மூன்றாவது அணி என்ற பெயரிலான நப்பாசை சம்பிரதாயங்கள் துவங்கிவிட்டன… உலகத்தலைமைக்கு ஆசைப்பட்டு காணாமல் போன கம்யூனிஸ்டுகள்தான் இதன் பின்னணி சாணக்கியர்களாக செயல்படுகிறார்கள். இவர்கள் போடும் கணக்கு முழுக்க பிணக்காகவே இருந்தாலும் அதை நம்பத்தகுந்த வகையில் சொல்லுவதில் இவர்கள் சமர்த்தர்கள், அதானல்தானோ என்னவோ கம்யூனிசம் உலக அரங்கில் காலவதியாகி காணாமல் போய் இருப்பினும் இன்னும் இங்கே உயிரை பிடித்துக்கொண்டு "கோமா" நிலையிலாவது இருக்கிறது.

மமதா, சமதா, ஜெ, நிதீஷ், மாயா, கௌடா என்று, கம்யூனிச சிந்தாந்ததிற்கு எந்த வகையில் பொருந்தாத, தொடர்பில்லாத கட்சிகளுடன் சேர்ந்து தனது இந்திய வாழ்க்கையை நீட்டிக்க முயற்சிக்கிறது. அடிப்படையில் தோன்றிய இடத்திலேயே காணாமல் போன கம்யுனிச சித்தாந்தம், பரவிய பகுதியெல்லாம் பாழ்பட்டு, உருகுலைந்து போனது. தொழிலாளர்களின் ஆட்சி என்ற பெயரில் இவர்கள் கண்ட கனவு உலக சமுதாயத்தால் புறம்தள்ளப்பட்டபின், "எத்ததின்னா பித்தம் தெளியும்" என்று ஏங்கித்தவிக்கும் நிலையில்தான் கம்யுனிஸ்ட் என தன்னை கூறிக்கொள்பவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை.

கோமாவில் இருப்பவனுக்கு டாக்டர் ஆகும் கனவு வருவது போலத்தான் இன்று மூன்றாவது அணியை கட்டமைக்க கம்யூனிஸ்டுகள் எடுக்கும் முயற்சி. சுதந்திர இந்தியாவின் தலைமை ஆங்கில ஏகாதிபத்தியத்தின் மறு உருவான காங்கிரஸின் கையில் சென்றபின், பிரித்தாளும் சூழ்ச்சிக்கு புத்துயிர் கிடைத்ததன் விளைவாக, பெரும்பான்மை, சிறுபான்மை என நாட்டின் பல்வேறு சமுதாயங்களுக்கு மத்தியில் பிளவை உருவாக்கிய காங்கிரஸ், இந்த சதியின் மூலமே சுமார் 55 ஆண்டுகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது.

இதில் ஐந்தாண்டுகளை அவர்களுக்கு ஆதரவு கொடுத்த பெருமை கம்யூனிஸ்டுகளை சேரும். ரஷ்யப்புரட்சிக்குப்பின், உலக அரங்கில் இவர்களுக்கு சாதகமான காலம் என்று ஒன்று இருந்ததும் அதை தக்கவைக்கும் சித்தாந்த பிடிப்பும், தெளிவும் கம்யூனிஸ்டுகளிடம் இல்லாமல் போனதும், சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே நடைமுறை சிக்கல் இருந்ததுமே இவர்களின் வீழ்ச்சிக்கு காரணம் என்பதை இன்றுவரை தங்களை கம்யூனிஸ்ட் என கூறிக்கொள்பவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

ரஷ்யாவில் ஆரம்பித்த அதே 20ம் நூற்றாண்டில் கம்யூனிசம் வாழ்ந்து, வதங்கி மறைந்தும் போனது. இன்னும் அதன் மீது நம்பிக்கையுடன் ஒரு கூட்டம் இருப்பது இந்திய பண்பாட்டில் சாத்தியமே… இந்த நாட்டின் பண்பாடுகளும், கலாச்சாரமும்தான் மாற்று கருத்துக்களுக்கு ஏற்ற இடத்தை கொடுத்தன. மாறாக, மாற்று கருத்துக்களை கொண்டிருந்த காரணத்தாலேயே 30 லட்சம் நபர்களை கொன்று குவித்த ரஷ்ய கம்யூனிச கயமையை உலகம் கடந்த 20 ஆண்டுகளில் முழுமையாக தெரிந்து கொண்டது.

காங்கிரசை எதிர்ப்பதாக இவர்கள் கூறும் கயமை சமுதாயம் அறிந்ததே. கீரியும், பாம்பும் ஒன்றாக இருப்பதை பார்பவர்களால் ரசிக்க முடியும், ஆனால் அது அவை இரண்டுக்கும் தான் கடினமான விஷயம். 2004 தேர்தலில் 60 தொகுதிகளை கைப்பற்றிய கம்யூனிஸ்டுகள் 2009ல் 24 தொகுதியாய் இறங்கிபோனதும் இந்த கயமையால்தான். தேர்தலுக்குப்பின் காங்கிரசுக்கு கம்யூனிஸ்டுகள் கொடுத்த ஆதரவும் இந்த வகையையே சாரும்.

இந்த கயமைக்கு மக்கள் கொடுத்த பதிலடிதான் குறைந்துபோன இடதுசாரிகளின் எண்ணிக்கை. வங்கம் பங்கம் ஆனதும் இதுபோன்ற பொய்மைகளால்தான். கம்யூனிசம் தோன்றி 100 ஆண்டுகளுக்கும், காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் காதல் 5 ஆண்டுகள் கடுமையான முயற்சிக்குப்பின் தோற்றுப்போனதும் வரலாற்று உண்மைகள். வங்கத்தில் ஆட்சியை இழந்ததும்தான் கம்யூனிஸ்டுகளின் கடந்த 10 ஆண்டு வேதனையான சாதனை இந்த சூழ்நிலையில்தான் இவர்கள் மூன்றாவது அணிக்கு அச்சாரம் போடுகிறார்கள். ஆனால் உண்மை என்ன?! எந்த ஒரு மாற்றத்திற்கும் அடிப்படை தேவை, குறிப்பாக ஜனநாயகத்தில், மாற்றம் வேண்டும் என மக்களின் ஏக்கமும், எப்படிப்பட்ட தலைமை வேண்டும் என்று அந்த சமுதாயம் செய்யும் கற்பனையும், அந்த கற்பனையை வலுபடுத்த தனது நேரத்தை தரத்தயாராக இருக்கும் மாற்றத்தின் தளபதிகளான இளைஞர்களும், மாற்றம் எப்படி பட்டதாக இருக்கவேண்டும் என்பதற்கான தேசத்தின் பொது சிந்தனையும், அதன் காரணிகளும்தான்.

இந்த நாடுதான் இழந்த பெருமையை திரும்பப்பெற ஏங்கித்தவிக்கிறது. ஊழலின் உச்சகட்டமாகவும், வளர்ச்சியே இல்லாமலும், தேசநலனை அடகு வைத்தும், தவறுகளை நியாயப்படுத்தியும், தட்டிக் கேட்பவர்களின் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்தும் காங்கிரஸ் நடத்திவரும் அசிங்க அரசியலை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதை தூக்கி எறிய காத்து இருக்கிறார்கள். நாட்டு மக்களை சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரித்து வைத்து அவர்களின் மத்தியில் பிணக்கை உருவாக்கும் தந்திரத்தை சிறுபான்மை மக்களும் புரிந்துகொள்ள துவங்கியுள்ளனர்.

வெளிநாடு சென்று திரும்பும் இளைஞர்களுக்கு அங்கே செல்லும் போதுதான் நம்நாட்டின் பெருமையே புரிய ஆரம்பிக்கிறது. நாட்டின் பெருமை மேலோங்க வேண்டும் என அவர்கள் எண்ணுவதும் அதற்கேற்ற தலைமையை தேடுவதும் இன்று ஒரு புதுவித மாற்றத்தை நோக்கி நம்மை செலுத்திக் கொண்டிருக்கிறது. நாட்டின் பெரும்பான்மை இளைஞர்களுக்கு பெருமையுடன் கூடிய வளர்ச்சி வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதை பாஜகவால் மட்டுமே தரமுடியும் என்பது கடைகோடி கிராமத்து இளைஞன் வரை சென்று அடைந்திருக்கிறது.

படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை டீக்கடைகாரர்கள் முதல் டெக்னோகிராட் வரை மோடி என்ற மகத்தான மனிதனுடன் தங்களை அடையாளப் படித்திக்கொள்ள முடிகிறது. நாட்டின் பலதரப்பட்ட மக்களின் நம்பிக்கை நாயகனாக இன்று மோடி வலம் வருகிறார். ஹைதராபாத்தில் துவங்கி சென்னை வரை 36 ஊர்களில் கூட்டங்களை 1.5 கோடி மக்களை சூறாவளி சுற்றுப்பயணத்தில் சந்தித்த இந்த மனிதனை நோக்கி மக்கள் வெல்லம் கூடிக்கொண்டேதான் போகிறது.

170 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு என்று சென்ற ஆகஸ்டில் துவங்கிய கணிப்புக்கள் போய் பிப்ரவரியில் 220 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு என்று கூறும் அளவில் மோடி ஆதரவு அலை நாடு முழுவதும் வீசுகிறது. இந்த புயலை போன்ற ஆதரவுக்கு முன் மூன்றாவது அணியின் கனவு என்னவாகும் என்பது நாடறிந்ததே. நாட்டில் இருப்பது மூன்று அல்ல, நான்கு அணிகள் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். காங்கிரஸ், பாஜக, மூன்றாவது அணிக்கு ஆசைப்படும் பிராந்திய கட்சிகள், மூன்றாவது அணிக்கு ஆசைப்படும் பிராந்திய கட்சிகளுக்கு எதிரான பிராந்திய கட்சிகள் என பிரித்துக்கொள்வதன் மூலமே உண்மையானதோர் அரசியல் அலசலை நாம் காணமுடியும்.

பாஜக அணி இன்று மிகவலுவாகவும், காங்கிரஸ் தனது பலத்தை இழந்தும் உள்ளன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இன்றைய நிலையில் 210-240 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என கள ஆய்வுகள் கூறுகின்றன. காங்கிரஸ் சுமார் 80-90 தொகுதிகளை கைப்பற்றலாம் என்கின்றன ஆய்வுகள். இது இன்றைய நிலை…

வரும் 2-3 மாதங்களில் இந்த நிலை வெகுவாக பாஜக அணிக்கு சாதகமாகவே மாறும் என்பது சாதாரணமாக அரசியலை அலசுபவர்களாலேயே கூறமுடியும். சுமார் 300-330 இடங்களை இரண்டு தேசியகட்சிகள் கைப்பற்றியது போக மீதம் உள்ள 210-240 இடங்களைத்தான் மற்றவர்களால் பெறமுடியும். ஒரு வாதத்திற்கு 240 என்றே வைத்துக்கொள்வோம்… இதில் முலயாமும்-மாயாவதியும் இருப்பார்கள், திமுக-அதிமுகவும், ஒய்.எஸ்.ஆர்-தெலுங்குதேசம், மம்தா-கம்யூனிஸ்ட் என பாம்பும்-கீரியுமான கூட்டம் ஒன்று இருக்கத்தான் செய்யும். அவர்களின் மாநில அரசியல் நிர்பந்தங்கள் என்ன என்பதை இங்கு கூறத் தேவையில்லை.

உண்மையை உரக்கச் சொல்வோம். .

1. சுமார் 16 மாநிலம்/யூனியன் பிரதேசங்களில் 140 தொகுதிகளில் பாஜக-காங்கிரஸ் நேரடி போட்டி. மற்றவர்களுக்கு அங்கு இடமில்லை. வாய்ப்பு பாஜக அணி-105, காங்-30 மற்றவர்-5(ஆம் ஆத்மி/ஹரியானா கட்சிகள் உட்பட).

