ஒருபுறம் பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்துகோரி முழு அடைப்பு போராட்டம் நடத்தும் ஐக்கிய ஜனதா தளம், மறுபுறம் அதற்குத்துரோகம் விளைவித்த காங்கிர ஸுடன் கூட்டு சேர முயல்கிறது என மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண்ஜேட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்:

ஜார்க்கண்ட் மாநிலம் பிஹாரிலிருந்து பிரிந்த பிறகு இயற்கை வளங்கள் அனைத்தும் அந்த மாநிலத்துக்கு சென்றுவிட்டன. எனவே, பிஹார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவேண்டும் என பா.ஜ.க கூட்டணி தொடர்ந்து வலியுறுத்திவந்தது.

இந்த பிரச்சினையில் மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் இடையே கருத்தொற்றுமை உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக இந்த கோரிக்கையைப் பரிசீலிப்பதாக ஐக்கிய ஜனதா தளத்திற்கு காங்கிரஸ் தூதுவிட்டுக் கொண்டிருந்தது. கடந்த ஆண்டு பட்ஜெட் டிலும் நிதியமைச்சர் இதுதொடர்பாகப் பரிசீலிப்பதாக உத்தரவாதம் அளித்திருந்தார்.

ஆனால் அது பிஹாரின் பொருளாதாரத் தேவையைவிட, காங்கிரஸின் அரசியல் தேவையாகத்தான் இருந்தது.
இந்த வலையில் ஐக்கிய ஜனதாதளம் எப்படிவிழுந்தது எனத் தெரியவில்லை. ஐக்கிய ஜனதா- பாஜக. உறவு முறிந்த நிலையில்தான் இந்த உத்தரவாதம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் உறவு கிடைத்தபோது, ஐக்கிய ஜனதாவை காங்கிரஸ் கைவிட்டது.

தற்போது, ராஷ்டிரிய ஜனதாதளத்துடனான பேச்சு வார்த்தையில் முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளதால், மீண்டும் காங்கிரஸின் கவனம் ஐக்கிய ஜனதா தளத்தின்  பக்கம் திரும்பியுள்ளது. பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்துக்கு அனுமதி அளிக்காமல் துரோகம் விளைவித்த காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க ஐக்கிய ஜனதா தளம் முனைகிறது. இவ்வாறு ஜேட்லி கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply