சிவகங்கை மாவட்டம் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதற்கு மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரமே காரணம் என பாஜக. தமிழகத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:

மத்தியில் பாஜக. ஆட்சி ஏற்பட்டால் தாழ்த்தப் பட்டவர்கள், மலை வாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் காலமாக அடுத்த 10 ஆண்டுகள் அமையும். தாழ்ந்துகிடக்கும் மக்களை உயர்த்தும் பணியை பாஜக. நிறைவேற்றும் என்று நரேந்திரமோடி கூறியுள்ளார். மத்திய காங்கிரஸ் அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால் மீனவர்கள் தொடர்ந்து துன்புறுத்தப் படுகின்றனர். இதனால் வலுவான மத்திய அரசு அமையவேண்டும் என்று மோடி வலியுறுத்தி இருக்கிறார். இதனால் மீனவர்களின் பிரச்னைகள் முடிவுக்குவரும்.

கடந்த மக்களவை தேர்தலில் சிதம்பரம் எப்படி வெற்றிபெற்றார் என்பதை பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மிகத்தெளிவாக வெளிக்காட்டினர். சிதம்பரம் இத்தனை ஆண்டுகளாக நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் என பதவியிலிருந்தும் தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு எந்த ஒருநன்மையும் செய்யவில்லை. இன்று சிவகங்கை மாவட்டம் மிகவும் பின் தங்கி இருப்பதற்கு ப. சிதம்பரமே காரணம்.

தமிழக மீனவர்களை காக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதவர் அவர். காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்ற பிரச்னைகள் உள்ள போதும், தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் எடுக்காதது தலைகுனிவுதான். தேர்தல் கூட்டணிக்கு கெடு எதுவும் விதிக்கவில்லை. மோடி சென்னை வருகையையொட்டி, கூட்டணி முடிந்துவிட்டால் கூட்டணித் தலைவர்களிடம் பேசலாம் என இருந்தோம். தற்போது கூட்டமும் முடிந்துவிட்ட நிலையில், பாஜக. அவசரப்படவில்லை. தேர்தலுக்கு இன்னமும் கால அவகாசம் உள்ளது. தே.மு.தி.க நிலைப்பாடு பற்றி ஏற்கனவே நாங்கள் தெரிவித்துவிட்டோம். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் – திமுக கூட்டணி அமையுமா? என்று கேட்கிறீர்கள். தேர்தலில் காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல. அக்கட்சியோடு சேரும்கட்சிகளும் தண்டிக்கப்பட வேண்டியவைதான். என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

Leave a Reply