2. வங்கம், கேரளா, மஹாராஷ்ட்ரம், ஆந்திரா உட்பட சுமார் 13 மாநிலம்/யூனியன் பிரதேசங்களில் 182 தொகுதிகளில் வாய்ப்பு பாஜக அணி-45, காங்-55 மற்றவர்-82. இதில் ஒய்.எஸ்.ஆர், தெலுங்குதேசம், மமதா, தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி, அசாம் கன பரிஷத், தேசிய மாநாடு ஆகியவை எதோ விதத்தில் பாஜக வின் முன்னால் கூட்டணியிலோ அல்லது இன்னாளில் கூட்டணிக்கு தாயாராக இருப்பவர்கலே ஆவர். இவர்களின் எண்ணிக்கை சுமார் 55-60 வரை…ஆக கம்யூனிஸ்டுகளுக்கு இதில் இருக்கும் வாய்ப்பு சுமார் 25 தொகுதிகள்.

3. கடைசி 6 மாநிலங்கலான தமிழகம். உபி, பீகார், கர்நாடகா, ஒரிசா, ஜார்கண்டின் மொத்த தொகுதிகள் 222. இதில் வாய்ப்பு பாஜக அணி-95, காங்-25 மூன்றாவது அணி சந்திப்பில் வந்தவர்களுக்கு 75 தொகுதிகளும், அவர்களுக்கு எதிரானவர்களுக்கு 30 தொகுதிகளும்… இந்த 75ல் பாஜக வை ஆதரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படும் அதிமுக தொகுதிகளும் அடங்கும்.

4. 257 தொகுதிகளை கொண்ட 26 மாநில/யூனியன் பகுதிகளில் இவர்களுக்கு மூன்றாவது அணியின் பெயரை சொல்ல ஒரு நட்பு கூட இல்லை. மீதம் உள்ள 286ல் தில் 180-200ல் தான் மற்றகட்சிகள் வெற்றி வாய்ப்பு அதில் பாதி பேர் பாஜகவுடன் கூட்டுக்குத் தயார்.

5. தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர், மமதா, மாயா போன்ற மாநிலகட்சிகள் வெற்றிபெற வாய்ப்பு சுமார் 75 தொகுதிகள். இவர்கள் 3ம் அணியில் இல்லை…ஆக மூன்றாம் அணியாக கருதப்படும் அணியின் மொத்த வெற்றி வாய்ப்பே 100க்கும் குறைவு,

கம்யூனிஸ்டிகள் உட்பட… இவை இப்படி இருக்க, மூன்றாவது அணியை அமைப்போம் என்ற கம்யூனிஸ்டுகளின் வாதத்தின் பின்னணியில் உள்ள மர்மம் அவர்களின் தேசிய கட்சி என்ற அங்கீகாரம், பெருமையை தாங்கள் இழப்போம் என்ற பயமே ஆகும். எலெக்ஷன் கமிஷனின் நியதிகளின்படி 6% வாக்குகளை தேசிய கட்சி பெற வேண்டும் மற்றும் குறைந்தது 4 மாநிலங்களில் இருந்து அவர்களின் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 25 எம்எல்ஏக்களுக்கு ஒரு எம்எல்ஏ என்ற அடிப்படையில் அவர்கள் நான்கு மாநிலங்களிலாவது தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கவேண்டும். இப்படி பல்வேறு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் கம்யூனிஸ்டுகளுக்கு உண்டு என்ற நிலையில், தங்களது தேசிய கட்சி என்ற அடையாளம் எங்கே காணாமல் போய்விடுமோ என்ற பயத்தில்தான் திருவோட்டுடன் அம்மாக்களையும், அய்யாக்களையும் இவர்கள் அணுகுகிறார்கள். இதில் தேசத்தின் மீது பற்றோ, சமுதாய மாற்றங்களோ இவர்களது எண்ணத்தில் எள்ளளவும் இல்லை என்பதே உண்மை.ஆக…இந்த மூன்றாம் அணி என்ற கற்பனை வெறும் கானல் நீர்தான்.

நன்றி; கல்யாணராமன் பாஜக

Leave a Reply