நாடுமுழுவதும் வீசும் நரேந்திரமோடி அலையும், காங்கிரஸ் அரசு மீதான மக்களின் கோப அலையும் மத்தியில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.

சென்னையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற கூட்டத்தில் நடப்பு அரசியல் நிலவரம் என்ற தலைப்பில் அவர் பேசியது:

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்கள் மோடி பிரதமராக வேண்டும் என விரும்புகின்றனர். அவரால் மட்டுமே ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றனர். அந்த அளவுக்கு நாடு முழுவதும் மோடியலை வீசுகிறது. அதேநேரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை ஆளும் காங்கிரஸ் அரசு மீது மக்கள் கடும்கோபத்தில் உள்ளனர். தங்களுடைய பிரச்னைகளை கண்டுகொள்ளாத மத்திய அரசு மீது மக்கள்விரக்தியில் உள்ளனர். மக்களின் இந்த கோப அலையும், மோடி அலையும் மத்தியில் ஆட்சிமாற்றத்தை உருவாக்கும்.

2004-ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு பதவியை விட்டுச் செல்லும் போது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதமாக இருந்தது. இது இப்போது 4.8 சதவீதமாக சரிந்துள்ளது. வாஜ்பாய் அரசு ஏற்படுத்திய பொருளாதார வளர்ச்சியால்தான் நாடு இதுவரை காப்பாற்றப்பட்டுள்ளது. 2014-15-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் உரிமை தற்போதைய அரசுக்கு கிடையாது. அடுத்த நான்கு மாத செலவுகளுக்கான அனுமதியை மட்டுமே நிதி அமைச்சர் கோர முடியும். ஆனால், விதிகளை மீறி நிதிநிலை அறிக்கை குறித்து நிதி அமைச்சர் சிதம்பரம் பேசியுள்ளார். சுதந்திர இந்தியாவில் அதிகாரமற்ற பிரதமராக மன்மோகன்சிங் இருக்கிறார். இரண்டு அதிகார மையங்கள் இருப்பதால் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்ல, மத்திய அமைச்சர்களும் பிரதமரை மதிப்பதில்லை.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ஜெயந்தி நடராஜன், ஏதோ எதிர்பார்ப்பு காரணமாக நூற்றுக்கும் அதிகமான திட்டங்களுக்கு அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். அவரை பிரதமரால் கட்டுப்படுத்த முடியவில்லை. கடைசியில் வேறு வழியின்றி அவரை ராஜிநாமா செய்ய வைத்தனர். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ரூ. 17 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அந்த அளவுக்கு அரசு நிர்வாகம் சீர்குலைந்துள்ளது.

பலவீனமான மத்திய அரசால் அண்டை நாடுகள்கூட இந்தியாவை மதிப்பதில்லை. 2009-இல் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு இந்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்தது. ஆனால் இலங்கை அதிபர் ராஜபட்ச இந்தியாவை மதிப்பதில்லை. அமெரிக்க தூதர் நரேந்திரமோடியை அவரது இல்லத்துக்கே வந்து சந்திக்கிறார். இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம் என அருணாசலப் பிரதேசத்தில் முழங்கினார் மோடி.

அடுத்த நாளே நாங்கள் எந்த நாட்டின் பகுதியையும் ஆக்கிரமிக்கவில்லை என சீன அரசு பதிலளிக்கிறது. இப்படிப்பட்ட வலுவான தலைவரையே மக்கள் விரும்புகின்றனர். வரும் தேர்தலில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் மட்டுமே நாட்டைக் காப்பாற்ற முடியும். இந்த சவாலான பணிக்கு தமிழகமக்கள் ஆதரவு தர வேண்டும். வரும் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். தமிழக தேர்தல் முடிவு யாரும் எதிர்பாராத அளவில் இருக்கும் என நம்புகிறேன்.

இலங்கைக் கடற் படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப் படுவதைத் தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நரேந்திரமோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தால் தமிழக மீனவர் பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை ஆகியவற்றுக்கு 3 மாதங்களில் தீர்வுகாணப்படும் என்றார் யஷ்வந்த் சின்ஹா.

தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல. கணேசன், தேசியச் செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மாநிலப் பொதுச்செயலாளர்கள் எஸ். மோகன்ராஜூலு, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply