போர்விமான இன்ஜின் வாங்குவதில் நடந்த ரூ.10 ஆயிரம்கோடி ஊழல் வழக்கை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க வேண்டுமென பாஜக கூறியுள்ளது. இந்திய விமானப் படையில் 2007-2011ம் ஆண்டுகளில் போர் விமானத்துக்கு இன்ஜின் வாங்குவதில் ரூ.10 ஆயிரம்கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, சி.பி.ஐ விசாரணைக்கு பாதுகாப்புதுறை அமைச்சர் ஏகே.அந்தோணி உத்தரவிட்டுள்ளார். ஆனால், சிபிஐ விசாரித்தால் இந்தவழக்கு மூடி மறைக்கப்படும் என பாஜக குற்றம் சுமத்தியுள்ளது.

இது குறித்து, பாஜக.,வின் செய்திதொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கர் நேற்று கூறியதாவது:காங்கிரஸ் கட்சியானது எந்த ஒருஊழலையும் முதலில் மறைக்கப்பார்க்கும். பின்னர் ஊழல் நடந்திருப்பதை மறுக்கும். தவிர்க்கமுடியாத பட்சத்தில்தான் விசாரணைக்கே உத்தரவிடும்.

அந்தவகையில், விமான இன்ஜின் ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இந்தவழக்கு நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டுமெனில் அது நீதிமன்ற நேரடிகண்காணிப்பில் நடந்தால் மட்டுமே சாத்தியமாகும். மற்றபடி, சிபிஐ இதனை மூடிமறைக்கவே முயற்சி செய்யும்.எந்த ஊழலும் வெளிச்சத்துக்குவர ஐமு கூட்டணி அரசு விரும்புவதில்லை. இதனால், அவர்கள் ஆட்சியில் இந்தியாவில் நடந்த மிகப் பெரிய ஊழல்கள் அனைத்துமே வெளிநாட்டவர்களின் உதவியினால்தான் தெரியவந்திருக்கிறது. இந்திய ராணுவத்துக்கான ஆயுதங்கள் விற்பதில் முறைகேடு செய்ததாக ஆயுதவியாபாரி சவுத்ரி, அவரது மகன் பானு ஆகியோர் லண்டனில் கைதுசெய்யப்பட்ட பிறகுதான் இந்த ஊழல் விவகாரமே வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply