பீகாரில் லாலுபிரசாத் தலைமையிலான ராஷ்டீரிய ஜனதாதளத்தின் 22 எம்எல்ஏ.க்களில் 13 பேர் கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர் . பின்னர் உருவான திரைமறைவு சமரசத்தில் அவர்களில் 6 பேர் கட்சியிலே நீடிப்பதாக தெரிவித்துள்ளனர்.

லாலுகட்சியில் இருந்து விலகிய எம்எல்ஏ.க்கள், பீகாரில் ஆளும் நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவு தெரிவித்தது, அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

எம்.எல்.ஏ. சாம்ராட் சௌத்ரி தலைமையில் ராகவேந்திர பிரதாப்சிங், துர்கா பிரசாத் சிங், லலித் யாதவ், அனிருத் குமார், ஜிதேந்திர ராய் உள்பட 13 பேர் லாலு கட்சியிலிருந்து விலகினர். இவர்கள் அனைவரும் பீகார் சட்டப் பேரவையில் தங்களுக்கு தனி இடம் ஒதுக்கவேண்டும் என பேரவைத் தலைவர் உதய்நாராயண் சௌத்ரியிடம் கோரினர்.

அத்துடன், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அரசுக்கு ஆதரவு அளிப்பதாக சட்டப்பேரவைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதுதொடர்பாக சாம்ராட் கூறும் போது, “தமது கட்சியை கடந்த 3 மாதங்களாக காங்கிரஸ் கட்சியின் கிளை அணியாக லாலு மாற்றி விட்டார். காங்கிரஸ் கட்சியை அவர் முக்கியமாகக் கருதுகிறார். காங்கிரஸுடன் கூட்டணிவைப்பதற்கு பதிலாக, அக்கட்சியுடன் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை இணைத்துவிடுவதே லாலுவுக்கு சிறப்பாக இருக்கும்” என்றார்.

இந்த நிலையில், 13 அதிருப்தி எம்எல்ஏ.க்களில் 6 பேர், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் சட்டமன்றத்தலைவர் அப்துல் பாரி சித்திக்குடன் செய்தியாளர்களைச் சந்தித்தனர். தாங்கள் தவறுதலாக அந்தக்கடிதத்தில் கையெழுத்திட்டதாகவும், கட்சியில் இருந்து விலகவில்லை என்றும் சற்று பல்ட்டி அடித்துள்ளனர்.

இதனிடையே, இந்தவிவகாரம் தொடர்பாக விசாரித்து வருவதாக ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத்யாதவ் தெரிவித்தார்.

Leave a Reply