பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான பங்காரு லட்சுமணன் நேற்று இரவு மரணம்அடைந்தார். 74 வயதான அவர் கடந்த 2000–2001–ம் ஆண்டுகளில் பா.ஜ.க.,வின் அகில இந்திய தலைவராக பதவிவகித்தார். பாஜக.,வின் முதல் தலித் தலைவரும் இவர்தான்.

ஆந்திராவைச் சேர்ந்த இவர் கடந்த சிலநாட்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று இரவு திடீர்மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்தது.

பங்காரு லட்சுமணன் உடல் செகந்திரா பாத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பாரதீய ஜனதா தலைவர்கள் பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று காலை அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராம்பள்ளியில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டது. அங்கு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

இன்று மாலை ஐதராபாத் பஞ்சா குப்தா மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. சிதைக்கு அவரது மகன் சாய் பிரசாத் தீமூட்டுகிறார். இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் எல்கே. அத்வானி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

Leave a Reply