2. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் கதவைக்கூட பார்க்காத நான் ஆட்சி செய்யும் குஜராத்தின் வேலையில்லாதவர்களின் சதவீதம் 0.5. இதை நான் பெருமையோடு தெரிவித்துக் கொள்ள முடியும். பொருளாதார அறிவு என்பது புத்தகத்தில் இருந்து மட்டும் வந்து விடாது. இந்த வெளிநாட்டு பல்கலைகளில் படித்தவர்கள் அறிவு, புத்தக அறிவு மட்டும் தான்.மக்களிடன் நெருங்கிப் பழகும் என்னால் பொருளாதார சூழ்நிலையை நன்கு தெரிந்து கொண்டிருக்கிறேன். "ஹார்வர்டு' பல்கலைகளில் படிப்பதால் மட்டும் உயர்வு வந்து விடாது. "ஹார்டு ஒர்க்' இருந்தால் மட்டுமே உயர்வு வரும். மக்களுக்காக கடுமையாக உழைக்க நான் தயார். முன்னேற்றம், முன்னேற்றம், முன்னேற்றம் என்பதே பா.ஜ.,வின் தாரக மந்திரமாக இருக்கிறது. நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்ல பா.ஜ., தயாராக இருக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் சுயமரியாதையும் வாழ பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும். உங்களின் உதவிக்கும், ஆதரவுக்கும் நன்றி. வந்தே மாதரம், வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று மோடி பேசினார்.

Leave a Reply