டில்லியில் நரேந்திர மோடி, 2,000 வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பட்டய கணக்காளர்களை, அணி அணியாக சந்தித்து, அவர்களிடம், அடுத்து வரும், பாஜக., ஆட்சியின் பொருளாதார திட்டங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை, சூசகமாக தெரிவித்தார்.

அவர் பேசியதாவது: நம் குழந்தைகள், சர்வதேச அளவில் தொழில்நுட்ப அறிவை பரப்ப வேண்டும்; அது, தொழில் துறை மூலமாகத் தான் நடைபெற வேண்டும். அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியை, நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான், வர்த்தகம் முன்னேற்றம் அடையும். தொழில்நுட்ப வளர்ச்சியை, பயன்படுத்துவதன் மூலம், உலக சவால்களை, பயமில்லாமல் எதிர்கொள்ள முடியும். இப்போது, கிராமத்தில் உள்ள மக்கள் கூட, பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளை பயன்படுத்த விரும்புகின்றனர். அந்தப் பொருட்கள், தரம் உள்ளதாக இருக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.

சாதாரண மக்களின், வாங்கும் சக்தி அதிகரித்தால் தான், சிறு வியாபாரிகள், வர்த்தகத்தை பெருக்க முடியும். இணையதளம் மூலம், நாம் அனைத்தும் பெற முடியும் என்ற நிலை உருவாகி வருகிறது. இணையதள வர்த்தகத்தை முடக்கும் செயலில், அரசு இறங்க கூடாது. அதே நேரத்தில், சட்ட திட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். நவீன தொழில்நுட்ப உதவியுடன், வியக்கத்தக்க, ‘ஷாப்பிங் மால்கள்’ உருவாக்க முடியும். நம் முன்னோர்கள், வர்த்தகத்தின் திறனை அறிந்து வைத்திருந்ததால் தான், அதற்கு அதிக கவனம் செலுத்தினர். அனைத்து.

தரப்பு மக்களையும் இணைப்பதில் வர்த்தகம் முக்கியமாக உள்ளது. உலகளவிலான சவால்களால், நாம் பயப்பட தேவையில்லை. அவற்றை வாய்ப்பாக எடுத்துக் கொள்வோம். அவை, 10 அடி சென்றால், நாம், 15 அடி செல்வோம்.

உலகளவில், இந்தியாவில் தான், வர்த்தகர்கள் அதிகமாக உள்ளனர். நம்மால், உலக வர்த்தகத்தை கைப்பற்ற முடியும். ஒரு நடைமுறையை, சட்டத்தால் இயக்கிவிட முடியாது. சட்டம் நுழைந்தால், நடைமுறை உடைந்துவிடும். வரிமுறையில், பாஜக., ஆட்சிக்கு வந்ததும் மாற்றம் கொண்டு வர உள்ளோம். இப்போதைய அரசு, அனைவரையும், ‘திருடன்’ என, நினைக்கிறது. குறிப்பாக, வருமான வரித்துறையினர், வரி செலுத்துபவர்களை, திருடன் என்ற கோணத்திலேயே பார்க்கின்றனர். இவ்வாறு இருக்கக் கூடாது.

விவசாயம், தொழில், தயாரிப்புத்துறையில் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என, நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால், விவசாயத்தில் புது தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது போதுமானதாக இல்லை. இதை கூடுதலாக்கும்போது தான், வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்; அதை நாங்கள் மேற்கொள்வோம்.

இளைஞர்களிடம், திறனை வளர்ப்பது அவசியம்; அரசு வேலையை எதிர்பார்க்காமல் அவர்களுக்கு சுயதொழிலை ஏற்படுத்தி தருவோம். நிதி பற்றாக்குறை மட்டுமல்லாது பல்வேறு சவால்கள் உள்ளன. அரசு நிர்வாகம், நம்பிக்கை, வர்த்தகம், பாதுகாப்பில் குறைபாடு என, பற்றாக்குறைகள் இன்று அரசிடம் உள்ளன. 10 ஆண்டுகளாக, நாட்டை படுபாதளத்தில் தள்ளியுள்ளது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.

நகரங்களை நோக்கி படையெடுப்பது மக்களின் குற்றமல்ல; வேறுவழியின்றி அவர்கள் செல்கின்றனர்; உயிரை கிராமத்தில் விட்டுவிட்டு, வசதியான வாழ்க்கைக்காக மட்டுமே, நகரங்களுக்கு மக்கள் செல்கின்றனர்; கிராமங்களுக்கு சம அளவு மதிப்பு அளிக்க வேண்டும்; அதுவே எங்களின் லட்சியம்.

தொழில், விவசாயம், தயாரிப்பு துறை என, சம நோக்குடன் பார்த்தால் தான், மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க செய்ய முடியும். அன்னிய நேரடி முதலீடு, மனித வள மேம்பாட்டு துறை உட்பட, பல துறைகளுக்கு தேவைப்படுகிறது.

பல ஆசிரியர்களையும், நர்சுகளையும், இந்தியா உலகத்திற்கு அளித்து வருகிறது. தொழிலதிபர்கள் பணத்தை மட்டுமே தருகின்றனர். ஆனால், ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதன் மூலம், ஒரு தலைமுறையே அவர்களுடன் செல்கிறது. அரசு, வர்த்தகர்கள், மக்கள் என, யாராக இருந்தாலும் நேர்மையாக இருக்க வேண்டும். இது தான், நம்மை முன்னெடுத்து செல்லும் வழியாகும்.

தயாரிப்பு துறையை மேம்படுத்த, புது அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்கும். தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முட்டுக் கட்டையாக உள்ளது; இது மாறவேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை பரவலாக்கவேண்டும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பெண்கள் முக்கியமாக உள்ளதை நாம் உணரவேண்டும். விவசாயம், கைவினை பொருட்கள் உற்பத்தியில் பெண்கள் பங்கு முக்கியமாக உள்ளது. அவர்களுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படும். சரக்கு மற்றும் சேவைவரிக்கு (ஜிஎஸ்டி.) பாஜக., ஆதரவு தெரிவிக்கிறது. ஜிஎஸ்டி., வெற்றிபெறுவது, தகவல் தொழில்நுட்ப அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சியை பொறுத்தமையும்.

பொதுத்துறை மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் செயல்பாடு வெளிப்படையாக இருக்கவேண்டும். இங்கு அரசியலுக்கு இடமளிக்காமல், தொழில்ரீதியாக அனுபவம் பெற்றவர்கள் இடம் பெற வேண்டும்.

எங்கள் தலைமையில், மத்தியில் புதிதாக அமையும் அரசு, முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயல்படும். அன்னிய நேரடி முதலீட்டை உயர்த்துவதை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல், ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்துவோம். இவ்வாறு, மோடி பேசினார்.

Leave a Reply